

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்தலில் வென்ற 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக-வில் இணைந்தனர்.
மக்கள் அளித்த தீர்ப்புக்கு மரியாதை கொடுக்காமல், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சியில் இணைவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மீதான இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடியான தீர்ப்பை வெளியிட்டார். இதன்படி இதுகுறித்த சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றம் அல்லது சட்டன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். ஆகையால் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றது இலலை என வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிடலாம் என்பது தெளிவாகியுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் தவெகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதிமுகவில் இருந்து தவெக-வில் இணைந்தவர்கள்:
1. மரகதம் குமரவேல் - மதுராந்தகம் தொகுதி
2. சத்தியபாமா - தாராபுரம் தொகுதி
3. ஜெயக்குமார் - பெருந்துறை தொகுதி
4. இசக்கி சுப்பையா - அம்பாசமுத்திரம் தொகுதி
5. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கரூர் தொகுதி
6. சி.விஜயபாஸ்கர் - விராலிமலை தொகுதி
மேற்கண்ட 6 தொகுதிகளுடன், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் தற்போது காலியாக இருக்கிறது. இந்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
மற்ற 5 தொகுதிகளிலும் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தல் நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற 2 எம்எல்ஏக்கள் தான், தவெக சார்பில் போட்டியிடுகின்றனர்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரிடம் தேர்தல் செலவை வசூலிப்பதில் சட்டத் திருத்தம் தேவை எனவும், மேலும் அவர் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக வெற்றி பெறக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ.சண்முகம் நேற்று தெரிவித்தார். தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, தவெக வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் கேள்வியெழுப்பினர். இதனால் தவெக இந்தத் தேர்தலில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.