உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? பீன்ஸ் நல்ல சாய்ஸ்!

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? பீன்ஸ் நல்ல சாய்ஸ்!

தினசரி நாம் உண்ணும் உணவின் காய்கறி வகைகளில் பீன்ஸை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடலுக்கு அநேக நலன்களைத் தரும். பீன்ஸில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரோட்டீன், கார்போஹைட்ரேட், ஃபோலேட், வைட்டமின் சி, கே, கால்சியம், அயன், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற அநேக சத்துக்களும், ஆன்டி ஆக்சிடண்ட் தன்மையும் உள்ளன.

பீன்ஸ் குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சாப்பிட ஏதுவான காய்கறி இது. இதிலுள்ள புரோட்டீன் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். இதிலுள்ள ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து இதய நாளங்களை வலுப்படுத்தி, இதய நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுத்து இதயத்தைக் காக்கிறது. ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக்கி, ஜீரணக் குறைபாடு, மலச்சிக்கல் போன்றவை வராமல் பாதுகாக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட சிறந்த உணவாக இது திகழ்கிறது. ஏனெனில், இதிலுள்ள கார்போஹைட்ரேட் மெதுவாகக் கரைவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. இதிலுள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோய் உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது. இதிலுள்ள இரும்புச் சத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்த சோகை வராமல் காக்கிறது. மேலும், ஃபோலேட் கருவில் வளரும் சிசுவுக்குத் தேவையான வைட்டமின்களைத் தருகிறது.

பீன்ஸிலுள்ள புரோட்டீன் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதிலுள்ள சிலிக்கான் என்னும் கனிமச்சத்து எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். மேலும், இதிலுள்ள பீட்டா கரோட்டீன், நியோசாந்தைன், வியோலாசாந்தைன் ஆகியவை சரும நலனை மேம்படுத்தி, முதுமையை எதிர்த்துப் போராடுகின்றன.

இத்தகைய ஆரோக்கியம் நிறைந்த காய்கறியான பீன்ஸை எவ்வாறு உண்பது என்பதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. பீன்ஸை சமைக்காமல் உண்ணவே கூடாது. பீன்ஸை அரைகுறையாக வேக வைக்காமல் முழுமையாக வேகவைத்து உணவில் பயன்படுத்துவது அவசியம். பீன்ஸை நன்கு கழுவி, ஃபங்கஸ் ஏதுமில்லாத காய்களையே சமைக்கப் பயன்படுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com