ஆண்களும் பெண்களும் அடிப்படையிலேயே வேறுபட்டவர்கள், அவர்கள் படைக்கப்பட்ட விதமே அப்படித்தான்! ஆணும் - பெண்ணும் இரு வேறு கிரக வாசிகள். Men are from Mars and Women are from Venus என்ற சொற்றொடர் ஆண் - பெண் வேறுபாட்டை அருமையாக விளக்கும் சொற்றொடர். இருவரும் இரு வேறு கிரக வாசிகள். சேர்ந்தும், இணைந்தும் வாழ வேண்டியது பிரபஞ்சத்தின் சூத்திரம், சுவாரசியம்!
பெரும்பாலும் ஆண்கள் தங்களது லாஜிக்கள் திங்கிங் அணுகுமுறையால் எமோஷனலாக நடந்துகொள்வதில்லை. பெண்களோ உணர்வு ரீதியாகச் செயல்படுவதால் ஒவ்வொரு செயலிலும் கூறிட்டுப் பிரித்துப் பார்த்து ஆராய்வதில்லை.
அதேபோல ஒரு விஷயத்தைத் தர்க்கரீதியாக அணுகுவது ஆணின் இயல்பு, அதனை உணர்ச்சியின் பால் கொண்டு அணுகுவது பெண்ணின் இயல்பு. இது அடிப்படையிலேயே படைப்பு ரீதியாக ஏற்பட்ட மாறுதல் அல்லது கோளாறு. ஒரு விபத்து ஏற்பட்டு பெண் துடிக்கும் போது அவளை என்ன மருத்துவ உதவி செய்யவேண்டும் எங்கே அழைத்துச் செல்ல வேண்டும் எப்படி வேகமாக செயல்படவேண்டும் என்று தான் ஆண்கள் யோசிப்பார்கள். பெண்களோ நான் அடிப்பட்டு விழுந்து இருக்கும் போதும் ‘அவர் என்னை தொட்டுத் தூக்கவில்லை நான் எப்படித் துடிக்கிறேன் என்று விசாரிக்கவில்லை ஆட்டோ பிடிக்கச் சென்றுவிட்டார்’ என்று புலம்புவார்கள். சினிமா காட்சிகளில் தான் அதீதக் கற்பனை காரணமாக அடிபட்ட பெண்ணை தூக்கி ஏந்திச் செல்லும் ஸ்லோ மோசன் காட்சியும், இளையராஜா இசையும் பின்னணியில் இசைக்கப்படும். பாடல்களும் பின்னணி இசையும் அற்றதே நிதர்சனமான வாழ்க்கை!
காரியத்தைச் செய்யத் தெரிந்த ஆண்களுக்கு அதனைப் பெருமையாகச் சொல்லக்கூடத் தெரிவதில்லை. வெளிப்படுத்தத் தெரியாத ஆண்களை ரசனையற்றவர்களாக, பாசமற்றவர்களாகக் குடும்பமும், சமூகமும் பார்க்கிறது. ‘இப்படி ஒரு ஜடத்தை நம் தலையில் கட்டிவிட்டார்களே’ என்று வாழ்நாள் முழுவதும் புலம்பித் தள்ளுகிறார்கள் மனைவிமார்கள். ‘எனது அப்பா தான் இப்படி, கணவரும் அப்படியே இருக்கிறாரே’ என்கின்ற நினைப்பு பல மனைவிகளுக்கும் இருக்கிறது.
அப்பாவும் கணவரும் ஒரே வகைப் பிராணிகள் தான் என்ற உண்மை உறைப்பதில்லை! ‘அப்பாவோ நான் கேட்டதை எல்லாம் வாங்கி தருவார், இவர் கணக்கு பார்க்கிறார்’ என்கின்ற மனத்தாங்கலுடன் தான் செல்கிறது பல மனைவிகளின் வாழ்க்கை.
ஒரு பொருளைப் பார்த்தவுடன், பெண்களுக்கு அந்தப் பொருளின் அழகும், ஆண்களுக்கு அதன் விலையும் கவனம் பெறுகிறது. இது தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள இயற்கையிலேயே அமைந்த வேறுபாடு. எனவே ஒரே விடயத்தை ஆண்களும் பெண்களும் பார்க்கும் அணுகும் முறையே வெவ்வேறானவை. இந்த மாறுபட்ட மனோநிலைகள் தான் அவர்களை ஈர்க்கவும் செய்கிறது பிரிக்கவும் செய்கிறது.
ஒரு சிறந்த உணவைச் செய்துவிட்டு, கணவன் சாப்பிடும்போது பாராட்ட மாட்டானா என்று ஏங்கியபடி அருகிலிருப்பாள் மனைவி. நன்றாக இருந்தால் இன்னொரு முறையோ அல்லது வழக்கத்திற்கு அதிகமாகவோ சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவான் கணவன். இதுதான் அவள் மனதில் நெருப்பாகப் புதைந்து கொண்டேயிருக்கும், அசந்தர்ப்பமான நேரம் பார்த்து சத்தமாக வெடிக்கும். நன்றாக இருக்கிறது என்று இவனுக்கு வாய் திறந்து சொல்லத்தெரியாது, அதிகம் சாப்பிட்டானே, பிடித்ததால் தானே சாப்பிட்டான் என்று புரிந்து கொள்ளவும் மனைவிக்கு விளங்காது / போதாது. இதனை இரண்டு பேரும் ஈகோவாக பார்ப்பது அதை விடக் கொடுமை.
