
ஒரு நாட்டிய நிகழ்ச்சி என்பது பொதுவாக கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக அமையும். விஷாகா என்ற 16 வயது இளம்பெண் வழங்கிய நாட்டியம் நம் சிந்தனைகளையும் தூண்டிவிடும் விதமாக அமைந்தது.
பரதநாட்டிய நிகழ்ச்சியில் ‘மார்க்கம்’ என்பது புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, கவுத்துவம், சப்தம், வர்ணம், சில பதங்கள், தில்லானா என வடிவமைக்கப்படும். நாட்டிய நாடகங்கள் ஒரு கருவை உள்ளடக்கியதாய், பல நடனக் கலைஞர்கள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சியாக அமையும். ஆனால் தனக்குக் கிடைத்த 1 மணி 15 நிமிடத்திற்குள்ளாக மிக அழகான ஒரு உருப்படிகளைத் தேர்ந்தெடுத்து, மிகத் திறமையாக ஆடி ரசிகர்களைக் கட்டிப்போட்டார் விஷாகா.
நிகழ்ச்சியில் முதலில், முனுசாமி முதலியார் அவர்கள் எழுதிய வரிகளை விருத்தமாக வழங்கி தொடர்ந்து, ‘சீரடியார் பார்க்க சேவடி தூக்கி நின்று ஆடும் சிதம்பரமோ’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் பாடலுக்கு ஆடத் தொடங்கினார் விஷாகா. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வரிகளை எடுத்து நவரசங்களையும் வெளிப்படுத்தினார்.
கம்சனின் அழைப்பின் பேரில் கோகுலத்திலிருந்து மதுராவுக்கு வருகிறான் 16 வயது கிருஷ்ணன். தம் உயிரை மாய்க்க வந்த எதிரியாக ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்திருக்கிறான்: அவனை அழிக்க வேண்டும் என்று நினைத்து மல்யுத்தத்திற்கு ஏற்பாடு செய்கிறான் கம்சன்.
இதைக் களமாக வைத்து சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்யுத்த வீரர்கள், ஒரு சிறுவனை எதிர்த்து போரிட வேண்டி இருப்பதை நினைத்த அவ்வீரர்களின் ‘குரோதம்’, பலம் பொருந்திய வீர வீரர்களை எதிர்த்து 16 வயது இளைஞன் செய்யும் மல்யுத்தத்தை ‘ஆச்சரிய’த்துடன் காணும் மக்கள், ஸ்ரீ கிருஷ்ணனின் அழகால் மயங்கி, காமனின் அம்புகளால் தாக்கப்பட்ட ‘ச்ருங்கார’ உணர்வுடன் இளம்பெண்கள், ஸ்ரீ கிருஷ்ணன் தம் தோழர்களுடன் கோபியர்களை சீண்டிய விளையாட்டுகளை நினைவு கூறுகையில் ‘ஹாஸ்யம்’, தமது முன்வினைப் பயனால் உயிர் துறக்கப் போகும் கம்சனை எண்ணி ‘பய’த்தை வெளிப்படுத்திய அறிஞர்கள், இத்தனை பெரிய வீரர்களை எதிர்த்துப் போரிடும் குழந்தையை எண்ணி ‘காருண்ய’த்தை பொழியும் முதியோர்கள், கம்சனின் ‘வீரம்’, வீரனான கம்சனை எதிர்த்து ஒரு சிறுவனா என்று தங்களது ‘அருவருப்பை’ வெளிப்படுத்திய சில பார்வையாளர்கள், கம்சனை அழிக்க வந்தது பரப் பிரும்மமே என்று மிகவும் ‘சாந்தமாக’ அமர்ந்த முனிகள், என பரதத்தின் முக்கியக் கூறான அபிநயத்தை நவரசங்களின் மூலம் வெளிப்படுத்தினார் விஷாகா.
