

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள விகிதம் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். இதற்காக மத்திய அரசு ஊதியக் குழுவை அமைத்து அறிக்கை வெளியிடும். தற்போது 8வது ஊதியக் குழு சம்பள விகிதம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பென்ஷன் தொகை எவ்வளவு உயரும் என்ற எதிர்பார்ப்புகளும், யூகங்களும் அதிகரித்துள்ளன.
அவ்வகையில் ரூ.25,000 ஆக இருக்கும் பென்ஷன் தொகை ரூ.87,500 ஆக உயரும் என்ற தகவல் இணையதளங்களில் பரவி வருகிறது. இது உண்மை தானா அலல்து அரசின் நிலைப்பாடு வேறாக இருக்குமா என்பது 8வது ஊதியக் குழு அறிக்கை வெளிவந்த பினனரே தெரிய வரும்.
இருப்பினும் பென்ஷன் தொகை ரூ.87,500 என்பது அரசின் அதிகாரப்பூர்வ முடிவு அல்ல என்பது மட்டும் உண்மை. ரூ.25,000 அடிப்படை பென்ஷன் தொகை ரூ.87,500 ஆக உயரும் எனப் பரவி வரும் தகவல் ஒரு உத்தேசக் கணக்கீடு மட்டுமே.
ரூ.87,500 என்ற கணக்கு எப்படி வந்தது?
சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் பரவி வரும் ஓய்வூதியத் தொகை உயர்வு, 3.5 ஃபிட்மென்ட் ஃபேக்டரை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
ஃபிட்மென்ட் ஃபேக்டர்களைப் பொறுத்து, ரூ.25,000 அடிப்படை பென்ஷன் எவ்வளவு உயரும் என்பதற்கான உத்தேசப் பட்டியல்:
* FF 2.10 - ரூ.52,500
* FF 2.57 - ரூ.64,250
* FF 2.75 - ரூ. 68,750
* FF 3.00 - ரூ.75,000
* FF 3.50 - ரூ. 87,500
அரசு தரப்பில் நடப்பது என்ன?
8வது மத்திய ஊதியக் குழு கடந்த 2025 நவம்பர் 3-ஆம் தேதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டது. தற்சமயம் இந்தக் குழு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் ஆலோசனையை மட்டுமே மேற்கொண்டு வருகிறது.
அறிக்கை தாக்கல் காலக்கெடு:
8வது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் உள்ளது. இதன்படி 2027 மே மாதத்திற்க்குத் தான் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
ஊழியர் சங்கங்களின் கோரிக்கை:
குறைந்தபட்ச அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை ரூ.69,000 ஆகவும், ஃபிட்மென்ட் ஃபேக்டரை 3.833 ஆக உயர்ததவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர குறைந்தபட்ச பென்ஷன் தொகையை ரூ.45,000 ஆக உயர்த்தவும் சில பென்ஷன் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. இவையிரண்டும் கோரிக்கைகள் மட்டுமே; அரசின் இறுதி முடிவுகள் அல்ல. 2027 ஆம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2028 ஆம் ஆண்டு தொடக்கத்திலோ தான் 8வது ஊதியக் குழு அறிக்கையின் பலன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும்.
சமீபத்திய அகவிலைப்படி உயர்வு:
8-வது ஊதியக் குழு அறிக்கை வருவதற்கு முன்பாக, வழக்கமான நடைமுறைப் படி, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 60%-லிருந்து 63% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து, மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே சரியான பென்ஷன், சமபள உயர்வு மற்றும் அமல்படுத்தப்படும் தேதி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.