
அகிலாவின் ஒரே மகன் விவேக்கிற்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது அவளின் நீண்ட நாள் கனவு. ஆனால் மூன்று ஆண்டுகளாகப் பெண் பார்த்தும் எதுவும் அமையவில்லை. அந்தக் காலத்தில் உறவினர்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டார்கள் அல்லது பெற்றோர் சம்மதித்தால் போதும் என்று மணப்பெண்ணின் முகத்தைக் கூட பார்க்காமல் திருமணம் நடந்தது.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலும் காதல் திருமணங்கள், அல்லது பெற்றோர் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணங்களே நடக்கின்றன.
அன்றைய நாட்களில் மாப்பிள்ளை வீட்டார்தான் நிபந்தனைகள் விதிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பெண் வீட்டாரும், குறிப்பாகப் பெண்களே பல நிபந்தனைகளை விதிக்கிறார்கள். மாப்பிள்ளை லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும், சொந்த வீடு, கார் இருக்க வேண்டும், முக்கியமாக மாமியார், மாமனார் இருக்கக்கூடாது, கணவன் வீட்டு வேலைகளில் பாதி செய்ய வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகள்.
ஜாதகப் பொருத்தம், அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தால் அகிலா பார்த்த அத்தனை வரன்கள் தட்டிப்போயின. ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்று நினைத்தால், ஏதோ ஒரு தடை வந்து அதை முறியடித்துவிடுகிறது. மனம் சோர்ந்து போன அகிலா, வேண்டாத தெய்வங்கள் இல்லை, எந்தக் கோவிலுக்குப் போனாலும் தன் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் வேண்டிக்கொள்வாள். ஆனால் இதுவரை எந்தத் தெய்வமும் கண் திறந்து பார்க்கவில்லை என்றே அவளுக்குத் தோன்றியது.
இது தவிர, வருடம் தவறாமல் வரலட்சுமி நோன்பு கும்பிடுவாள் அகிலா. அருகில் உள்ள பெண்களை அழைத்து சுமங்கலி பூஜை செய்வாள். தேவையான பொருட்களை அகிலாவின் கணவர் சிவராமன் வாங்கி வந்துவிடுவார். இந்த வருடம் தானே சென்று வாங்கலாம் என்று முடிவு செய்த அகிலா, பக்கத்து வீட்டுத் தேவியை அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்றாள்.
வளையல் கடையில் வளையல், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு என்று வாங்கும்போது, அந்தக் கடை உரிமையாளரின் மகள் ரம்யா, வாடிக்கையாளர்களுக்கு வளையல்கள் காண்பித்துக் கொண்டிருந்தாள்.
"அம்மா, என்ன வளைகாப்புக்கா வாங்குறீங்க?" என்று கேட்டாள் ரம்யா.
"இல்லம்மா... எங்க வீட்டில் வரலட்சுமி நோன்பு கும்பிடுவோம், அதற்காகத்தான் இதெல்லாம் வாங்கறேன்" என்று அகிலா சொன்னாள்.
"அப்படியா அம்மா, என்னைப் பெண் பார்த்துட்டுப் போயிருக்காங்க... எனக்கும் சேர்த்து வேண்டிக்குங்கம்மா..."
"சரி, அதுக்கென்ன... உனக்கும் சேர்த்து வேண்டிக்கறேன்...அமைஞ்சிருச்சா?"
"இல்லம்மா... இன்னும் உறுதியாகலை. ஜாதகம் சரியா அமையலன்னு சொல்லியிருக்காங்க. வேற ஒரு ஜோசியர்கிட்ட கேட்டுப் பார்த்துட்டுதான் முடிவு பண்ணுவாங்களாம்."
ரம்யா அழகானவள். அவள் பேச்சில் ஒரு பக்குவம் தெரிந்தது. அந்தக் கடையின் உரிமையாளரின் மகள் என்பதால், அவளுக்கு வசதிக்குக் குறைவில்லை என்பது அகிலாவுக்குப் புரிந்தது.
"சரி, சாமி கும்பிடறப்ப, நீயும் எங்க வீட்டுக்கு வந்திடு. அட்ரஸ் தந்துட்டுப் போறேன்."
"இல்லம்மா. இங்க வேலைகள் இருக்கு. அதுக்கப்புறம் எங்க வீட்டுக்குப் போக நேரமாயிடும். அம்மாவும் அப்பாவும் கவலைப்படுவாங்க. நம்ம அம்மா, அப்பாவைப் பாத்துக்கிறது முக்கியம் இல்லையா? நான் சொல்றது சரிதானே..." என்று ரம்யா சொன்னபோது அகிலாவுக்குப் பெருமிதமாக இருந்தது. ரம்யாவின் குடும்பப் பாங்கு அவளைக் கவர்ந்தது.
"ஆமா, உன் பெயரென்ன?"
"ரம்யா..."
"ரம்யமான பேர்தான். சரி, எல்லாத்துக்கும் பில் போட்டுட்டியா?"”
"போட்டுட்டேன், இந்தாங்கம்மா..."
