பருவநிலை மாற்றத்தின் உச்சக்கட்டம் : அமர்நாத் பனிலிங்கம் உருகியது! பக்தர்கள் அதிர்ச்சி..!!

பருவநிலை மாற்றம் காரணமாக அமர்நாத் குகைக் கோவில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி உள்ளது.
பனிலிங்கம்
ice lingam meltsimage credit-hindustantimes.com
Updated on

அமர்நாத் புனித யாத்திரையின் தொடக்க நாளில் சுமார் 5 அடி உயரத்தில் காட்சியளித்த பனிலிங்கம் ஒரு வாரத்துக்குள் சுமார் 90 சதவீதம் வரை பனிலிங்கம் உருகி உள்ளது.

இந்துவாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒருமுறையாவது அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். சமீபகாலமாக ரம்யமாக இருக்கும் இந்த அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பலரும் விருப்பம் காட்டி வருகின்றனர்.

அமர்நாத் குகைக் கோவிலில் உள்ள பனிலிங்கம் என்பது இயற்கையாகவே உறைபனியால் உருவாகும் ஒரு சிவலிங்கம். இது இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,888 மீட்டர் (12,756 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

இயற்கையாக உருவாகும் இந்த பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த லிங்கம் சந்திரனின் பிறை மற்றும் தேய்பிறைக்கு ஏற்ப வளரும் மற்றும் தேயும் தன்மையுடையது. சிவன், பார்வதி தேவிக்கு அமரத்துவத்தின் ரகசியத்தை (அமர கதை) உபதேசித்த புனிதமான இடமாக இது நம்பப்படுகிறது. இந்த குகையினுள் பனி லிங்கத்துடன், அன்னை பார்வதி மற்றும் விநாயகரின் பனி வடிவங்களும் தோன்றுவது வழக்கம்.

குகையின் மேற்கூரையில் இருந்து சொட்டும் நீர்த்துளிகள், உறைபனியாக மாறுவதால் இந்த லிங்கம் இயற்கையாகவே உருவாகிறது. அதாவது, குகையின் வெப்பநிலை மற்றும் வானிலை நிலைகளுக்கு ஏற்ப வளர்ந்து சுருங்கும் ஒரு பருவகாலப் பனிப்பாறையான, இயற்கையாக உருவான பனிலிங்கத்தை யாத்ரீகர்கள் வழிபடுகின்றனர்.

இந்தப் பனிலிங்கத்தை தரினம் செய்ய பக்தர்கள், வழக்கமான 48 கி.மீ. பஹல்காம் பாதை வழியாகவோ அல்லது குறுகியதும் ஆனால் செங்குத்தானதுமான 14 கி.மீ. பால்டால் பாதை வழியாகவோ அடையலாம். பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் இந்த பனி லிங்கத்தை தரிசனம் செய்ய வருவார்கள்.

அமர்நாத் யாத்திரை பொதுவாக ஆண்டுதோறும் கோடை காலத்தில் (ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த 3-ந்தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 28-ம்தேதி வரை 57 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது.

பனிலிங்கம்
Amarnath Cave wonder snow lingamhttps://magikindia.com

அமர்நாத் குகை கோவிலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பிஎஸ்எப்) இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மே 23-ந் தேதி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வெளியிட்ட புகைப்படத்தில் 7 அடி உயரத்துக்கு பனிலிங்கம் காட்சியளித்தது. ஆனால் அப்போது முதலே பனிலிங்கம் உருகத் தொடங்கியது.

