

"நீங்க என்ன சொன்னாலும் இனி நான் கேட்க போறதில்ல, மாத்திரை எடுத்துக்க மாட்டேன்" என சற்று கோபத்துடன் தன் கணவன் குகனிடம் கூறினாள் அனுஜா.
"இப்போ வேண்டாம்னா புரிஞ்சிக்கோயேன் அனும்மா" என அவள் கொடி இடையை பற்றிய அவனிடம், "ஏங்க நம்ம ரெண்டு பேர் வீட்லயும் அனுமதி கொடுத்தும் படிப்பு, கேரியர் தான் முக்கியம்னு நம்ம கல்யாணத்தையும் தள்ளிப் போட்டோம்" என்று கூறி முறைத்தாள் அனுஜா.
குகன் அனுஜா இருவரின் திருமணம் லவ் கம் அரேன்ஜ்டு என்ற முறையில் நடந்தது. கல்லூரியில் படிக்கும் போது இருவரிடமும் காதல் நெருப்பு பற்றி கொண்டது. இருவரும் நெருங்கி பழகும் போது தான் தெரிந்தது அவர்களின் தந்தையர் இருவரும் கல்லூரி நண்பர்கள் என்பது. பிறகென்ன இருவரும் தைரியமாக தங்கள் காதலைப் பற்றி வீட்டில் சொல்லவும் இருவரின் படிப்பு முடிந்ததும் திருமணம் நடத்தலாம் என பெற்றோர் முடிவு செய்தனர்.
ஆனால் அனுஜா குகன் இருவருமே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலை கிடைத்ததும் சிறிது காலம் வேலை பார்த்து விட்டு அதன் பின்பு தான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தனர்.
முடிவில் இருவர் வீட்டிலும் பொறுமை இழந்த பெரியவர்கள் அவர்களாகவே ஒரு நாளை பார்த்து அவர்களது ஆறு வருட காதலை திருமணத்தில் முடித்து வைத்தனர்.
குகனை முறைத்த அனுஜாவின் கன்னத்தைச் செல்லமாக கிள்ளியபடி "நம்ம நன்மைக்கு தான் அனும்மா சொல்றேன்" என்றான் குகன் சிரித்தபடி.
"என்ன நன்மை கல்யாணம் ஆனதும் கொஞ்ச நாள் ஜாலியா இருக்கணும்னு சொல்லி தள்ளி தள்ளிப் போட்டு இப்போ நம்ம ரெண்டாவது கல்யாண நாளே வரப்போகுது. வீட்டு பெரியவங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியல" என்று பொரிந்த அனுஜா குகனை நெருங்கி வந்து "என்ன பிரச்சனை உங்களுக்கு, நாம ஏன் குழந்தை பெத்துக்க வேண்டாங்கிறீங்க, இப்போ அழகா ஒல்லியா இருக்கிற நான் பிரசவத்துக்கு அப்புறம் ரொம்ப குண்டாகி ஒரு மாதிரி ஆகிவிடுவேன்னு பயப்படுறீங்களா" என்று பரிவுடன் கேட்டாள்.
"அதுவும் தான்" என்று சிரித்த குகனிடம், "அதுதான் கவலைன்னா நான் நம்ம குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துட்டு சத்தான சரிவிகித ஆகாரமும் முறையான உடற்பயிற்சியும் எடுத்துகிட்டா ஒரே வருஷத்துல திரும்பவும் இப்ப மாதிரி பூங்கொடி ஆகிடுவேன்" என்றாள் அனுஜா தன் கணவனிடம் மையலுடன்.
"என் அழகு பெண்ணே, என் கவலை இதெல்லாம் இல்லை" என்ற குகன் அவளிடம் "அனும்மா உனக்கும் எனக்கும் ஒரு சிக்ஸ் மன்த்ஸ் தான் வயசு வித்தியாசம். லேடிஸ் இருபத்தி ஆறு வயசுல குழந்தை பெத்துக்கலாம் ஆனால் ஜென்ட்ஸ் இருபத்தி ஆறு வயசுக்கே அப்பாவாகி முப்பது வயசுல அந்த பாப்பாவுக்கு ஸ்கூல் அட்மிஷன், டாக்டர் கிட்ட வேக்ஸின் அது இதுன்னு என்னை அங்கிள் மாதிரி அலைய சொல்றியா" என்றான் சற்று வெறுப்பான குரலில்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அனுஜா திகைத்து தான் போனாள். அப்போது இவர்களின் உரையாடலை ஹாலில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த குகனின் பாட்டி லட்சுமி அங்கு வந்தாள். "என்னடா பேராண்டி என் பேத்தியை மிரட்டுற" என்று சிரித்தபடி கேட்டவள் இருவரையும் பார்த்து "உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள் சற்று கண்டிப்புடன். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி லக்ஷ்மியின் முன் வந்து அமர்ந்தனர். "நீங்க பேசிட்டு இருந்ததை நான் கேட்டுட்டு தான் இருந்தேன். குகா நீ ஏன் குழந்தை பெத்துக்க வேண்டாங்கற" என்றவரிடம், "ஐயோ பாட்டி நான் இப்ப வேண்டாம்னு தான் சொன்னேன்" என்றான் குகன் அவசரமாக.
