

பெண் மயூராவிற்கு அடுத்த வாரம் கல்யாணம்...
அம்மா நிர்மலா, கல்யாண வேலைகளில் மும்முரமாக இருந்தாள். வேலை செய்யும் வங்கியில் பதினைந்து நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டாள். ஒரே பெண் ஆதலால் உள்ளூரில் மாப்பிள்ளை தேடியும், கிடைத்தது என்னவோ டில்லியில். நல்ல குடும்பம் பேசிப் பார்த்து மயூராவும் பையனை மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லவே, அடுத்து கல்யாண மண்டபம் மற்றும் கேட்டரிங் எல்லாவற்றையும் முடித்துவிட்டாள்.
எப்போதும் நிர்மலாவிற்கு துணை குமாரிதான். திருமணம் ஆகி வந்ததில் இருந்து வீட்டில் வேலை செய்ய வந்தவள் வீட்டில் ஒரு உறவினர்போல பழகிவிட்டாள். வேலையை முடித்துவிட்டு அப்பாடா என்று சிறிது நேரம் ரூமில் படுக்க சென்ற நிர்மலாவின் மனம் பின்னோக்கிச் சென்றது. பல வருடங்கள் முன்பு நடந்த நினைவுகளை நினைத்தவண்ணம் இருந்தாள்... திருமணம் ஆகி நிர்மலாவிற்கு பத்து ஆண்டுகள் வரை குழந்தை இல்லை. பல டாக்டர்களிடம் செக் செய்தும் பலனில்லை. அப்போதுதான் வீட்டில் வேலை செய்யும் குமாரி கருவுற்று இருந்தாள்.
ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள். ஆண் குழந்தை பிறக்கும் என ஆசைப்பட்டவளுக்கு மறுபடியும் பெண்...
பிறந்த வீட்டில், புகுந்த வீட்டில் எல்லோரும் 'ஏற்கனவே மூன்று குழந்தைகளை வளர்க்கச் சிரமப்படும் உனக்கு நான்காவது தேவையா?' என்று கேட்க அழுது அழுது ஓய்ந்து போனாள் குமாரி.
அன்று பணம் தேவைப்பட, எப்போதும் உதவி செய்யும் நிர்மலாவிடம் வந்து பணத்தை வாங்கிக்கொண்டு "அம்மா... நாலாவது குழந்தை தேவையா... இந்தக் காலத்தில் வளர்க்க முடியுமான்னு திட்டறாங்கமா... பையன் வேணும்னுதான் ஆசைப்பட்டேன்... தப்பு பண்ணிட்டேன்மா... இப்ப பாருங்க மத்தப் பொண்ணுங்க ஸ்கூல் பீஸ்கூட கட்டமுடியல...
நீங்கதான் உதவி செய்றீங்க... இந்தக் குழந்தையும் வச்சுகிட்டு என்னம்மா செய்யப்போறேன்?" என்று அழுதவளைத் தேற்றிவிட்டு, சட்டென்று தன் மனதில் தோன்றியதை குமாரியிடம் கேட்டுவிட்டாள்.
"குமாரி.. உன் குழந்தையை நான் தத்து எடுத்துக்கறேன். உனக்கு சம்மதமா என்று உன் வீட்டில் கேட்டு சொல்" என்றதும் சற்றே யோசித்த குமாரியும் "சரி" என்று சொல்லி வீட்டிலேயும் பேசி, சம்மதம் வாங்கி, முறைப்படி தத்து எடுத்து வளர்ந்த குழந்தைதான் இன்று திருமணத்திற்குத் தயாராக இருக்கும் மயூரா!
ஒரு காலகட்டத்தில் தத்து எடுத்த விஷயம் மயூராவிடம் சொல்லி ஆகிவிட்டது. ஆனால், குமாரியிடமிருந்து என்பதை சொல்லவில்லை. குமாரியும் அது தேவையில்லை என்று சொல்லிவிட்டாள்.
நிர்மலாவிற்கு ‘இத்தனை வருடங்கள் மறைத்த உண்மையை மயூராவிடம் சொல்லாதது தவறோ’ என்று மனதை உறுத்திக்கொண்டு இருந்தது..
