சிறுகதை: பெண் பிடிச்சிருக்கா..?

பெண்கள் சந்தையில் விற்கப்படும் ஜடப்பொருட்கள் அல்ல; அவர்களுக்கு என்று தனி சுயமரியாதையும், உணர்வுகளும் உண்டு என்பதை இந்த கதை அழகாக உணர்த்தி உள்ளது.
Bride Seeing ceremony
Tamil Short Story | Bride Seeing ceremonyAI Image
Updated on
MM strip
MM strip

சித்ராவைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார், சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிட்ட பிறகு, காபி டம்ளர்களை ஒரு தட்டில் ஏந்திக் கொண்டு வந்தாள் சித்ரா. அழகாக, அடக்கமாக இருந்த அவளை மாதவனின் பெற்றோருக்கு மிகவும் பிடித்து விட்டது. மாதவனோ சுட்டித்தனமாக பேசிக்கொண்டும், சுறுசுறுப்பாக வளைய வந்து கொண்டும் இருந்த சித்ராவின் தங்கை சிந்தனாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"பெண் பிடிச்சிருக்கா..?" என்ற வழக்கமான கேள்விக்கு, சினிமாவிலும், கதைகளிலும் வருகிற மாதிரியே, "எனக்கு பெண்ணோட தங்கை சிந்தனாவை ரொம்ப பிடிச்சிருக்கும்மா..!" என்று அம்மாவிடம் மாதவன் மெல்லச் சொன்னது எல்லாருக்கும் கேட்டு விட்டது. சித்ராவுக்கு அவமானமாகி விட்டது‌ உள்ளறைக்கு ஓடிவிட்டாள்.

அவளது பெற்றோர் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தனர். மாதவனின் பெற்றோரோ தர்ம சங்கடத்தில் நெளிந்தனர். அக்காவிடம் போய் பேசி சமாதானப்படுத்திவிட்டு, கூடத்தின் நடுவில் வந்து நின்றாள் சிந்தனா. ஒன்றும் புரியாமல் மாதவன் உட்பட அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"எல்லாரும் முதல்ல என்னை மன்னிக்கணும். பெரியவங்க இருக்கிற இடத்தில சின்னப் பொண்ணு இவ என்ன சொல்ல போறாள்னு நீங்கள் எல்லாம் பார்வையாலேயே என்னைக் கேட்கிறது எனக்கு புரியுது.. எங்க அக்காவைத்தானே பெண் பார்க்க வந்தீங்க.. அவளை பிடிச்சிருக்கா இல்லையான்னு தானே சொல்லணும்.. மிஸ்டர் மாதவன் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னார். ஆனால் எனக்கு அவரைப் பிடிக்கலையே..! அவர் பக்கத்தில் உட்கார்ந்திருக்காரே அவரோட தம்பி.. அவரைத்தான் எனக்கு பிடிச்சிருக்கு.."

அவள் பேச்சில் இடை புகுந்து தடுத்தாள் அவளுடைய அம்மா சாந்தி. "சிந்தனா என்ன இது.. பெரியவங்க முன்னால இப்படி எல்லாம் நீ பேசக்கூடாது வாயை மூடு..".

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கல்லாய் போன மனிதர்கள்!
Bride Seeing ceremony

"நீ சும்மா இரும்மா.. இதே பெரியவங்க முன்னாடி மிஸ்டர் மாதவன் நாகரீகமா நடந்துகிட்டாரா..? ஆண் பிள்ளைனா எப்படி வேணாலும் பேசலாமா பெண்கள்னா மார்க்கெட்ல விக்கிற சரக்கா, சாமானா.. இது வேண்டாம், அது வேண்டாம்னு செலக்ட் பண்றதுக்கு..! பெண் என்ன ஜடப்பொருளா.. அக்கா மனசு எவ்வளவு நொந்து போய் இருக்குன்னு தெரியுமா..இங்க யாருக்காவது அது புரியணும்ங்கறதுக்குதான் தம்பியை பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.. பணத்தையும், பொருளையும் கொட்டிக் கொடுக்கிற பெண் வீட்டுக்காரங்களுக்குதான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிற உரிமையும் இருக்கணும்.. சமூக அமைப்பு அப்படி இல்லையே.‌.!

மிஸ்டர் மாதவனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பிறந்த வீட்டுக்கு வரும்போது அக்காவை நானும் இவரோடு நிமிர்ந்து பார்க்க முடியுமா..? சொல்லுங்க.."

சிந்தனா பேச்சை முடித்த போது மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் தலை குனிந்தவாறே மௌனமாக எழுந்து நடக்கத் தொடங்கி விட்டார்கள். அவள் பெற்றோரும் அவர்களைத் தடுக்கவில்லை.‌ ஏனென்றால் நியாயம் அவர்களுக்கும் புரிந்து விட்டிருந்தது.

சிந்தனா சித்ராவின் அறைக்குள் சென்றாள்.

logo
Kalki Online
kalkionline.com