

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறை அதிகவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இறுதி ஆண்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான கேம்பஸ் தேர்வும் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி நிறுவனங்களின் தரவுகளின் படி, புதிதாகப் பட்டம் பெறுவோருக்கான வேலைவாய்ப்புகள் 5% முதல் 20% வரை சரிந்துள்ளது. இந்த சரிவுக்கும் ஏஐ தான் காரணம் என சொல்லப்படும் நிலையில், மாணவப் பருவத்திலேயே ஏஐ குறித்து திறன் பெறுவது அவசியமாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்:
கடந்த கல்வியாண்டில் நவம்பர் 2025 வரை 498 மாணவர்களுக்கு கேம்பஸ் தேர்வில் வேலை கிடைத்திருந்தது. ஆனால் 2026-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 416 மாணவர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. இதன்மூலம் ஓராண்டில் மட்டும் வேலைவாய்ப்பு சுமார் 16.5% வரை சரிந்துள்ளது. ஐடி துறை வேலைவாய்ப்புகள் குறைந்தாலும், ஆட்டோமொபைல் மற்றும் கோர் இன்ஜினியரிங் துறை நிறுவனங்களின் வருகையால் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதம் ஓரளவு சமாளிக்கப்படுகிறது.
ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் (HITS):
ஐடி நிறுவனங்களின் கேம்பஸ் வேலைக்கான தேர்வு சுமார் 10% முதல் 15% வரை குறைந்துள்ளன.
வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (VIT): மொத்த வேலைவாய்ப்புகள் கடந்த ஆண்டை விட தற்போது குறைந்தது மட்டுமின்றி, வழக்கமான வேலைவாய்ப்பு சலுகையிலும் 5% சரிந்துள்ளது. குறிப்பாக ரூ.10 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்கும் ‘சூப்பர் ட்ரீம்’ வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது மாணவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
உலகளாவிய திறன் மையங்களின் (GCC): இந்தியாவில் உள்ள சர்வதேச நிறுவனங்களின் மையங்களில் புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது சுமார் 20% வரை குறைந்துள்ளது.
வேலைவாய்ப்பு சரிவுக்கான காரணங்கள்:
* தொடக்க நிலை மென்பொருள் உருவாக்கம், சோதனை மற்றும் தரவு உள்ளீடு உள்ளிட்ட வேலைகளை ஏஐ கருவிகளே மிகத் துல்லியமாக செய்து விடுகின்றன. இதனால் அதிக எண்ணிக்கையில் பட்டதாரிகளை பணியில் அமர்த்துவதை நிறுவனங்கள் குறைத்து விட்டன.
* குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு, ஏஐ மூலம் அதிக வேலைகளை முடிக்கும் உத்தியில் ஐடி நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
* பயிற்சி அளித்து, பிறகு வேலை வாங்குதல் என்ற பழைய முறையை ஐடி நிறுவனங்கள் தவிர்த்து விட்டன. மாறாக முதல் நாளில் இருந்தே உற்பத்தித் திறன் படைத்த மாணவர்களையே ஐடி நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
நிறுவனங்களின் புதிய எதிர்பார்ப்புகள்:
* மனப்பாடம் செய்யாமல், துறை சார்ந்த அறிவு மற்றும் Logic-உடன் கோட் எழுதும் திறனை மாணவர்களுக்கு பெற்றிருக்க வேண்டும்.
* ChatGPT, Claude, GitHub Copilot மற்றும் Gemini போன்ற AI கருவிகள் மூலம் வேலையை குறைந்த நேரத்தில் தரமாக செய்து முடிக்கும் திறன் மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.
* ஏஐ உருவாக்கும் குறியீடுகளில் இருக்கும் ஏதேனும் பிழைகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தால், அதனைக் கண்டறிந்து தீர்வு காணும் திறன் இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கான ஆலோசனை:
ஐடி துறையில் தொடக்க நிலை வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இருப்பினும் ஏஐ, டேட்டா அனலிட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி மற்றும் கோர் இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்புகள் தொடர்ந்து இருக்கின்றன. மாணவர்கள் அனைவரும் வெறும் பட்டப்படிப்பை மட்டுமே நம்பியிருக்காமல், ஏஐ கருவிகளைக் கையாள கற்றுக் கொள்ள வேண்டும். இதுதவிர நடைமுறை புராஜெக்ட்களை செய்வதிலும் மாணவர்கள் கவனம் செலுத்தினால், அவர்களுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.