தையல் கடை முதல் பலகாரம் வரை - இன்றைய தலைமுறை தவறவிடும் பண்டிகை கொண்டாட்டம்!

ஆன்லைன் ஷாப்பிங் கலாச்சாரத்தால் நாம் இழந்த பண்டிகை காலக் காத்திருப்பு, தையல் கடை வரிசை மற்றும் குடும்பக் கொண்டாட்ட நினைவுகளைப் பகிர்கிறது இந்தக் கட்டுரை.
பண்டிகை கொண்டாட்டம் | festival celebration
பண்டிகை கொண்டாட்டம் | festival celebrationImage credit: Gemini AI
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on: 
MM strip
MM strip

பண்டிகைகள் வரிசையாக வந்தாலும் பழைய காலத்து உற்சாகம் இப்போது காணாமல் போய்விட்டதா? ஆன்லைன் ஷாப்பிங் மோகம் மற்றும் உடனடி ஆர்டர்களால் நாம் இழந்துவிட்ட காத்திருத்தலின் சுகம் என்ன? உறவுகளுடன் இணைந்து பழைய குதூகலத்தை மீண்டும் எப்படிப் பெறுவது? இயந்திரத்தனமான நவீன வாழ்க்கையில் தொலைந்துபோன நிஜ மகிழ்ச்சியைத் தேடும் ஒரு சிந்திக்க வைக்கும் கட்டுரை!

வருடா வருடம் பண்டிகைகள் வந்துபோகின்றன. ஆனால், முன்பெல்லாம் ஒரு பண்டிகை வரப்போகிறது என்றாலே நம் மனதிலே இருந்த குதூகலமும் மகிழ்ச்சியும் இப்போது இருக்கிறதா? முன்பெல்லாம் பண்டிகை எப்போது வரும் என்று ஆவலோடு நாம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்போம். ஆனால் இப்போதோ அது வருவதும் தெரியவில்லை.... போவதும் தெரியவில்லை..

அப்போதெல்லாம் நான்கைந்து தெருக்களுக்கு மத்தியில் ஒரு தையல் கடைதான் இருக்கும். ஆகவே தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு இரண்டு மாதம் முன்னதாகவே கடைக்குச் சென்று துணிகளை வாங்கி, அதை தைப்பதற்காக கடைகளில் வரிசையில் நின்று அளவைக் கொடுத்துவிட்டு வருவோம். குறைந்தபட்சம் துணி தைத்து வருவதற்கு ஒரு மாதம் ஆகிவிடும். அதுவரை நாம் காத்துக்கொண்டிருப்போம்.

எப்போது நம்முடைய துணி வரும்? அதை போட்டுப் பார்க்க முடியும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டே இருப்போம். அப்போதெல்லாம் வீடுகளில் அக்கா, தங்கை இருந்தால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான துணியை எடுத்து பாவாடை சட்டையை தைப்பார்கள். அதேபோல அண்ணன், தம்பி இருந்தால் அவர்களுக்கும் ஒரே மாதிரியாக எடுத்து தைப்பார்கள்.. பார்க்கவே ஆனந்தமாக இருக்கும்..

இதையும் படியுங்கள்:
தீபாவளி எண்ணெய் குளியல்... தவறவிட்டால் என்ன ஆகும்? அறிவியலும் சாஸ்திரமும் சொல்லும் ரகசியம்!
பண்டிகை கொண்டாட்டம் | festival celebration

அந்தத் துணியை உடுத்திக் கொள்ளும்போது ஏற்படும் சந்தோஷம் இருக்கிறதே.. அப்பப்பா.. சொல்லி மாளாது இனி அந்த நாள் வருமா?

அதைப்போலவை பண்டிகை வருவதற்கு முன்னதாகவே அரிசியையும் மற்ற பொருட்களையும் வாங்கி கழுவி, உலர்த்தி, காய்ந்த பிறகு அரவை மிஷினில் அரைத்துக்கொண்டு வருவோம். பிறகு வீட்டிலேயே அம்மா, பாட்டி, சித்தி, அத்தை, பெரியம்மா என எல்லோரும் உட்கார்ந்துகொண்டு பலகாரத்தை செய்வார்கள். செய்யும்போதே பாதி காலியும் ஆகிவிடும்..

