

இந்தியாவில் 1970 – 80களில் பிரபலமான, ‘கோல்ட் ஸ்பாட்’ குளிர்பானத்தை, ‘கோகோ கோலா’ நிறுவனம் 26 ஆண்டுகளுக்கு பின் அடுத்த வாரம் முதல் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
90ஸ் கிட்ஸ்களின் (90s Kids) ஃபேவரைட் என்பது ஒரு தனி உலகம்! ஸ்மார்ட்போன் மற்றும் இணையம் இல்லாத அந்தக் காலத்தில், சின்னச் சின்ன விஷயங்களிலும் பெரிய மகிழ்ச்சியைக் கண்டவர்கள் 90ஸ் கிட்ஸ்.
அந்த வகையில், சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, 90-களின் பிரபல ஆரஞ்சு சுவை குளிர்பானமான ‘கோல்ட் ஸ்பாட்’ (Gold Spot) இந்தியச் சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பது 90ஸ் கிட்ஸ் இடையே சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோகோ கோலா (Coca-Cola) நிறுவனம் இந்த மறுவெளியீட்டை அடுத்த வாரம் முதல் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த முக்கியத் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
கோகோ கோலா நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான 'ஃபேண்டா' (Fanta) விற்பனையைப் பாதிக்காத வகையிலும், நுகர்வோரின் உடல்நலன் சார்ந்த விருப்பங்களுக்கு ஏற்பவும், கோல்ட் ஸ்பாட் குறைந்த சர்க்கரை (Low-sugar) மற்றும் சர்க்கரை இல்லாத (No-sugar) வகைகளில் ‘கோல்டு ஸ்பாட்’ குளிர்பானத்தை மீண்டும் அறிமுகம் செய்ய, ‘கோகோ கோலா’ நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சர்க்கரை இல்லாத பானங்களுக்கான தேவை உயர்ந்து வருவதால் இந்த இரு வகைகளை அறிமுகப்படுத்துகின்றனர்.
அதாவது, குளிர்பானங்கள், பாட்டில் தண்ணீர், பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள், விளையாட்டு பானங்கள் மற்றும் உடனடியாக அருந்தக்கூடிய தேநீர், காபி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் ஆல்கஹால் இல்லாத, உடனடியாக அருந்தக்கூடிய (NARTD) குளிர்பானத் துறை, சமீபத்திய ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 'கேம்பா' மூலம் குளிர்பான சந்தையில் தீவிரமாக விரிவடைந்து வருவதைத் தொடர்ந்து, இத்துறையில் போட்டியும் தீவிரமடைந்து வருகிறது.
2023-ல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, கேம்பா நிறுவனம் போட்டித்தன்மை வாய்ந்த விலை நிர்ணயம், குறைந்த விலையிலான பேக் அளவுகள், கவர்ச்சிகரமான வர்த்தக லாப வரம்புகள் மற்றும் விரிவடைந்து வரும் விநியோக வலையமைப்பு ஆகியவற்றின் மூலம், கோகோ கோலா மற்றும் பெப்சிகோ போன்ற நிலைபெற்ற நிறுவனங்களுக்குச் சவால் விடுத்து வருகிறது.
இந்த தொழில்போட்டியை சமாளிக்கும் வகையில் 90-களின் பிரபலமான ‘கோல்ட் ஸ்பாட்’ குளிர்பானத்தை, ‘கோகோ கோலா’ நிறுவனம் 26 ஆண்டுகளுக்கு மீண்டும் களத்தில் இறக்க முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக கேன்களில் (Cans) அடைக்கப்பட்டு, வணிகத் தளங்களான (Quick-commerce) Blinkit, Swiggy Instamart, Zepto, Flipkart Minutes மற்றும் Amazon Now ஆகியவற்றில் மூலமாக மட்டுமே விற்பனைக்குக் கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக, பிரீமியம் தரத்திலான கேன்களில் (Cans) மட்டுமே இது விற்பனை செய்யப்பட உள்ளது.
90-களின் நினைவுகளைத் தூண்டும் வகையில், இதன் புகழ்பெற்ற பழைய விளம்பர வாசகமான "தி ஜிங் திங்" (The Zing Thing) மீண்டும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் கோல்ட் ஸ்பாட் கேன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதனால், அவர் இதன் விளம்பரத் தூதராக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோல்ட் ஸ்பாட் கடந்து வந்த பாதை :
பார்லே (Parle) நிறுவனத்தால் 1971-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 'கோல்ட் ஸ்பாட்' (Gold Spot), 1980 மற்றும் 90-களில் பிரபலமான ஆரஞ்சு சுவை கொண்ட குளிர்பானங்களில் ஒன்றாகத் திகழ்ந்ததுடன், குழந்தைகளிடையேயும், இளைஞர்களிடையேயும், பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.
1993-ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த, கோகோ கோலா நிறுவனம் 120 கோடி ரூபாய்க்கு பார்லே நிறுவனத்திடமிருந்து தம்ஸ் அப் (Thums Up), லிம்கா (Limca) மற்றும் மாஸா (Maaza) ஆகியவற்றுடன் கோல்ட் ஸ்பாட்டையும் வாங்கியது. பின்னர், தனது சொந்த தயாரிப்பான 'ஃபேண்டா' (Fanta) பானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 2000-ஆம் ஆண்டில் கோல்ட் ஸ்பாட் தயாரிப்பை நிறுத்தியது.
பார்லே நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்தப்பட்ட மற்ற பிராண்டுகளை கோகோ கோலா தொடர்ந்து மேம்படுத்தியது. இதில், 'தம்ஸ் அப்' சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிராண்டாகவும், 'மாஸா' 1 பில்லியன் டாலர் மதிப்பைக் கடந்த பிராண்டாகவும் வளர்ந்துள்ளன.
தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'கேம்பா' (Campa) போன்ற உள்நாட்டுப் பிராண்டுகளின் கடும் போட்டியைச் சமாளிக்க, 90-ஸ் கிட்ஸ்களின் பசுமையான நினைவுகளை (Nostalgia) மூலதனமாகக் கொண்டு 'கோல்ட் ஸ்பாட்'டை ‘கோகோ கோலா’ மீண்டும் களமிறக்குகிறது.