சிறுசிறு சம்பவங்களையும் நினைவில் தேக்கி வைத்துக் கொண்டு மிகவும் சரியான, ஆண்களுக்குத் தவறான, தருணங்களில் சுட்டி, குத்திக்காட்டுவது பெண்களின் இயல்பு. அவற்றையெல்லாம் ஹார்ட்டிஷ்க்கிலிருந்தே (hard disk) நீக்கி இயங்குவது தான் ஆண்களின் குணாதிசயம். பெண்கள் சொன்னவுடன் தான் சென்ற ஜென்மத்தின் ஞாபகம் போல அவனுக்கு விழிப்பு வரும். அதனை மறந்ததற்கும் சேர்த்து அவன் பழிவாங்கப்படும் தருணமாக அது மாறும்.
பெண்களுக்கு இயல்பாகவே அமைந்த பன்முனை செயல்பாட்டுத் தன்மையால் மல்டி டாஸ்கிங் (multi tasking), ஆண்களுக்கு உள்ள கூர்முனையான ஒரு முக செயல்பாட்டாலும் (focussed tasking) வேறுபாடு மேலும் விரியும். தொலைகாட்சியின் அத்தனை சீரியல் தொடர்களையும் பார்த்தும் தொடர்வாரியாக காட்சிவாரியாக நினைவு கொள்வார்கள் பெண்கள். அந்த நாயகிகள் அணியும் நகைகளையும் உடைகளையும் மனதில் இருத்திக்கொள்ளுவது அஷ்டாங்க சாதனை. இரண்டு சீரியல்களுக்கு நடுவில் சமையலை முடித்து விடுவாள் ஒரு இல்லத்தரசி. ஒரே இடத்தில் அமர்ந்து எட்டு மணிநேரமும் ஒரே IPL ஆட்டத்தை பார்த்துக்கொண்டு இருப்பான் ஆண். மேட்சு பார்த்துக்கொண்டிருக்கும் போது காயை நறுக்கச் சொன்னால் கையை நறுக்கிக்கொள்வான்.
எதனையும் கண்டவுடன் கேட்டவுடன் உடனடியாக உணர்சிகளை வெளிக்காட்ட தெரியாத மக்கு ஆண்களிடம், நொடிக்கொருதரம் பாவனைகள் மாற்றும் பெண்கள் எப்படி இத்தனை நூற்றாண்டுகளாக இணைந்து வாழ்கிறார்கள் என்பது இயற்கையின் விந்தைகளிலேயே மேலானது!
எதனையும் நேரம் எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செய்வதே ஆண்களின் இயல்பு. முடித்து கவிழ்த்துவிடுவது தான் பெண்களின் குணாதிசயம். இந்த முரண்கள் தான் இவர்களை கட்டிப்போடுகிறதோ? ஆண்களுக்கு சூழலை கையாளத்தெரியும். பெண்களுக்கு அவற்றை வசியப்படுத்தத் தெரியும். ஒருவரை பார்த்தவுடன் அவரது அறிவு அந்தஸ்து பார்த்து பழக முயல்வது ஆண்களின் இயல்பு.
அதேவேளையில் பெண்கள் ஒருவரை பார்த்தவுடனும் அவர் எப்படிபட்டவர் என்கிற உள்ளுணர்வின் மூலம் எடை போட்டு விடுவார்கள். ஆண்களுக்குள் இருக்கும் பெண் தன்மையும் பெண்களுக்குள் இருக்கும் ஆண் தன்மையும் சில சமயங்களில் மாற்றி வெளிப்படுவதுண்டு. ஒவ்வொரு நன்மைகுள்ளும் தீமையும் ஒவ்வொரு தீமைக்குள்ளும் இருக்கும் நன்மை போல ஒளிந்து கொண்டு காட்சி தரும் தருணங்கள். அவை பல நூறாண்டுகளாக ஆண்கள் இப்படியும், பெண்கள் அப்படியும் தான் வாழ்ந்து கடந்து வந்திருக்கிறார்கள்.
வாழ்வின் இந்த விந்தையான நிரந்தர, முரணை ஏற்றுக்கொண்டும், கடந்தும் போகத்தெரிந்தால் வாழ்க்கை மிகவும் சுவைக்கும். முரண்களை கண்டு முகம் சுளிக்காமலும், வித்தியாசம் பாராட்டாமலும் கடந்து போவது இடைவெளியை குறைக்கும். இத்தகைய முரண்கள் தான் வாழ்வை தட்டை தன்மையிலிருந்து, நிறமற்ற தன்மையிலிருந்து மேடு பள்ளங்களாய், வண்ணமயமாய் ஆக்குகின்றன. அதனை உணர்ந்து பயணிப்பதும், ரசிப்பதும் வாழ்வின் சுவையைக் கூட்டும்.