இப்போது உள்ளதுபோல அப்போது யாரிடமும் பணம் அவ்வளவாக இல்லை. இருந்தாலும் அந்த நாட்களுக்கு ஈடாக இந்த நாள் ஆகுமா?

இன்றைய காலத்தில் என்ன செய்கிறார்கள்? எல்லாம் ஆன்லைனில்... தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாகவே ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். வீட்டிற்கு ரெடியாக வந்துவிடுகிறது.

என்ன பலகாரம் தேவையோ அவற்றையும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் உடனே வந்துவிடுகிறது. காத்திருத்தல் என்கிற வார்த்தைக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. ஒரு பொருளையோ அல்லது ஏதாவது ஒன்றை பெற காத்திருக்கும் அந்த சுகமே தனிதான்.

பண்டிகை கொண்டாட்டம் | festival celebration
பண்டிகை கொண்டாட்டம் | festival celebrationImage credit: Gemini AI

காத்திருந்து கிடைக்கப் பெறும் அவற்றிற்கு மதிப்பும் அதிகமானது. ஆனால், இன்றைய காலத்திலோ காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. ஆகவேதான் பண்டிகை வருவதும் தெரியவில்லை.. போவதும் தெரியவில்லை.. மகிழ்ச்சியும் இல்லை... ஆனந்தமும் இல்லை... ஏதோ வருகிறது... ஏதோ போகிறது.. பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய்விட்டது.

இந்தச் சூழ்நிலையை முழுவதுமாக நம்மால் மாற்ற இயலாது. ஆனால், கூடியவரை இன்றைய தலைமுறையினருக்கு, குறைந்தபட்சம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்குத் துணியை வாங்கி தையல் கடையில் கொடுத்து, தைத்து, பிறகு அதை அணிந்து கொள்ளுமாறு நாம் எடுத்துரைக்கலாம். ஏனென்றால் இந்த ஆன்லைன் வந்த பிறகு காத்திருத்தல் என்கிற வாரத்தைக்கு இடமில்லாமலும் அர்த்தமில்லாமலும் போய்விட்டது. மேலும், தையல் கடை, துணிக் கடை போன்ற சிறு வியாபாரிகளுக்கு அதிக அளவில் நஷ்டமும் ஏற்பட்டுவிட்டது.

நாம் இன்றைய தலைமுறைக்கு இப்படி துணி வாங்கி தைத்துக்கொள்ள வற்புறுத்தினால் அவர்களுக்கும் காத்திருந்து பெறும் சந்தோஷம் கிடைப்பதோடு மட்டுமில்லாமல் இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் சிறு வியாபாரிகளுக்கும் பண உதவி கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? இந்த விஷயத்தை செய்ய மறந்தா பெரிய ஆபத்து!
பண்டிகை கொண்டாட்டம் | festival celebration

அதைப் போலவே பலகாரங்களை ஆன்லைனில் கொடுக்காமல் நம் வீட்டில் பணிபுரிபவர்களின் உதவியோடு செய்து அதற்கான ஊதியத்தை அவர்களுக்குக் கொடுத்தோமேயானால் அவர்களுடைய வீட்டிலும் தீபாவளி களை கட்டும். இந்த மாதிரியான முறையில் பண்டிகையைக் கொண்டாடினால் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் இன்றைய தலைமுறையினரும் கண்டிப்பாக அனுபவிக்கலாம்...

இயந்திரத்தனமான நவீன வாழ்க்கையில் தொலைந்துபோன நிஜ மகிழ்ச்சியையும், உறவுகளுடன் இணைந்து பண்டிகைகளைக் கொண்டாடும் கூட்டுக் குடும்ப உணர்வையும் மீண்டும் மீட்டெடுத்து மனநிறைவான பொழுதை உருவாக்குங்கள்.

logo
Kalki Online
kalkionline.com