காலியாகும் அதிமுக கூடாரம்: 25,000 ஆதரவாளர்களுடன் தவெகவில் இணையும் 2 முன்னாள் அமைச்சர்கள்..!

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணையவுள்ளனர்.
Vijay and ex minister
Vijay vijayabaskars
Updated on

அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, இன்று (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளனர்.

தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்பிற்குப் பஞ்சம் இல்லாத ஒன்று. ஆனால், சமீபகாலமாக அரங்கேறி வரும் நிகழ்வுகள் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அதிமுகவை சேர்ந்த ஐந்து முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் (எம். எல். ஏ-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே ஒரு தொகுதி ( திருச்சி கிழக்கு) காலியாக இருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தத் திடீர் மாற்றங்கள் மாநில அரசியலில் புதிய விவாதங்களையும், இடைத்தேர்தலுக்கான எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

சுமார் 60 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட திமுக மற்றும் அதிமுகவுக்கு பதிலாக தவெக என்னும் புதிய கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதுடன் கடந்த மே 10-ம்தேதி முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அதுவும் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

இதில் திமுகவை பொறுத்தவரை அந்த கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதலில் வெளியேறி தவெகவிற்கு ஆதரவு அளித்தது. அதனை தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளன. சமீபத்தில் மதிமுக திமுக கூட்டணியில் இருந்து விலகியது.

தமிழகத்தில் மற்றொரு பிரதான கட்சியான அதிமுகவில் தேர்தல் தோல்விக்கு பின்னர் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து செயல்பட்டனர்.

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவளித்தவர்களின் கட்சிப்பதவிகளை பறித்து கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்தது.

அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர்.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்த நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவரிடம் பழனிசாமி தரப்பு சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் 16-ம்தேதி முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து விலகினார்.

அடுத்த அதிர்ச்சியாக கரூர் எம்எல்ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜூன் 29-ம்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த பரபரப்பு அடங்கும் முன், அவர் மறுநாள் (ஜூன் 30-ம்தேதி) அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

இதையும் படியுங்கள்:
அதிமுகவில் மெகா ட்விஸ்ட்: டார்கெட் விஜயபாஸ்கர்.. ஆனால் விக்கெட்டானது பெஞ்சமின்!
Vijay and ex minister

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) தவெகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜூன் 2-ம்தேதி முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருச்சி வளர்மதி உள்ளிட்ட 25 ஆயிரம் பேருடன் தவெகவில் இணைய உள்ளதாக சி.விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக தவெகவில் இணைகிறேன். தவெகவில் என்னை இணைத்துக்கொண்டு என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருக்கிறேன்’ என்றார்.

இந்த மாபெரும் இணைப்பு விழா இன்று காலை காலை 9 மணிக்கு மகாபலிபுரத்தில் உள்ள 'Four Points by Sheraton' நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. விஜய் முன்னிலையில் நடைபெறும் இந்த பிரம்மாண்டமான இணைப்பு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்களது ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேருடன் தவெகவில் சேர உள்ளனர். ஸ்ரீரங்கம் முன்னாள் அமைச்சர் வளர்மதியும் இன்று இணைகிறார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் நேற்றே சென்னைக்கு வந்துவிட்டனர். அவர்கள் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
அதிமுகவுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி! எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா..!
Vijay and ex minister

அதிமுகவில் முக்கிய புள்ளிகளாக இருந்த இந்த இரு தலைவர்களும் தவெகவில் இணைவது கட்சியின் பலத்தை மத்திய தமிழ்நாட்டில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் முக்கியத் தலைவர்கள் ஆளும் தவெகவில் இணைவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விஜயபாஸ்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 41 ஆகக் குறைந்துள்ளது. அதிமுகவில் தற்போது வரை 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் மேலும் பல எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலேயே இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களும் விரைவில் அவர்களும் அதிமுகவில் இருந்து விலகி தவெக அல்லது திமுகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, விரைவில் இந்த ஆறு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்த இடைத்தேர்தல் தற்போதைய ஆளும் அரசுக்கு ஒரு பலப்பரீட்சையாக அமையும். அதே வேளையில், தங்களது பலத்தை நிரூபிக்க எதிர்க்கட்சிகளுக்கும் இது ஒரு நல்வாய்ப்பாகும்.

இதையும் படியுங்கள்:
அதிமுகவிலிருந்து தவெகவிற்கு தாவும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் - முழு விவரம்
Vijay and ex minister

அதேசமயம் இந்த ஆறு தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

logo
Kalki Online
kalkionline.com