

அபா கார்டு இந்தியாவின் சுகாதார அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதையும், குடிமக்களின் மருத்துவத் தகவல்களை பாதுகாப்பான முறையில் சேமிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நமக்கோ, குடும்பத்தினருக்கோ திடீரென்று உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால் மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவோம். அப்போது அவர் மருந்து சீட்டில் எழுதி கொடுக்கும் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு குணமடைவோம். நோயின் தாக்கம் குறையாதபட்சத்தில் மீண்டும் மருத்துவரை நாடுவோம். அப்போது ஏற்கனவே மருத்துவர் எழுதி கொடுத்த மருந்துசீட்டை பத்திரப்படுத்தி வைத்து எடுத்துசென்றால் அவர் மருந்தின் தன்மையை ஆராய்ந்து மாற்று மருந்தையோ, அதே மருந்தையோ பரிந்துரைப்பார். அந்த மருத்துவ சீட்டு தொலைந்து விட்டால் என்ன மாதிரியான சிகிச்சை இதற்கு முன்பு அளிக்கப்பட்டது என்பதை மருத்துவர் அறிந்து கொள்வதற்கு சிரமமாகிவிடும்.
இதுவே நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளானவர்களாக இருந்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவரிடமோ, அதே மருத்துவரிடமோ தொடர்ந்து கிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் எழுதி கொடுத்த மருந்து சீட்டுகள், மருத்துவ பரிசோதனை ஆவணங்களை பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நோயின் தன்மையை அறிந்து கொள்வது மருத்துவர்களுக்கு சிரமமாகிவிடும். மீண்டும் தேவையற்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படும்.
இதற்கு தீர்வு காணும் முனைப்பில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் சுகாதார புரட்சியின் ஒரு அங்கம் தான் அபா அட்டை. (ABHA- Ayushman Bharat Health Card) 2021-ல் தொடக்கப்பட்ட ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் (ஏ.டி.பி.எம்) இந்த அட்டையை வழங்குகிறது.
மருத்துவ பதிவுகளை காகித வடிவில் சுமந்து செல்லும் சிரமத்தை குறைத்து பாதுகாப்பான டிஜிட்டல் முறையில் சேமிக்க இது வழிவகுக்கும். சிறந்த மருத்துவ சிகிச்சைகளை தடையின்று பெற, இந்த டிஜிட்டல் அடையாள அட்டை உதவும்.
ஆரோக்கியத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்று தான் ‘அபா’ அட்டை. இதன் விரிவாக்கம் ‘ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு’ என்பதாகும்.
அபா கார்டு என்பது டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்டு ஆகும். இது உங்கள் உடல்நலம் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேமிக்க உதவும். இந்த கார்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட 14 இலக்க தனிப்பட்ட எண் ஒதுக்கப்படும். அதாவது ஆதார் கார்டைப் போலவே அனைவருக்கும் தனியாக ஒரு அபா கார்டு இருக்கும்.
தேசிய சுகாதார ஆணையத்தால் (என்.எச்.ஏ) நிர்வகிக்கப்படும் இந்த கணக்கு, ஒரு ‘டிஜிட்டல் லாக்கர்’ போல செயல்படும். நோயாளிகளின் மருத்துவ வரலாற்றை பாதுகாப்பாகவும் எளிதாகவும் அணுகுவதற்கும், பழைய மருத்துவ கோப்புகளை தேடி அலைவதற்கு பதிலாக உங்கள் மருத்துவச்சீட்டுகள் மற்றும் முழு மருத்துவ விவரங்களையும் இந்த ஐடி மூலம் ஆன்லைனில் பாதுகாப்பாக பதிவேற்றி வைத்துக்கொள்ளலாம்.
அபா கார்டில் QR குறியீடு இருக்கும். அதை ஸ்கேன் செய்யும் போது மருத்துவர் உங்கள் முழுமையான மருத்துவ வரலாற்றைப் பார்க்க முடியும். இதற்கு, நோயாளிக்கு ஐடி மற்றும் பாஸ்வேர்ட் தேவைப்படும்.
அது அபா கார்டு வைத்திருப்பவரிடம் மட்டுமே இருக்கும். இந்த வசதியின் மூலம் வேறு ஆவணங்கள் எதுவும் இல்லாமல், நோயாளியின் மருத்துவத் தகவல்களை மருத்துவர் உடனடியாகப் பெறுவார்.
அபா அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அபா கார்டை வாங்க முடியும். அதற்கு நீங்கள் அருகிலுள்ள சுகாதார மையம் அல்லது அரசு மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளலாம். ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் பதிவு செய்யலாம்.
* www.abdm.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அதில் ‘Create ABHA Number’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.
* உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளீடு செய்து உறுதிப்படுத்தவும்.
* உங்களுக்கென உரு பிரத்யேக அடையாள பெயரை (உதாரணமா- பெயர்@abdm) உருவாக்கி கொள்ளவும்.
* இப்போது உங்கள் ‘அபா’ அடையாள அட்டை தயாராகி விடும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* ‘ஆரோக்கிய சேது’ அல்லது ‘ஏகா கேர்’ போன்ற அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மூலம் உங்கள் பரிசோதனை அறிக்கைகள், மருத்துவ சீட்டுகள் மற்றும் மருத்துவமனை ஆவணங்களை இந்த அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.
இது உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படுவதால் உங்களுக்கென தனித்துவமான டிஜிட்டல் சுகாதார அடையாளத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள், மருத்துவர்களின் மருந்து சீட்டுகள், ரத்த பரிசோதனை முடிவுகள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ்கள் போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக சேமிக்கலாம். உங்கள் தகவல்கள் அனைத்தும் அதிநவீன முறையிலான (என்க்ரிப்ஷன்) பாதுகாப்பில் இருப்பதால் உங்கள் அனுமதியின்றி மற்றவர்கள் யாரும் பார்க்க முடியாது.
இது காப்பீடு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் மருத்துவ செலவுகளுக்கான தொகையை பெறுவதையும் ஆவண சரிபார்ப்பையும் மிக வேகமாகவும் எளிதாகவும் மாற்றும்.
அபா கார்டு இந்தியாவின் சுகாதார அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதையும், குடிமக்களின் மருத்துவத் தகவல்களை பாதுகாப்பான முறையில் சேமிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆயுஷ்மான் கார்டு போன்ற இலவச சிகிச்சை அளிக்கவில்லை என்றாலும், மருத்துவப் பதிவுகளை பராமரிக்கவும், மருத்துவர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளவும் இது பயன்படுகிறது.