அதாவது, இமயமலையில் ஏற்பட்டுள்ள கடுமையான பருவநிலை மாற்றம் (Global Warming) மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, இந்த ஆண்டு புனித யாத்திரையின் தொடக்க நாளில் 5 அடி உயரத்தில் காட்சியளித்த பனிலிங்கம் ஒரு வாரத்திற்குள் 90 சதவீதம் வரை உருகியது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
அமர்நாத் யாத்திரை 2026 : பலத்த பாதுகாப்புடன் தொடக்கம்..!
பனிலிங்கம்

குகையின் தட்பவெப்பநிலை மற்றும் நிலவின் சுழற்சிக்கு ஏற்ப இது உருமாறுவது இயற்கை என்றாலும், யாத்திரை தொடங்கிய 5 நாட்களிலேயே இது முழுமையாக உருகியது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

அதேசமயம் இவ்வாறு பனி லிங்கம் உருகுவது முதல் முறையல்ல என்றும் ஒருசிலர் கூறுகின்றனர். இதற்கு முன்பு, கடந்த 2004, 2006, 2007, 2016 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பனிலிங்கம் உருகி உள்ளது. ஆனால் தற்போது வழக்கத்தைவிட அதிவேகமாக பனிலிங்கம் உருகி இருக்கிறது. லிங்கம் விரைவாக உருகுவதற்கு வானிலை அல்லது காலநிலை மாற்றம் மட்டுமே காரணமாக இருக்காது.

அமர்நாத் குகை கோவில் பகுதியில் தொடர்ந்து வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்கத்தை வழிபட்டு உள்ளனர். அதிக பக்தர்கள் குகை கோவிலுக்குள் செல்லும்போது வெப்பம் அதிகரிக்கிறது.

குகையின் மேற்பரப்பில் இருந்து நீர்த்துளிகள் வடிந்து பனிலிங்கமாக மாறுவது வழக்கம். தற்போது நீர்த்துளிகளின் அளவு குறைந்து, வெப்பமும் அதிகரித்து உள்ளது. இதனால் பனி லிங்கத்தின் உயரம், அகலம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குகைக்குள் வெப்ப காற்று நுழைவதால் பனிலிங்கம் உருகுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
அமர்நாத் குகை அதிசய பனி லிங்க ரகசியம்!
பனிலிங்கம்

மற்றொருபுறம், அமர்நாத் குகைக்கு மிக அருகில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக மழைக் கூடாரங்கள் மற்றும் புதிய கட்டுமானங்கள், அங்குள்ள உள்ளூர் நுண்-காலநிலையை மாற்றியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளில், அமர்நாத் செல்லும் பாதை குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன, தற்காலிக தங்குமிடங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன, தற்காலிக மழைக் கூடாரங்கள் புனிதத் தலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது, மின்சாரம் மற்றும் சூரிய ஒளி விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அணுகலை மேம்படுத்த கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில், மத்திய அரசு ஒரு கம்பிவடப் பாதை திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய நிலையில், பனி ​​லிங்கம் விரைவாக உருகுவதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டுமே சுட்டிக்காட்டும் வகையிலான அதிகாரப்பூர்வமான அல்லது அறிவியல் பூர்வமான ஆய்வு எதுவும் இல்லை. இருப்பினும், கோடிக்கணக்கான இந்துக்களால் போற்றப்படும் புனிதமான பனிலிங்கத்தைத் தாங்கி நிற்கும் இமயமலையின் மென்மையான இயற்கை சூழலியலைப் பாதுகாப்பதற்கும், இந்தியாவின் மிகப்பெரிய யாத்திரைகளில் ஒன்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

பனி லிங்கம் உருகி மறைந்தபோதிலும், சிவபெருமானின் மீதான ஆன்மீக நம்பிக்கையின் காரணமாக நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து அமர்நாத் நோக்கி யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். யாத்திரை தொடங்கிய முதல் 5 நாட்களிலேயே 1.13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
அமர்நாத் பனி லிங்கத்தை விட மிகப்பெரிய பனி லிங்கம் எங்கு உள்ளது தெரியுமா?
பனிலிங்கம்

கடந்தாண்டு 3 லட்சத்து 77 ஆயிரம் பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ள நிலையில் நடப்பு ஆண்டில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com