"சரி... இதுபற்றி குமாரியிடம் கேட்போம்..." என்று அழைத்தாள்.
தன் மனதில் இருப்பதை குமாரியிடம் கூறியதும், "அம்மா.. வேண்டாம்மா... மயூரா, நிர்மலா அம்மா பொண்ணுதான். அவளை வளர்த்து, படிக்கவச்சு, இன்னிக்கு அவ டாக்டரா இருக்கான்னா... அதுக்கு நீங்கதான் காரணம்... கூடவே இருந்து மயூரா வளர்வதைப் பார்க்கற கொடுப்பினை எனக்கு கிடைத்தது உங்கள் புண்ணியம். சொல்ல வேண்டாம்மா..." என்று குமாரி சொல்ல, "அம்மா வரலாமா?" என்ற மயூராவின் குரல் கேட்டது.
"சரிம்மா.. நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருங்க... நான் போய் துணி காயப் போட்டுட்டு வரேன்" என்ற குமாரியிடம் "அம்மா நில்லுங்க" என்றாள் மயூரா. எப்போதும் ‘குமாரிம்மா’ என்று கூப்பிடுவாள். ‘அம்மா’ என்று அழைக்கவே திடுக்கென்றது நிர்மலாவிற்கும் குமாரிக்கும்.. "நீங்க இரண்டு பேரும் பேசியதைக் கேட்டேன்... குமாரிம்மா என்னைப் பெத்தவங்கன்னு எனக்கு
இப்போதான் தெரிஞ்சாலும் அது ரொம்ப அதிர்ச்சியா இல்லை. ‘ஒரு மாதக் குழந்தையிலிருந்து எனக்கு சாப்பாடு கொடுத்து, தூங்க வைக்கிற வரைக்கும் குமாரிம்மா கூடவே இருந்திருக்காங்க’ன்னு அம்மா சொல்லுவாங்க... அந்த அன்பை அவங்களோட ஒவ்வொரு தொடுதல்லேயும் நான் உணர்ந்திருக்கேன்... அம்மாங்கிற உணர்வு எனக்கு கிடைச்சிருக்கு... ஆனா, காரணம் இப்பதான் புரிஞ்சுது... எனக்கு இது தெரிஞ்சதால நான் குழம்பி நிர்மலா அம்மாவை ஒதுக்கிடுவேன். குமாரி அம்மாகிட்ட கோபப்படுவேன்னு நீங்க பேசினதையும் கேட்டேன்.. கண்டிப்பா அப்படி நான் செய்யமாட்டேன்."
"அம்மா இங்க வாங்க"ன்னு குமாரியை கட்டி அணைத்து "அம்மா... நீங்க என்னிக்குமே எனக்கு குமாரிம்மாதான். உங்க மேல வருத்தம் எதுவும் இல்லை" என்று கூறி, நிர்மலா கையை பிடித்து "அம்மா... தத்து எடுத்த பெண் போலவா என்னை வளர்த்தீங்க. அன்பைக் கொட்டி எவ்வளவு பாசத்தோடு என்னை வளர்த்தீங்க.. உங்க மேல எப்படி கோபம் வரும்? இரண்டு பேரும் அம்மாதான்" என்றதும் குமாரி, மயூராவின் கையைப் பிடித்து, "இது நமக்குள் இருக்கட்டும்மா. வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். உன் வாழ்க்கை நல்லா இருக்கணும். அதுக்குத்தான் சொல்றேன்.. எப்போதும்போல நான் உன்னோட குமாரிம்மாதான். உன்னோட அம்மா இவங்கதான்," என்று நிர்மலாவின் கையை மயூரா கையோடு சேர்த்து கண்ணில் ஆனந்த கண்ணீருடன், "சரி... சரி... அம்மாவும் பொண்ணும் சீக்கிரம் சாப்பிட வாங்க" என்று சமையல் அறைக்குச் சென்றாள் குமாரி.
அன்பான குடும்பம் அமைந்தால் பேரின்பமே...