"சரி, தனியா மஞ்சள் கலர் வளையல் ஒரு டஜன், மஞ்சள், குங்குமம் கொடு."
அதை வாங்கினாள் அகிலா.
"இப்படி என் முன்னால் வா..."
"இந்தா... உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்" என்று வாழ்த்தி அந்த வளையல், மஞ்சள் குங்குமத்தையும் கொடுத்தாள்.
"ரொம்ப சந்தோஷம்மா. இதுவரை இந்த கடைக்கு எத்தனையோ பேர் வந்திருக்காங்க. நான் யார்கிட்டேயும் எதுவும் சொன்னதில்லை. உங்களைப் பார்த்தா அந்தச் சாமியைப் பார்த்ததுமாதிரி தோணிச்சு. அதான் சொன்னேன்..."
கடையை விட்டு வெளியே வந்தார்கள் அகிலாவும் தேவியும்.
"அக்கா, அந்தப் பெண்ணைக் கவனிச்சீங்களா, ரொம்ப நல்ல பொண்ணாத் தோணுது. பாக்குறதுக்கு வசதியா இருந்தாலும், அவள் பேசுன விதத்த பாத்தீங்களாக்கா, குடும்பத்தை நல்லா பாத்துக்குவான்னு தோணுது. உங்க தங்கமான குணத்துக்கு ஏத்தப் பொண்ணுக்கா. விட்டுறாதீங்க. பேசாம, நம்ம தம்பிக்குப் பாத்து முடிச்சிருங்க."
"அப்படியா சொல்ற? என் மனசுலயும் அந்த எண்ணம்தான் ஓடிச்சு. பாக்கலாம் வா."
வரலட்சுமி பூஜை சிறப்பாகவே முடிந்தது.
வீட்டில் ரம்யாவைப் பற்றிப் பேசி ஆலோசனை செய்யப்பட்டது. ரம்யாவின் குடும்பப் பின்னணி, அவளின் பக்குவமான பேச்சு, குடும்பப் பாங்கு ஆகியவை அகிலாவைக் கவர்ந்தன. விவேக், "அம்மா, உன் விருப்பம்" என்று சொல்லிவிட்டான். அம்மா நமக்கு நல்லதுதான் செய்வார்கள் என்று நம்பினான். தாய் சொல்லைத் தட்டாத தவப்புதல்வன்!
அவளுக்கு ஏற்கனவே பார்த்த வரன், ஒரு ஜோசியர் ஜாதகம் பொருந்தவில்லை என்று கூறியதால் முடிவாகவில்லை என்பது ரம்யா மூலம் அகிலா அறிந்ததே. இருந்தாலும் ஒருமுறை உறுதிப்படுத்திக்கொண்டு, முதலில் வளையல் கடைக்குப் போய் பார்த்துவிட்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டது.
திரும்ப, அகிலாவும் தேவியுமே கிளம்பினார்கள் வளையல் கடைக்கு.
"வாங்கம்மா" என்று வரவேற்றாள் ரம்யா.
"எங்களை ஞாபகம் இருக்கிறதா?"
"அது எப்படி ஞாபகம் இல்லாமப் போகும்!"
ரம்யாவின் கைகளைக் கவனித்தாள் அகிலா. இவள் வாங்கிக் கொடுத்த வளையல்களை அணிந்திருந்தாள் ரம்யா.
"இந்தாம்மா, இந்த வளையல்களையும் சேர்த்துப் போட்டுக்கோ. இது வரலட்சுமி நோன்பு கும்பிட்ட வளையல்! நீ வரலைன்னாலும் உனக்காக எடுத்து வச்சிருந்தேன். அப்புறம்! வீட்டில நல்லபடியா விசேஷம் எல்லாம் முடிந்ததா" என்று அகிலா கேட்டதுதான் தாமதம். ரம்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று வழிந்தது.
"என்னம்மா... என்ன ஆச்சு?"
"வேற ஜோசியர்கிட்ட பார்த்தாங்கம்மா. அவரும் ஜாதகம் பொருந்தலைன்னு சொல்லிட்டாரு. அதனால அவங்க முடியாதுன்னு போயிட்டாங்க!"
"பேசாம நீ எங்க வீட்டுக்கு வந்துர்றியா?"
தூக்கி வாரிப்போட்டது ரம்யாவுக்கு.
"என்னம்மா சொல்றீங்க?"
"உள்ளதைத்தான் சொல்றேன். நீ எங்க வீட்டுக்கு மருமகளா வறியான்னு கேட்டேன்."
"நெஜமாவா சொல்றீங்க."
"நெஜமாத்தான் சொல்றேன். நீ எதுக்கும் பயப்பட வேண்டாம். உன்னை என் மகள் மாதிரி பார்த்துக்குவேன். நீ என்ன சொல்ற?"
வெட்கத்தில் நாணித் தலை குனிந்தாள் ரம்யா.
"நான் என்ன சொல்றது? நீங்க எங்க அம்மா, அப்பாட்ட வந்து பேசுங்க!"
அவள் முகத்தில் மகிழ்ச்சி கலந்த வெட்கம் தெரிந்தது.