"இங்க பாருப்பா நீங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிற வரைக்கும் தான் உங்களுக்கு உள்ள ஒரு ஆசையும் ஆர்வமும் இருக்கும் அது திருமணமாகி ஒண்ணு அல்லது ரெண்டு வருஷம் தான். அதுக்கப்புறம் உங்களுக்குள்ள ஒரு சின்ன சலிப்பு வரும். அதை வரவிடாமல் உங்கள் வாழ்க்கையை உயிர்ப்போட வைக்க ஒரு குழந்தையால தான் முடியும்.
குழந்தை உன் மனைவியின் வயிற்றில் வளரும் போது நீ அவ மேல காட்டுற அக்கற வீட்டுல பெரியவங்க காண்பிக்கிற பரிவு இதெல்லாம் ஒரு பெண்ணுக்கு அவள் கணவன் மேல் பாசமும் நேசமும் அதிகரிக்கச் செய்யும். அதை விட தாய்மை பெண்களுக்கு ஒரு தவம்.
உங்க குழந்தைகளை நீங்க வளர்க்கும் போது தான் பெற்றோரோட பாசம் அன்பு உங்களுக்கு என்னன்னு தெரிய வரும்" என்று அறிவுரை கூறிய லட்சுமியை இடைமறித்து "பாட்டி நான் ஒண்ணும் குழந்தையே வேண்டாம்னு சொல்லலையே" என்றான் குகன் அலுப்புடன்.
அவனை முறைத்த லட்சுமி "காலத்தே பயிர் செய் என்று ஒரு முதுமொழி நீ கேட்டிருக்கியா. அனு குழந்தை பெற்றுக் கொள்ள இது தான் சரியான வயது. இயற்கையா வரத தடுத்துட்டு, நீங்க வேணுங்கும்போது கேட்டா கிடைக்குமா? எத்தனை பேர் இதுக்காக ஏங்குறாங்க. இது கிடைக்காம டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்காங்க. உங்களுக்கு தெரியாததை ஒண்ணும் நான் புதுசா சொல்ல போறது இல்ல, இந்த காலத்துல இளைஞர்கள் நீங்க பொறுப்பு எடுத்துக்கவே தயங்குறீங்க. அதுல இருந்து விலகி ஓடுறீங்க. அதனால கல்யாணம், குழந்தை எல்லாம் உங்களுக்கு இரண்டாம் பட்சம் தான்.
ஆனா குழந்தைங்க கடவுள் கொடுக்கும் வரம். நம்ம குழந்தைங்க முகத்துல நம்ம வீட்டு பெரியவங்கள பார்க்கிறோம். அவங்க தான் நமக்குள்ள ஒரு பாலமா செயல்படுவாங்க. ஒரு பரம்பரையை வாழையடி வாழையாக மலரச் செய்வதும் நம்ம சந்ததிதான். குழந்தைங்க குளிர் நிழலைப் போன்றவங்க. இதெல்லாம் இப்போ உங்களுக்கு புரியாதுப்பா" என்றவரின் குரல் தழுதழுக்க "பூக்காமல் காய்க்காம மொட்ட மரம் மாதிரி கிடக்கேனே என்னை பார்த்துமா உனக்கு புரியலை குகா" என்றாள் லட்சுமி.
லக்ஷ்மி குகனின் அம்மாவிற்கு பெரியம்மா. தனக்கு குழந்தை இல்லாததால் தன் தங்கை மகளை தன் மகளாக தத்தெடுத்துக் கொண்டார் லட்சுமி. பாட்டியின் வருத்தம் தோய்ந்த குரலை கேட்கவும் குகன் அனுஜா இருவரும் அவர் கைகளை அன்புடன் பற்றி கொண்டனர்.
"எங்களுக்கு கூடிய சீக்கிரம் குழந்தை பிறக்கும். நீ தான் அதை வளர்த்து தரணும்" என்று சிரித்தபடி கூறினான் குகன்.
"கடவுள் அந்த வரத்தை உனக்கு கொடுக்கட்டுண்டா கண்ணா" என்றாள் லட்சுமி மகிழ்ச்சியுடன்.