

இன்றைய நவீன தொழில்நுட்பமும் பரபரப்பான வாழ்க்கை முறையும் நமது இளைய தலைமுறையை இளமையிலேயே முதுமைக்கு தள்ளுகின்றனவா? முதியவர்களின் அனுபவப் பெட்டகத்தில் இருந்து உங்களுக்காக சில பொன்னான வழிகாட்டிகள் இதோ! இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கவும், நிம்மதியான வாழ்க்கையை மீட்டெடுக்கவும் இப்போதே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இளைய தலைமுறைக்கு..
அவர்கள் சந்திக்கும் நடைமுறை பிரச்சனைகள்
அறுபதை வயதை கடந்த முதியவர்கள் 'அனுபவப் பெட்டகங்கள்'. வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவர்கள். அவர்கள் கடந்திருக்கும் முட்களும், மலர்களும் உங்களுக்கு நல்ல வழிகாட்டி.
இன்றைய இளைஞர்கள் உலகம் பரபரப்பான உலகமாகிவிட்டது. விஞ்ஞான வளர்ச்சிக்கு அடிக்கோலும் தொழில்நுட்ப அறிவு எக்கச்சக்கமாக இளைஞர்களிடம். ஆனால் நிம்மதியான தினசரி வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகி விட்டது.
இன்றைய தலைமுறையின் பழக்கவழக்கங்கள் வெகுவாக மாறிவிட்டது. அதனாலேயே இளமையிலேயே ஆரோக்கிய சீர்கேடுக்கு ஆளாகிறார்கள். உடல் உழைப்பு வெகுவாக குறைத்து விட்டது.
"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" அதை மனதில் கொண்டு முறையான உடற்பயிற்சி, சத்துள்ள உணவுப் பழக்கங்கள், முறையான தினசரி வாழ்க்கை இவற்றை மேற்கொண்டாலே ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடல் நன்றாக இருந்தால் மனம் நாம் சொல்வதைக் கேட்கும்.
அதிகாலை எழும் நல்ல பழக்கம் முந்தைய தலைமுறையோடு போய்விட்டது. வாக்கிங், ஜாக்கிங் செய்வதற்கெல்லாம் நேரமில்லை என்று கூறாதீர்கள். காலையில் எழுந்து, ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, நடை பயிற்சி மேற் கொள்ளுங்கள்.
ஹெட்செட் உபயோகப்படுத்துவதை தேவைக்கு என்று குறைத்துக் கொள்ளுங்கள். அதிக டெசிபலில் கேட்கப்படும் சத்தங்களால் காது கேளாத தன்மை முதுமையில் மிக விரைவாகவே கதவை தட்டும்.
தியேட்டரில் அலறும் டால்ஃபி சத்தத்தில் ஆரம்பித்து, வீட்டில் பாட்டு கேட்கிறேன் என்று ஸ்பீக்கரில் மிக அதிகமான ஒலி அளவு (ஹை வால்யூமில்) வைத்து கேட்பது நாளடைவில் காது கேட்கும் திறனை பாதிக்கும்.
கம்ப்யூட்டர் வேலையின் அத்தியாவசியம் தான். வேறு வழியின்றி கம்ப்யூட்டரில் அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறார்கள் இளைய தலைமுறை.. இதனால் என்ன பிரச்சனைகள் வரும் என்பது போகப் போக தான் தெரியும்.
கிராமத்தில் நடக்கும் திருமணத்திற்கு பிறகு நாம் மூன்று மாதங்களிலேயே அந்தப் பெண் கருவுற்ற செய்தியை கேள்விப்படுகிறோம். அதே நகரத்தில் செய்யப்படும் திருமணங்கள் (குழந்தை பேற்றை ஒத்தி போடுவது ஒரு புறம் என்றால்) அந்த கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களால் குழந்தை பேறு தள்ளிப் போவது கண்கூடு.
மடிக்கணனியை நேரடியாக மடியில் வைத்து பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுவது கூட அதனால் தான்.
அதேபோல கண்களில் ஏற்படும் வறட்சி அவ்வப்போது கண்களை கம்ப்யூட்டர் திரையிலிருந்து அகற்றி ஏதாவது ஒரு பச்சை வண்ணத்தையோ ஒரு சீனரிய பார்த்தால் கண்ணுக்கு நல்லது. அது வேலை மும்மரத்தில் நடப்பதில்லை என்று நினைக்கிறேன். அதனால் எளிதாக கண்கள் வறச்சியடைந்து விடுகின்றன.
