

ஊருக்கு ஒதுக்குப்புறமான ஏரிக்கரையில் பத்து குடிசை வீடுகள் இருக்கிறது. அதில் ஒரு குடிசை வீட்டு எட்டு வயது சிறுமி மைனா. அப்பா இல்லாத பெண். அவளின் அம்மா கிடைக்கும் வேலை செய்து அவளை செல்லமாக வளர்த்து வருகிறாள்.
அங்கிருக்கும் குடிசைகளின் செல்லப்பிள்ளை மைனா!
சேற்றில் முளைத்த செந்தாமரை அவள்! இலட்சணமானமுகம்; சிவந்த தேகம்; கலைந்த தலை முடியிலும் அழுக்கு உடையிலும் ஒரு குட்டி தேவதையாக இருந்தாள் மைனா.
"மாமா... மாமா.. எழுந்திரு!"அதட்டி எழுப்பினாள் பக்கத்துவீட்டு வேலை வெட்டி இல்லாத குடிகாரன் மாயாண்டியை.
சாணம் பூசிய திண்ணையில் போதையுடன் படுத்திருந்தான்.
மைனாவின் செல்ல அழைப்பிற்கு மெல்லத் திரும்பிப்படுத்தான்.
மீண்டும் அவனை உலுக்கி எழுப்பினாள்.
"சோறு போட்டுக் கொண்டாந்திருக்கேன்... எழுந்திரு!"
மைனாவின் அதட்டலுக்கு எழுந்து உட்கார்ந்தான்.
சட்டையில்லாத உடம்புடன் பரட்டை தலையுடன் இருந்த மாயாண்டி, "ஏன் மைனா என் தூக்கத்தை கெடுத்த?" கோபப்படாமல் கேட்டான்.
"நேத்து சாப்பிடாம படுத்தியாமே… அத்தை நீ எழுந்தா சோறு வைக்க சொல்லிச்சு. நீ என்னடான்னா மதியம் மூனு மணி ஆகுது இன்னும் சாப்பிடல…"
"அத்த காலையிலேயே வேலைக்கு போயிட்டாளா?" சோற்றைப் பிசைந்து வாயில் துருத்துக் கொண்டே கேட்டான்.
"ம்.. உன்னை எழுப்பி பார்த்துட்டு முடியாம கிளம்பி போயிடுச்சு!"
மைனா அவன் அரக்கப்பரக்க சோற்றை விழுங்குவதை பார்த்தாள்.
மாயாண்டி வேலைக்குச் செல்வது கிடையாது. அவன் மனைவி சம்பாதித்துக் கொடுப்பதை வைத்துக்கொண்டு குடிப்பது மட்டுமே அவனுடைய முழு நேர ஜோலி.
பிள்ளை குட்டி இல்லாததால் அவனும் இதுநாள்வரை வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் ஊர் சுற்றி வந்து காசு கிடைக்கும் நேரத்தில் குடித்து எங்காவது விழுந்து கிடப்பான்.
அவன் மனைவி அஞ்சலையும் அன்றாடம் ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று உடல் வலிக்க சம்பாதித்து வருவாள். அவன் குடிப்பதை ஒரு போதும் தடுத்ததில்லை.
அஞ்சலையிடம் ஒரு போதும் குடித்துவிட்டு சண்டையிட மாட்டான். ஏதாவது சண்டையிட்டுக் கொண்டால் குடிக்க காசு தர மாட்டாள் என்பதை நன்கு புரிந்து கொண்டு அக்கம் பக்கம் இருப்பவர்களை திட்டிக் கொண்டு இருப்பான்.
அந்த பகுதியில் இருக்கும் யாருக்கும் அடங்க மாட்டான். மைனாவின் பேச்சுக்கு மட்டும் கட்டுப்படுவான். அது ஏன் என அவனுக்கே தெரியாது.
மைனாவும் அவனிடம் பிரியமாக இருப்பாள். மைனா ஒன்றும் அவனுடைய சொந்த தங்கை மகள் அல்ல. அஞ்சலையுடன் வேலைக்குப் போகும் பக்கத்து குடிசையில் வசிக்கும் இளம் விதவைப் பெண் ராசாத்தியின் மகள்.
