

அமெரிக்காவில் இதுவரை ஒரு பெண் கூட ஜனாதிபதியாக முடியாதது ஏன்? ஆண் ஆதிக்கத்தைத் தாண்டி, தோற்றம் முதல் தொனி வரை பெண்களை எடைபோடும் சமூகத்தின் பார்வையை உடைத்தெறிகிறதா ரோஸலிண்ட் கார்டினலின் ஆய்வு? அரசியல் களத்தில் பெண்களைத் தடுத்து நிறுத்தும் முத்திரைகளும், வெற்றிபெற அவர்கள் கடக்க வேண்டிய சவால்களும் என்னென்ன? தலைமைப் பண்பின் நான்கு முகங்களை அலசும் இந்தச் சிந்தனைமிக்க கட்டுரையை முழுமையாக வாசியுங்கள்!
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது 2026ம் ஆண்டின் அமெரிக்க இடைத்தேர்தல். 100 இடங்கள் உள்ள செனட் சபையில் 51 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது ஜனநாயகக் கட்சி. இது அதிபர் ட்ரம்பிற்கு ஒரு பெரும் சரிவாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலையொட்டி பல சிந்தனைகள் கிளம்புகின்றன.
அமெரிக்காவில் 2026 தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் 4215 பெண்கள் போட்டியிடுகிறார்கள். 271 பெண்கள் ஹவுஸ் ஆஃப் ரெப்ரஸெண்டேடிவ்ஸ் பதவிக்காக; 19 பேர்கள் செனட் இருக்கைகளுக்காக; 131 பேர்கள் மாநிலம் தழுவிய கவர்னர் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளுக்காக, 3794 பேர்கள் மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினர் பதவிக்காக போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் ஒரு கேள்வி எழுகிறது அமெரிக்கர் மனதில்.
ஏன் ஒரு பெண் கூட இதுவரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆக முடியவில்லை.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஆளுமை மிக்க பெண்மணியான இந்திரா காந்தி அனைவரும் மெச்ச பிரதம மந்திரி பதவியை மேற்கொண்டு உலகையே வியக்க வைத்தார்.
ஆனால் ஜனநாயகம் பேசும் அமெரிக்காவில் ஒரு பெண் கூட தலைமைப் பதவிக்கு ஏன் வர முடியவில்லை?!
ஆண் ஆதிக்கம் என்று சுலபமாகச் சொல்லி முடித்து விட முடியாது.
பெண்கள் தேர்தலில் போட்டியிட வரும் போது அவர்கள் அணியும் மேலாடை, மேக் அப், அவர்களின் உடல் எடை, கனம், அழகு அல்லது அழகற்ற தன்மை, குரலின் வளம், தொனி, அவர்கள் கையாளும் சமிக்ஞை மொழி உள்ளிட்டவற்றால் தான் அவர்கள் கணிக்கப்படுகிறார்களா, அவர்களது திறமைக்கும், புத்திசாலித்தனத்திற்கும் கணிப்பில் இடமில்லையா?
இந்தக் கேள்வி அங்கு எழுந்துள்ளது.
பெண்கள் இயற்கையாகவே பேணி வளர்க்கும் பண்பாளர்கள்; ஆண்களோ இயல்பாகவே தலைவர்கள்.
குழந்தைகளுடன் இருக்கும் தாய்மார்கள் தங்கள் வேலையில் அதிகம் கவனம் செலுத்த முடியாது.
சில வேலைகளைப் பெண்களால் செய்யவே முடியாது; ஏனெனில் அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள்.
அதிகாரதோரணையில் வலம் வரும் பெண்கள் – அடங்காபிடாரிகள்; அபாயகரமானவர்கள், நடத்தை கெட்டவர்கள்.
இப்படித்தான் சமுதாயம் பொதுவாக பெண்களை எடை போடுகிறது.
இதைப் பற்றி பல வருடங்களாக ஆய்வு நடத்தியுள்ளார் ஒரு அமெரிக்கப் பெண்மணி. அவர் பெயர் ரோஸலிண்ட் கார்டினல் (Rosalind Cardinal). எப்படி பெண்கள் தலைமைப் பதவிக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை அவர் உற்றுக் கவனித்தார். 2018ம் ஆண்டிலிருந்து பத்தாயிரம் பெண்மணிகள் ‘அவரது பண்பாட்டின் மூலப் படிமத்தின் (archetype) அடிப்படையிலான பெண் தலைவர்கள் தகுதி கணிப்பு’ பயிற்சியில் பங்கெடுத்துள்ளார்கள்.
பெண்கள் நான்கு வகையாக கணிக்கப்படுகிறார்கள் என்பது அவரது முடிவு.
