

"இன்னையோட சரி, இந்த வீட்டை விட்டு வெளிய போய்டு!" என்ற வார்த்தைகளைக் கேட்டு நொந்து நொறுங்கிப்போன வஸ்தலா பாட்டி, கண்ணீர் மல்க, தான் குடியிருக்கும் ஹவுஸ் ஓனரிடம் வந்து அழுதாள்.
"இன்னைக்கே வெளிய போறனுங்கோ…! இந்த வார்த்தைக்கப்புறம் இருக்க எனக்கென்ன தலை எழுத்தா?" அழுது குமுற.. சமாதானப்படுத்தினார் ஹவுஸ் ஓனர் சம்பந்தம்.
"விடுங்கம்மா…! இதெல்லாம் சகஜம்!. இன்னைக்குப் போம்பாங்க! நாளைக்கே மன்னிச்சுக்கோ தப்புப் பண்ணீட்டேன்! மறுபடி வீட்டுக்கு வான்னு சொல்லுவாங்க!" என அமைதிப்படுத்தினார்.
வஸ்தலா பாட்டி அவர் சொல்வதைக் கேட்கற மன நிலையில் இல்லை!
கடைசியில் அவர் சொன்ன அஸ்திரம்தான் பலித்தது. "இப்ப உங்களை வீட்டை விட்டு வெளிய போன்னு சொன்னது யார்? ஏன் சொன்னாங்க?! மருமகளா இருந்து அப்படிச் சொல்லீருந்தா நீங்க கோபப்படறது நியாயம்!. ஆனா, சொன்னது உங்க பொண்ணு!
கோழி மிதிச்சே குஞ்சு முடமாகாதுங்கற போது, குஞ்சு மிதிச்சா கோழி முடமாயிடப் போகுது?!" என்றார். அவங்க குடும்ப விஷயம் ஓரளவு தெரிந்தவர் என்பதாலும், பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் பெரியவர் என்பதாலும்! ஒருமனதாய் வஸ்தலா பாட்டி மறுபடியும் வீட்டுக்குள் போனதும் மகளைக் கூப்பிட்டார்…
"மைதிலி இங்க வா!"
"ஏங்க சார்?" அதென்னம்மா பெத்த அம்மாவை, வீட்டை விட்டு வெளிய போச்சொல்றே..? பாவம்! வயசானக்காலத்துல அது எங்க போகும்?’’ கேட்டார். "ஏன் போகச்சொல்றே..? அது உன் மாமியாரில்லை.. அம்மா! மாமியார் மருமகளுக்குள்ள வேணா சண்டை வரும் அம்மா மகளுக்குள்ளயேவா சண்டை?"
"அது ஒரு பெரிய கதை!" பீடிகை போட்டாள்.
"சொல்லேன் தெரிஞ்சுக்கறேன்!"
"கொஞ்ச முன்னாடி ஒரு குட்டி பையன் வந்தானே... அவன் என் பையன் கூட விளையாட வந்தான். அதுதான் பிரச்சனை!"
"ஏன் உன் பையன் கூட, யாராவது பிரண்ட் வந்து விளையாடினா கெட்டுப் போவான் தன் பேரன்னு பயப்படுதோ உங்கம்மா?"
"இல்லை சார்! அந்தப் பையனோட அம்மா என் பிரண்டு! அவங்களுக்குக் கல்யாணமாகி ஒரே வருஷத்துல இந்தப் பையன் பொறந்ததும், அவங்க புருஷன் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டார்!"
"அய்யோ பாவம்!!".
"பாவம் தானே சார்? அந்தப் பொண்ணை மறுமணம் செஞ்சுக்கச் சொன்னாலும், அது செய்ய மாட்டேங்குது, பெத்த புள்ளய மனசுல வச்சுக்கிட்டு! பையன் பாவம் படிக்கற வயசு! என் பையன் வயசு. என் பையனாட்டம் அதை நான் அன்பு காட்டி, அதுக்கும் சோறூட்டி, திங்கறத என் பிள்ளை அவனோடு பகிர்ந்து திங்கறது எங்கம்மாவுக்கே பிடிக்கலை! எங்கம்மால்லாம் ஒரு பொம்பளையா சார்? வயசு இத்தனையாச்சுல்ல?
என் வீட்டுக் காரர் தான் சோறு சாப்பிடும் போதுகூட, அந்தப் பையன் வந்தா அவனுக்கும் ஒருவாய் ஊட்டிட்டுச் சாப்பிடுவாரு! அவரு மனுஷனா? எங்கம்மா மனுஷியா? சொல்லுங்க சார்?" என்றாள் மைதிலி.
நீண்ட யோசனை…!
சம்பந்தம் சொன்னார், "பிரச்னை என்னன்னு புரியுது! சரி போ! சமாதானமா இரு! அம்மா தானே? பொறுத்துப்போ!" என்று சொல்லி, மைதிலியை அனுப்பி வைத்தவர் மனசுக்குள் ‘பார்த்தால் பசி தீரும்' படப்பாடல் ஒரு தீர்வைச் சொல்லியது!
'உள்ளம் என்பது ஆமை..! அதில் உண்மை என்பது ஊமை..! சொல்லில் வருவது பாதி! நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி' ங்கற மாதிரி.. வஸ்தலா பாட்டிக்கு, வேறு ஒருத்தி பையனை ஆதரவா தன் மகள் பராமதிப்பதில் பாதிப்பில்லை! ஆனால், அந்த பராமரிப்பே தன் மகள் வாழ்க்கைக்கு பாதகமாய்ப் போய்விடக் கூடாதே என்கிற சந்தேகம்! இருக்கும் தானே? மகளை நம்புகிற மனசு.. மருமகனை நம்பணுமே? நம்பலையோ?
ஆனால், ஒரு கணம் அது யோசிக்க மறந்தது ஒரே ஒரு விஷயம்! அந்தப் பொண்ணு மறுமணமே செய்ய மாட்டேன். தன்மகனை ஆளாக்கினாப் போதும்னு நெனைச்ச உறுதியை ஏன் நெனைச்சுப் பார்க்கலையோ…?
உள்ளம் என்பது ஆமை..! அதில் உண்மை என்பது ஊமை!...
யார் நினைப்பில் உண்மை! ஆண்டவனுக்கே வெளிச்சம் இல்லையா?