மாயாண்டி சாப்பிட்டு விட்டு, பெரிய ஏப்பம் ஒன்றை விட்டான்.
அவனுடைய தட்டை எடுத்துக் கொண்டு புழக்கடைக்குச் சென்று சுத்தமாக கழுவி எடுத்து வந்தாள் மைனா.
மீண்டும் அப்படியே தரையில் படுத்துக் கொண்டான்.
"மாமா! இப்பதானே சாப்பிட்ட… அதுக்குள்ள என்ன தூக்கம்? உனக்கு நீச்சல் தெரியுமா?"
"ம்.. தெரியும். அதுக்கு என்ன இப்ப?"
"எனக்கு நீச்சல் கத்துதரீயா?"அவன் கன்னத்தை செல்லமாக வருடி கேட்டாள்.
"இன்னொரு நாள் போகலாம் மைனா!"
"எழுந்திரு இப்பவே போகலாம்…!"அடம்பிடித்தாள் மைனா.
ஒரு துண்டு ஒன்றை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு, லுங்கியை தொடை தெரியுமாறு மடித்துக் கட்டிக்கொண்டு ஏரியை நோக்கி நடந்தான்.
"மாமா.. ஏரியில் தண்ணீர் சேறா கிடக்குது. இங்க வேணாம்! கிணத்து பக்கமா போலாம்…"
மைனா வற்புறுத்தவே வேண்டா வெறுப்பாய் வயலை நோக்கி நடந்தான்.
வழியில் குடிகார நண்பன் மருது வர மாயாண்டியின் கவனம் சிதறியது.
"ஏலே மாயாண்டி! இங்க என்ன பண்ற?" கையில் சரக்கு பாட்டிலுடன் இருந்த மருது கேட்க, விஷயத்தைச் சொன்னான்.
"ஏன் பாப்பா! இப்ப நீச்சல் கத்துக்கிட்டு நீ என்ன பண்ண போற?" மருது கேட்டான்.
மைனா அவனை முறைத்துப் பார்த்தாள்.
"வா மயண்டி ஒரு ரவுண்டு சாப்பிட்டுட்டு அப்புறம் போவ.." மருதுவின் ஆசைவார்த்தை மாயாண்டியை சுண்டி இழுத்தது.
"இரு புள்ள போகலாம்.." மைனாவை சமாதானப்படுத்தி விட்டு வயலை ஒட்டிய மரத்தடியில் அமர்ந்து ஆளுக்கு பாதியாக குடித்தனர்.
மைனா தட்டாம்பூச்சி பிடித்துக்கொண்டிருந்தாள்.
விதியின் விளையாட்டு ஒருபுறம் ஆரம்பமானது.
போதையின் உச்சத்தை அடைந்த மருது கண்ணில் மைனா கவர்ச்சி பொருளாக தெரிந்தாள்.
"மாயாண்டி!" குரல் கொடுத்தான் மருது. போதை தலைக்கேறியதில் மயங்கி சரிந்திருந்தான் மாயாண்டி.
"ஏய் இங்க வா!" மிரட்டலுடன் அழைத்தான் மருது.
அவன் பெரிய கண்கள் சிவப்பேறி இருந்தது.
மைனாவுக்கு அவனை பார்க்கவே பயமாக இருந்தது. பெரிய மீசை ஒரு புறம் பயமுறுத்தியது.
பயத்துடன் மாயாண்டியின் பக்கத்தில் உட்கார்ந்து, "மாமா எழுந்திரு! மாமா எழுந்திரு!" அவனை உலுக்கிப் பார்த்தாள்.
அவன் போதை தலைக்கேறியதில் முனகியவாறு கண் விழிக்க முடியாமல் திணறினான்.
"ஏய்…!" மைனாவின் கைபிடித்து இழுத்தான் மருது.
கத்தினாள். ஆள் அரவமற்ற பாதையை தாண்டி இருந்ததால் மைனாவின் அலறல் பக்கத்திலேயே இருக்கும் மாயாண்டிக்கு கூட கேட்கவில்லை.