இறையாண்மை அல்லது முடிமன்னர் (Sovereign) மனப்பான்மை:
இவர்க்ள் தன்னம்பிக்கை கொண்டவர்கள், தனது ஆற்றலில் கவனம் செலுத்துபவர்கள், யாருக்கும் பயப்படாத தன்மை உடையவர்கள், செல்வாக்கு கொண்டவர்கள். எளிதில் அனைவரையும் தன் வசப்படுத்துபவர்கள், மற்றவர் மீது அதிக தாக்கம் செலுத்தும் தன்மை உடையவர்கள், கவர்ச்சியுடன் கூடிய காந்த ஈர்ப்பு கொண்டவர்கள், படைப்பாற்றல் தன்மை கொண்டவர்கள், தனது ஆற்றலை அனைவரின் நலனுக்காகவும் பயன்படுத்துபவர்கள் – இவர்கள் முதல் வகை.
சுய மரியாதையுடன் தன் ஆற்றலை நன்கு உணர்ந்தவர்கள் இந்த வகையிலான பெண்மணிகள்.
போர்க்களப் பெண்மணி:
இவர்கள் மிகுந்த ஆசை கொண்டவர்கள். மாற்றத்தை ஏற்படுத்தும் கிரியா ஊக்கிகள், குறிக்கோளின் மீது கண்ணாய் இருப்பவர்கள், தீர்க்கதரிசனப் பார்வை கொண்டவர்கள், உள்ளார்ந்து கவனித்து பிரச்சினைகளைத் தீர்ப்பவர்கள், சவால்களை விருப்பத்துடன் எதிர்கொள்பவர்கள், தன்னைத் தானே ஊக்குவித்து செயல்பட ஆரம்பிப்பவர்கள், உணர்வூக்கம் கொண்டவர்கள், தன் திறமையில் அயராத நம்பிக்கை கொண்டவர்கள் – இவர்கள் இரண்டாவது வகையினர். சவால்களை எதிர்கொண்டு போரிடும் மனப்பான்மையோடு வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் இவர்கள்.
புத்திசாலிப் பெண்மணிகள்:
இவர்கள் அபாரமான நுண்ணறிவு, புத்திசாலித்தனம் கொண்டவர்கள். வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருப்பவர்கள், அனைவருக்கும் வழிகாட்டியாக இருப்பவர்கள், மற்றவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துபவர்கள் இவர்கள்.
தங்கள் அறிவை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் தன்மை கொண்டவர்கள் இவர்கள். மற்றவர்கள் தேவையானதைக் கற்று முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படுபவர்கள் இவர்கள். அனைவரும் இவரது அறிவுக்காகவும் நல்ல தன்மைக்காவும் இவரை நாடி வருவார்கள்.
அடுத்து புதிய குழுவை உருவாக்குபவர்:
இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு சமூகக் குழுவை உருவாக்குபவர். கருணை உள்ளம் கொண்டவர். அழுத்தமான கொள்கைக் கோட்பாடு உடையவர். உறவுகளுக்கும், மக்களுக்கும் மதிப்பு கொடுப்பவர்.
எல்லாவற்றையும் விட குழுவாக முன்னேற அனைத்தும் செய்து பாடுபடுபவர் இவர். அனைவரையும் ஊக்கப்படுத்தி, பாராட்டி ஒரு நல்ல குழுவை உருவாக்குபவர் இவர்.
இந்த நால்வகையினரையும் அறிமுகப்படுத்தும் ரோஸலிண்ட், இவர்களில் எந்த வகையினரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க விருப்பப்படுகிறீர்கள் என்று அமெரிக்கர்களிடம் தன் கேள்வியை முன் வைக்கிறார்.
இது அமெரிக்க மக்களுக்கான கேள்வி மட்டுமல்ல; உலகத்தினர் அனைவருக்குமான பொதுவான கேள்வி.
பெண் தலைவர்களாக யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?
பெண்களுக்கும் ஒரு கேள்வி: இந்த நால்வகையினரில் நீங்கள் எந்த வகையாக உங்களை உருவகப்படுத்த விரும்புகிறீர்கள்? எது பெண்களைத் தலைமை இடத்திற்கு முன்னேற விடாமல் தடுக்கிறது, அதை எப்படி போக்குவது?
நால்வகைப் பெண்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு உலகப் பெண்மணிகள் தங்கள் தங்கள் நாட்டில் முன்னேறலாமே! தலைமை தாங்க வாழ்த்துக்கள்!
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், பெண் தலைமைத்துவம் குறித்த உலகளாவிய பார்வையையும் அரசியல் மாற்றங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.