

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மனிதன் பணத்தை தாண்டி அதிகமாகத்தேடி அலைவது நிம்மதியைத்தான். இது நேரடியாக கண்ணால் காணமுடியாவிட்டாலும் மனதால் அனுபவிக்க கூடிய ஒரு உச்சபட்ச மகிழ்ச்சியின் அளவாகவே பார்க்கப்படுகிறது. எனவே நம்மிடம் இருக்கும் பணம், பொருள் இவையெல்லாம் நாம் வசதியுடன் வாழ்வதற்கு உதவுமே தவிர வாழ்வில் நிம்மதியை அடைவது என்பது நிச்சயம் நம்முடைய நல்ல செயல்களால்தான் முடியும்!
அப்படித்தான், வாழ்க்கையில் ‘நிம்மதியே இல்லை’ என்று புலம்பிக்கொண்டிருந்த ராகவனுக்கு, வெளியில் தேடி அலையும் நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை பெரியவர் ஒருவர் புரியவைத்த கதையை பார்க்கலாம்.
ச்சே ! நிம்மதியே இல்லை !
ராகவனுக்கு பணம், பங்களா, இரண்டு கார், நல்ல குடும்பம் என எல்லாம் இருந்தும், எப்போதும் நிம்மதி இல்லை! இல்லை! என்கிற புலம்பல் மனதிற்குள்.
நிம்மதி, விலை கொடுத்து வாங்கக் கூடிய பொருளா என்ன..? நெருங்கிய நண்பனுடன் பாருக்கு சென்று குடித்தான்.
ஆனாலும், மனசில் நிம்மதி இல்லை. எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? என்று மனதிற்குள் பாடினான். படுத்தால், தூக்கம் வர மறுத்தது.
அன்பு மனைவி ராதிகா வெளிநாட்டிலிருக்கும் மகன் சுரேஷிடம், ராகவன் பற்றிக் கூறினாள். டாடியை நல்ல டாக்டரிடம் கூட்டிச் சென்று செக் பண்ணச் சொன்னான் சுரேஷ்.
அதுவும் பயனின்றிப் போனது. டாக்டர் கொடுத்த மாத்திரைகள் எல்லாம் 'ஜூஜூபி' காட்டின.
ராகவன் படும் பாடு கண்ட ராதிகா, அவனிடம், அடுத்த ஊரிலுள்ள காட்டில், ஆசிரமத்தில் வசிக்கும் பெரியவரைச் சென்று பார்க்கச் சொன்னாள்.
"பெரியவரைப் போய் பாக்கணுமா..? வேற வேலை இல்லை. எனக்கு பைத்தியம் பிடிச்சுருக்குன்னு நெனைச்சியா..?" ராதிகாவிடம் முதலில் கோபப்பட்டாலும், 'காட்டிற்குள் சென்று பெரியவரைப் பார்த்து வரலாம். ஏதாவது பலன் கிடைக்கலாம்' என்று எண்ணி ஒருவரிடமும் சொல்லாமல் காட்டிற்குள் சென்றான் ராகவன். ஆசிரமத்தை அடைந்து, பெரியவரைப் பார்த்து வணங்கிய பிறகு, "ஐயா பெரியவரே! பணம், பதவி, பங்களான்னு எல்லாம் இருந்தும், மனசுல நிம்மதியே இல்லை. படுத்தா தூக்கம் வரவில்லை" என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவர், "தம்பி ! உன் நிலைமை எனக்குப் புரியுது... இப்படி வந்து உட்கார்!" என்றவர் தொடர்ந்து,
"உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது.. தெரிஞ்சா உன் நிம்மதி போயிடும்!" என்றார்.
"அது எப்படிங்க?"
"சொல்றேன்... அதுமட்டுமல்ல.! மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!"
"ஐயா... நீங்க சொல்றது எனக்கு புரியலே!"
"புரியவைக்கிறேன்.... முதலில் நீ எனது ஆசிரமத்தில் இன்று உணவு சாப்பிடு."
அவர் கூறியபடியே ராகவன், வயிறு நிறையச் சாப்பிட்டான்.
பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி,
"இதில் படுத்துக்கொள்" என்றார். படுத்துக் கொண்டான்.
பெரியவர் அவன் பக்கத்தில் உட்கார்ந்து கதை ஒன்று சொல்ல ஆரம்பித்தார்.
"தம்பி ! ஒரு ரயில் புறப்படப் போகிறது... அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான்...
அவன் தலையில் ஒரு மூட்டை. இடம் பிடித்து உட்கார்ந்தான்.
ரயில் புறப்பட்டது. தலையில் சுமந்து வந்த மூட்டையை மட்டும் அவன் கீழே இறக்கி வைக்கவில்லை.
'ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையை தலைல சுமந்துக்கிட்டு உக்காந்திருக்கே? கீழ இறக்கி வையேன்!' எதிரே அமர்ந்திருந்தவர் அவனிடம் கேட்கையில்,
'வேணாங்க! ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்! என் சுமையை நான் சுமந்துக்குவேன்!' என்றான்."
பெரியவர் கதையை முடித்தார்.
படுத்திருந்த ராகவனுக்கு சிரிப்பு வந்தது. சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறே?"
"பைத்தியக்காரனா இருக்கானே... ரயிலை விட்டு கீழ இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா? உக்கார்ந்த போதும், தலைல சுமக்கணுமா..?"
"அது அவனுக்கு தெரியலையே!"
"யார் அவன்?" இயல்பாக கேட்டான்
"நீதான்!"
"பெரியவரே ! என்ன சொல்றீங்க?"
"வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான். பயணம் பூராவும் மனதில் அநாவசிய சுமைகளை சுமந்து கொண்டே போகிறவர்களால் நிம்மதியாக வாழமுடியாது. முக்கியமாகத் தேவைப்படுமெனத் தோன்றும் நல்ல விஷயங்களை மட்டும் மனசில் வைத்துக்கொள். மற்றவைகளை மறந்துவிடு!"
பெரியவர் கூறுகையில்,
ராகவனுக்கு தனது குறைகள் மெல்ல- மெல்ல தெரிய ஆரம்பிக்க, நிம்மதியின்மையின் காரணம் புரிய ஆரம்பித்தது. உண்ட மயக்கத்தில் தூக்கம் வர, நன்றாக தூங்கி விட்டான்.
தூங்கி கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.
"எழுந்திரு" என்றார்.
எழுந்தான்!
"அந்த தலையணையைத் தூக்கு!" என்றார்.
தூக்கிய ராகவன், மறுகணம் "ஆ"வென்று அலறினான். அங்கே ஒரு தேள் படுத்திருந்தது.
"ஐயா! என்ன இது?"
"உன் தலையணைக்கடியில் கொட்டும் தேள். அப்படி இருந்தும் நீ நிம்மதியாக தூங்கி இருக்கிறாய்...!"
"அது! ..அது! எனக்குத் தெரியாது!"
"தேள் தலைக்கடியில் இருந்தது, உன் மனசுக்குத் தெரியாது. அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்! நிம்மதி எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாயா?"
"புரிந்து கொண்டேன்! என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிற நிம்மதியை அறிவின் வெளிச்சத்தால், தேடிக்கண்டு பிடித்து விட்டேன். நன்றி ஐயா!'’.
பெரியவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த ராகவன், நிம்மதியான மனதுடன் வீடு திரும்பினான்.