நாட்டிய நாடகங்களுக்கு தற்காலத்திற்கு தேவையான கருத்துக்களையும் கருவாக எடுத்துக்கொண்டு நிகழ்ச்சிகளை வடிவமைக்கிறார்கள். சவாலாகத் திகழும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு, ஏதோ ஒரு காரணத்திற்காக நன்கு வளர்ந்த மரங்களை நாம் வெட்டித் தள்ளுவதும் முக்கியமான கூறாகத் திகழ்கிறது. மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்குமான உறவு இணக்கமாக இருக்கும் வரை எல்லாம் சுமூகமாக இருக்கும். இல்லையேல், இன்று நாம் எதிர்கொள்ளும் பல சிக்கல்கள் இன்னும் அதிகரிக்கவே செய்யும். இதை மையக் கருவாக வைத்து ‘சூர் தாசரின்’ மிக அழகான ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.
பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர் சூர் தாஸ். ‘கண்களை இழந்த, அவர் கண்ட உண்மையை, கண் பார்வையுடைய நாம் பார்க்க மறுப்பதேன்’ என்று நம்மிடம் ஒரு கேள்வியை எழுப்பினார் விஷாகா. கடும் வெயில் கொட்டும் மழை என எதையும் பொருட்படுத்தாமல், கனிகளை வேண்டி தம்மை கல்லால் அடிப்பவருக்கும் எந்த பேதமும் இல்லாமல் பூ, காய், கனி மற்றும் நிழல் தரும் மரங்கள். ஏன்? கௌதம புத்தருக்கு ஆத்ம ஞானத்தை வழங்கியதே ஒரு போதிமரம் தானே!! பலன் பல தரும் மரங்களை நம் பலம் கொண்டு வெட்டாமல், ஒவ்வொரு முறை மரத்தை தாண்டிச் செல்லும் போதும் அதற்கு ஒரு நன்றியை செலுத்தி விட்டுச் செல்லுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
இதில், ‘திம்மக்கா’ என்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையும் இணைத்தது மிகவும் சுவாரசியமாக இருந்தது. குழந்தைப் பேறு இல்லாதவர் திம்மக்கா. மலடி என்ற அவச் சொல்லால் பலர் அவரைக் காயப்படுத்த, அதற்கு அவர் பதிலாகத் தந்தது, சாலையின் இரு மருங்கிலும் 284 ஆல மரங்களை நட்டு, பராமரித்து, அவை இப்போது மிகப்பெரிய விருட்சங்களாக வளர்ந்து நிழல் தருகின்றன. இதற்கு அவருடைய கணவரும் பேருதவி புரிந்திருக்கிறார்.
மத்திய அரசாங்கம் இவரது இந்த செயலைப் பாராட்டி அவருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு, ‘சுற்றுச்சூழல் கல்விக்கான திம்மக்காவின் மூலங்கள்’, என இவரது பெயரில் செயல்படுகிறது. எப்பேர்ப்பட்ட பெருமை இது?
விஷாகா நிறைவாக வழங்கியது ‘தனஸ்ரீ’ ராகத் தில்லானா. அதிலும் ஒரு புதுமையை சேர்த்திருந்தார். மேடு பள்ளங்கள் நிறைந்த நம் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் புன்னகையுடன் எதிர்கொள்ளும் போது ஒவ்வொரு தருணமும் இனிமையானதாக இருக்கும் என்ற கருத்தின் பின்னணியில் சீரான நயமும் முரண்பாடுகளும் கொண்டு தில்லானாவை வடிவமைத்திருந்தார். இடையே ‘தப்லா’ இசைக்கேற்ப சில நடன அசைவுகளை ‘ஜூகல்பந்தி’ போல் வழங்கி ‘தில்லானா’வை நிறைவு செய்தார்.
பரதநாட்டிய உலகில் புகழ்பெற்ற சிதம்பரம் ஆர் சுரேஷ், Sheejith கிருஷ்ணா மற்றும் பிரகா பெசல் ஆகியோரிடம் பரதம் பயின்றவர் விஷாகா. பரதம் தவிர பேலே (ballet) மற்றும் தற்கால நடன முறைகளைக் கற்று இந்த இளம் வயதிலேயே முதிர்ச்சியை காட்டுகிறார் விஷாகா.