

சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் பண வீக்கத்தின் காரணமாக உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமையல் எண்ணெய் மற்றும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தது. வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இந்நிலையில் சமையல் எண்ணெயின் விலையைக் கட்டுப்படுத்த அடிப்படை இறக்குமதி சுங்க வரியை அதிரடியாக குறைத்துள்ளது மத்திய அரசு. இதன்படி சூரியகாந்தி, பாமாயில் மற்றும் சோயாபீன் உள்ளிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரிக் குறைப்பு இன்று (செப்டம்பர் 24) முதல் அமலுக்கு வருகிறது.
இறக்குமதி வரி குறைப்பு:
* சுத்திகரிக்கப்படாத சூரிய காந்தி எண்ணெயின் அடிப்படை இறக்குமதி வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இதன்படி 10 சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரி தற்போது பூஜ்ஜியமாகி இருக்கிறது.
* சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெயின் அடிப்படை இறக்குமதி வரி 10% குறைக்கப்பட்டு, 32.5 சதவிகிதத்தில் இருந்து 22.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* சுத்திகரிக்கப்படாத பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி சுங்க வரி 5% குறைக்கப்பட்டு, 10 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி சுங்க வரி 5% குறைக்கப்பட்டு, 32.5 சதவிகிதத்தில் இருந்து 27.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரிக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் விரைவில் சமையல் எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறையுமா?
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட நிலையில், இந்த வரிக் குறைப்பு நுக்ரவோருக்கு கிடைக்குமா என்பது இனி தான் தெரிய வரும். ஏனெனில் சர்வதேச சந்தை நிலவரங்கள், ரூபாய் மதிப்பு மற்றும் பண வீக்கத்தின் அடிப்படையில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் மூலம், சமையல் எண்ணெய் இறக்குமதி செலவுகள் கணிசமாக கட்டுப்படுத்தப்படும். இருப்பினும் இதன் தாக்கத்தால் விலை குறைந்து, அதன் பலன் பொதுமக்களுக்கு சென்றடையுமா என்பதை சந்தை நிலவரங்கள் தான் முடிவு செய்யும்
பொதுவாக ஒரு பொருளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், சந்தையில் அதன் விலை குறையும். அவ்வகையில் சமையல் எண்ணெயின் விலையும் குறைய அதிக வாய்ப்புள்ளது. சமையல் எண்ணெயின் விலை குறைந்து, கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டால், அடுத்த சில நாட்கள் அல்லது மாதங்களில் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கனவே பல பொருட்களின் மீது இதே மாதிரியான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது.
குறிப்பாக தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்தபோது, பட்ஜெட் தாக்கலின் போது இறக்குமதி வரியைக் குறைத்தது மத்திய அரசு. இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் சுமார் 10,000 ரூபாய் வரை சரிந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது.
ஆகையால் சமையல் எண்ணெய் மீதான தற்போதைய வரிக் குறைப்பும் தற்காலிகமானது தான்.