ஆனால் மாயாண்டியின் உள்ளுணர்வு ஏதோ தப்பு நடக்கிறது என மட்டும் எச்சரித்தது. "மருது.. மருது..." என உளறினான்.
மருது மைனாவின் கன்னத்தில் ஒரு அறை விட அவள் மயங்கி சரிந்தாள்.
மைனாவின் அழுக்கு சட்டையை கழட்டினான். அவள் வாயில் திணித்தான்.
மருதுவின் விகாரமான சிரிப்பு அந்த வயல் வெளியை பயமுறுத்தியது.
அந்த பிஞ்சு குழந்தையை தொட எத்தனிக்கும் நேரம் மைனாவின் அம்மா செய்த புண்ணியமோ, மாயாண்டி செய்த புண்ணியமோ தெரியாது… எங்கிருந்தோ வந்த நல்ல பாம்பு ஒன்று மருதுவின் காலில் விஷத்தை இறக்கி விட்டு மெல்ல ஊர்ந்து அருகிலுள்ள பொந்தில் புகுந்து கொண்டது.
ஒரு மணி நேரம் ஓடி இருக்கும் அந்தி சாய்ந்து இருந்தது.
மாயாண்டி மெல்ல கண் திறந்து பார்த்தான்.
இருளத் தொடங்கும் வானம் தெரிந்தது.
பலம் கொண்டு எழுந்து அமர்ந்தான். கண்களைக் கசக்கினான். மெல்ல நினைவு வந்தது.
"அய்யய்யோ... மைனா!" அலறி எழுந்து தேடத் தொடங்கினான்.
தூரத்தில் மைனா மேல் சட்டை இல்லாமல் மயக்கத்தில் படுத்திருந்தாள்.
வேகமாக அவளை அடைந்த பொழுது அங்கு நடந்த விபரீதத்தை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
கண்மூடிப் படுத்திருந்த மைனாவை உலுக்கி எழுப்பினான். அவள் எழுந்திருக்கவில்லை.
மருது பக்கத்தில் வாயில் நுரை தள்ளி மடிந்து போயிருந்தான்.
தண்ணீர் எடுத்து வந்து மைனாவின் முகத்தில் தெளித்தான்.
அவள் வாயிலிருந்து துணியை வெளியில் எடுத்தான்.
மெல்ல உணர்வு வந்தவளாக அசைந்தாள்.
கண் விழித்தவள் மாயாண்டியை பார்த்து எழுந்து கட்டிக்கொண்டாள். மைனாவின் தலையை உச்சி முகர்ந்து, கண்ணீர் விட்டு அழுதான்.
"மன்னிச்சிடு மைனா!" கதறி அழுதான்.
மைனாவிற்கு ஒன்றும் புரியாமல் விழித்தாள். மாயாண்டியின் கண்களை துடைத்துவிட்டாள்.
மேல் சட்டை அணிவித்து மைனாவை அழைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.
எதுவும் வீட்டில் சொல்லக் கூடாது என்று மட்டும் கேட்டுக்கொண்டான்.
மைனாவும் 'சரி' என தலையாட்டினாள்.
மறுநாள்.
"என்னையா இது புதுசா இருக்கு! எனக்கு முன்னவே நீ எழுந்து இருக்க..?"
அஞ்சலையின் வார்த்தையை காதில் வாங்காமல் மாயாண்டி கேட்டான்.
"உன் கூட நானும் வேலைக்கு வரலாம்னு இருக்கேன்.
அப்புறம்… இனிமே குடிக்க போறதில்ல."
என்ற மாயாண்டியின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் சமையல் வேலையை பார்க்கத் தொடங்கினாள்.
அங்கு மைனா வந்தாள்.
மைனாவை இழுத்து அவள் மீது சத்தியம் செய்தான்.
மாயாண்டி எப்படி திருந்தினான்? ஏன் திருந்தினான்? என்று தெரியாமலே அஞ்சலை சமைத்த உணவை டிபன் பாக்ஸில் நிரப்பினாள்.