
தங்கத்தை மிக மிகத் தூய்மையான பொருள்களுடன் ஒப்பிடுவது நமது இந்திய நாகரிகத்தின் மரபு.
அவருக்குத் ‘தங்கமான மனசு’ என்றும், ‘அவள் தங்கம் போல பளபளக்கிறாள்’ என்றும் கூறுவது அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் உவமானங்கள்.
‘தங்கராஜ், தங்கம்’ என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்கத்தின் பெயரைச் சூட்டி மகிழ்வது நமது பண்பாடு.
துக்ளக் ஆசிரியர் திரு குருமூர்த்தி இந்தியாவில் மூன்று லட்சம் டன் தங்கம் இருப்பதாக மதிப்பீடு செய்துள்ளார். (கோவில்கள், அரச குடும்பங்கள், செல்வந்தர்கள், சாமானியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆதார வளங்களையும் சேர்த்துப் பார்த்தால் இது ஒரு நியாயமான மதிப்பீடு தான்!)
உலக ரிஸர்வில் அதிகாரபூர்வமான அறிவிப்பின்படி, இந்தியாவில் 24,000 டன் தங்கம் இருக்கிறது. இது உலகில் உள்ள தங்க ரிஸர்வில் 11 சதவிகிதம் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. உலக கோல்ட் கவுன்ஸில் தரும் தங்க ரிஸர்வ் பற்றிய தகவல் இது:
அமெரிக்காவில் 8,133 டன் தங்கம்
ஜெர்மனியில் 3,362 டன் தங்கம்
இத்தாலியில் 2,451 டன் தங்கம்
பிரான்ஸில் 2,436 டன் தங்கம்
ரஷியாவில் 2,298 டன் தங்கம்.
ஆக இந்த ஐந்து நாடுகளில் உள்ள மொத்த தங்கம் 18,680 டன் தான்! முன்னணி தங்க நாடுகள் ஐந்தை விட அதிகமாக நம்மிடம் தங்கம் இருக்கிறது என்பதை தங்க செயினை அணிந்து மார்பை தட்டிச் சொல்லிக் கொள்ளலாம்.
கடலில் தங்கம் இருப்பதை அனைவரும் அறிவர். ஆனால் அதை சுத்திகரித்து எடுக்கும் செலவு தங்கத்தின் இன்றைய விலையை விடப் பல மடங்கு அதிகம். ஆகவே அது சாத்தியப்படாத ஒரு அறிவியல் விஷயம் தான்.
தங்கத்தைப் பற்றி நமது சாஸ்திரங்களும் ஏராளமான நூல்களும் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளன.
ரஸஜல நிதி என்ற நூலில் இரண்டாவது காண்டம் நான்காவது அத்தியாயத்தில் நவரத்தினங்களைப் பற்றியும் தங்கம், வெள்ளி, ஈயம் உள்ளிட்ட உலோகங்களைப் பற்றியும் நுட்பமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.
ஸ்வர்ணத்தைப் பற்றி விவரித்து விட்டு அதில் உள்ள வகைகளை நூல் விளக்குகிறது. பிறகு அது தரும் பலன்களை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது:
தங்கம் வாழ்க்கைக்கு ஆறுதல் அளிப்பது. தூய்மையானது. ஊட்டச்சத்தைக் கொண்டது. விஷத்தை முறிக்க வல்லது. க்ஷயரோகம், பைத்தியம் உள்ளிட்ட வியாதிகளைப் போக்க வல்லது. நினைவாற்றல், புத்திகூர்மை, தருவதோடு அனைத்தையும் நினவிலிருத்த வல்லது, பசியை ஊட்ட வல்லது. உண்டதை ஜீரணிக்கச் செய்வது என்று இவ்வளவு குணங்களை அது எடுத்துரைக்கிறது.
அதுமட்டுமின்றி உடலில் படும்படி நிச்சயமாக தங்கத்தை அணிய வேண்டும் என்று அது பரிந்துரைக்கிறது. தாலி, மூக்குத்தி, வளையல், தோடு உள்ளிட்ட ஆபரணங்களில் தங்கம் சிறிதேனும் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. மிகுந்த ஏழை என்றாலும் கூட அந்த வீட்டுப் பெண்ணிற்கு குந்துமணி அளவாவது தங்கம் தாலியில் இருக்கும் என்பது கண்கூடு.
இது தவிர சமூக அந்தஸ்து, பொருளாதாரப் பாதுகாப்பு, குடும்பத்தில் மதிப்பு உள்ளிட்டவற்றையும் அளிப்பது தங்கமே.
எல்லாவற்றிற்கும் மேலாக லலிதா சஹஸ்ர நாமத்தில் 638வது நாமமாக அமைவது ஸ்வர்ண கர்பா என்பதாகும். ஸ்வர்ணத்தை அதாவது தங்கத்தை கர்ப்பத்தில் உடையவள் அல்லது ஸ்வர்ணத்தையே கர்ப்பமாக உடையவள் என்பது இதன் பொருளாகும்.
ஆக விலையேற்றம் ஒரு புறம் இருந்தாலும் தங்கத்தின் மதிப்பும் பெருமையும் கீழிறங்காது. அதைக் கீழிறங்க விடாமல் நமது மங்கையர் திலகங்கள் காப்பது உறுதி என்பதே உலகிற்கு நாம் தரும் செய்தி. உறுதியும் கூட!