அதேபோல இரவும் தேவைக்கு அதிகமாக நள்ளிரவு வரை கண் விழித்திருப்பதை தவிர்த்து, முறையான ஆறு மணி நேர தூக்கம் என்பதை மேற்கொண்டால் மறுநாள் விடியலே சுறுசுறுப்பாக இருக்கும். இரவு கண் விழிப்பது, செல்போன், மற்றும் டிவி பார்ப்பது, அவை இரண்டையும் குறைத்தாலே ஆரோக்கியம் மேம்படும்.
அதுபோல வகை வகையான உணவு வகைகளை உண்கிறார்கள். நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவு பழக்க வழக்கமே மிகச் சிறந்தது. அதை பின்பற்றினாலே எந்த ஆரோக்கிய குறைவும் வராது.
நகரெங்கும் பரவி இருக்கும் பிரியாணி, பரோட்டா, மற்ற துரித உணவு கடைகளை எல்லாம் தவிருங்கள். வீட்டில் செய்த உணவை உண்ணுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள் ஆகியவற்றை கூடியவரை தவிர்த்து ப்ரஷ்ஷாக செய்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கும் நல்லது சத்துகளும் சேரும்.
சுகாதாரமற்ற எண்ணையில் பொறித்த உணவு வகைகள், செயற்கை நிறமிகள் மற்றும் வாசனைப் பொருள்கள் சேர்க்கப்பட்ட உணவுகள் எல்லாமே நாளடைவில் நாம் உட்கொள்ளும் நஞ்சு.
இப்பொழுது உள்ள இளைய தலைமுறைக்கு முதுமை சீக்கிரமே வந்துவிடும் போல இருக்கிறது. முதியவர்கள் கூட ஓரளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள். முதியவர்களுக்கு வரும் பிரச்சனைகள் சீக்கிரமே இளையவர்களுக்கு வருகிறது. அதற்குக் காரணம் இப்போது உள்ள வாழ்க்கை முறையே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
டென்ஷன் என்ற வாழ்க்கை மிகவும் அதிகமாக கேள்விப்படும் ஒன்றாகும். அதுவும் சிறு வயது பிள்ளைகள் கூறுவது அவலம். காலையில் எழுந்து தினசரி வேலைகளை முறையாக செய்தால் டென்ஷன் என்ற வார்த்தை வெகுவாக குறைந்து விடும்.
சின்ன சின்ன வேலைகளுக்கு கூட அடுத்தவர்களை எதிர்பாராதீர்கள். உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள். நடக்கக்கூடிய தூரத்திற்கு காரில் செல்லாதீர்கள்.
கடைக்குச் சென்றால் தேவையானதை மட்டும் வாங்குங்கள். கார்டு இருக்கிறது அதில் பணம் இருக்கிறது என்று தேவையற்றவற்றை வாங்கிக் குவிக்காதீர்கள்.
இன்றைய சிக்கனம் நாளை நம் வளமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உறவுகளைப் பேணுங்கள் உணர்வுகளை பகிருங்கள்..
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் குடும்பத்தில் கிடைக்காத எதுவும் வெளியே கிடைக்காது.
இறுதியான முக்கியமான ஒரு அறிவுரை இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, ஒவ்வொரு நாட்டுக்கும் என் ஒரு கலாச்சாரம் இருக்கும். அது அந்த கலாச்சாரம். மேலை நாடுகளைப் பார்த்து அந்த நாடுகளின் கலாச்சாரத்தில் மூழ்கி இளைய தலைமுறை திசை மாறி போவது தனிமனித வாழ்க்கைக்கு சரி, நாட்டின் பண்பாட்டிற்கும் சரி, நல்லதொரு விளைவை தராது.
எனவே இன்னும் கலாச்சாரத்தில் இருந்து வழுவாமல், பண்பாடு பேணி, ஆரோக்கியமாக வாழுங்கள். நாளைய உலகம் உங்கள் கைகளில் இளைஞர்களே!
சீரற்ற பழக்கவழக்கங்களை மாற்றி, உடலையும் மனதையும் ஒருசேர பலப்படுத்தி, நீண்ட ஆயுளுடன் கூடிய ஆற்றல்மிக்க நிம்மதியான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.