

இந்தியாவின் ஐஸ்கிரீம் சந்தையில் களமிறங்கியிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான Reliance Consumer Products Limited (RCPL), ‘பாம்பே கிரீமரி’ (Bombay Creamery) என்ற புதிய ஐஸ்கிரீம் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் துறை பன்னாட்டு வணிக நிறுவனமாகும். இந்நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோலிய வேதிப்பொருட்கள், சில்லறை வர்த்தகம், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல், நுகர்வோர் பொருட்கள் (FMCG) போன்ற பல முக்கிய தொழில்களில் ஈடுபட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் குடையின் கீழ் , ரிலையன்ஸ் ரீடெய்ல் இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளராக நிற்கிறது, உணவுகள், மளிகை பொருட்கள், ஆடைகள், பாதணிகள், பொம்மைகள் மற்றும் வீட்டு மேம்பாட்டு பொருட்கள் முதல் மின்னணு பொருட்கள் மற்றும் விவசாய கருவிகள் வரை அனைத்தையும் வழங்கும் எண்ணற்ற சில்லறை விற்பனை நிலையங்களுடன் வலம் வருகிறது. இந்த வளர்ச்சியின் விளைவாக தற்போது ரிலையன்ஸ் ரீடெயில்கீழ் 45க்கும் மேற்பட்ட சர்வதேச பிராண்டுகளை அதனுடன் இணைத்துள்ளது.
இந்நிறுவனம் ஏற்கனவே பல்வேறு நுகர்வோர் பொருட்கள் பிரிவுகளில் தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஐஸ்கிரீம் சந்தையிலும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, சமீபத்திய முக்கிய முன்னேற்றமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நுகர்வோர் பொருட்கள் பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (Reliance Consumer Products Limited - RCPL), ரூ.10 ஆரம்ப விலையில் ‘பாம்பே கிரீமரி’ (Bombay Creamery) என்ற தனது புதிய ஐஸ்கிரீம் பிராண்டை அறிமுகம் செய்து ஐஸ்கிரீம் துறையிலும் நேரடியாகக் களமிறங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
சாதாரண மக்களும் வாங்கும் வகையில் ‘பாம்பே கிரீமரி’ ஐஸ்கிரீம்களின் விலை வெறும் 10 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. குறைந்த விலையில் பிரீமியம் தரத்தை வழங்குவதே ரிலையன்ஸின் நோக்கம்.
இதற்கு முன்பு அனந்த் அம்பானி தலைமையில் இயங்கும் வனந்தரா வலவிலங்கு பூங்கா நிறுவனத்தின் கீழ் Vantara Creamery என்ற பிராண்ட் மே மாதம் துவங்கப்பட்டது. ஆனால் இது ஆடம்பர பிரிவை சார்ந்த பொருட்களை டார்கெட் செய்து விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
‘தரமான ஐஸ்கிரீம்… அனைவரும் வாங்கக்கூடிய விலையில்’ என்பதுதான் ‘பாம்பே கிரீமரி’யின் அடிப்படை அணுகுமுறையாகும். இந்தியாவின் ரூ.27,000 முதல் ரூ.30,000 கோடி மதிப்புள்ள ஐஸ்கிரீம் சந்தையைக் குறிவைத்து, ‘மலிவு விலையில் உலகளாவிய தரம்’ என்ற வாக்குறுதிக்கு இணங்க, ‘பாம்பே கிரீமரி’ ஐஸ்கிரீம்கள், உண்மையான பால் சார்ந்த பொருட்கள், குறிப்பாக real dairy cream பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘Global Quality at Affordable Price’ என்ற நிலைப்பாட்டுடன் இந்தப் பிராண்டை சந்தையில் கொண்டு வந்திருக்கிறது RCPL.
இந்த ஐஸ்கிரீம் வகைகள் கோன்கள், கப்கள், டப்கள், பார்கள் மற்றும் ஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல வடிவங்களில் ஐஸ்கிரீம்களை 10 ரூபாயில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக மேற்கு இந்தியாவில் தொடங்கப்பட்டு, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
‘தரத்தில் எந்தக் குறுக்குவழியும் இல்லை’ என RCPL இயக்குநர் டி. கிருஷ்ணகுமார் கூறியுள்ளார். ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் வாங்கும் விலையில், தரமான ஐஸ்கிரீம் கொடுப்பதே இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையான பால் கிரீம் கொண்டு தயாரிக்கப்படும் ‘பாம்பே கிரீமரி’, ஒவ்வொரு இந்தியக் குடும்பங்கள் வாங்கக்கூடிய விலையில், உண்மையான ஐஸ்கிரீமின் அசல் சுவையை வழங்குவதே நோக்கம் என்றும் அவர் கூறினார்.
‘பாம்பே கிரீமரி’ முதலில் மேற்கு இந்தியச் சந்தைகளில் அறிமுகமாகும் என்று நிறுவனம் கூறியது. அதன் பிறகு, படிப்படியாக நாடு முழுவதும் விற்பனையை விரிவுபடுத்த RCPL திட்டமிட்டுள்ளது.
தரமான பொருட்கள், மலிவு விலை, மற்றும் பரந்த விநியோக நெட்வொர்க் மூலம் இந்திய ஐஸ்கிரீம் சந்தையில் ஒரு முக்கிய பிராண்டாக வளர ரிலையன்ஸ் இலக்கு வைத்துள்ளது.
இது சந்தையில் Amul, vadilal, Mother Dairy, Kwality Wall's உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்சின் பெரிய சில்லறை விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பு இந்த புதிய பிராண்டுக்கு முக்கிய பலமாக இருக்கும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே உணவு, பானங்கள், பர்சனல் கேர் என எப்எம்சிஜி துறையில் வலுவாக உள்ளது. 'கேம்பா' குளிர்பானங்கள், 'இண்டிபெண்டன்ஸ்' பிராண்ட் சமையல் எண்ணெய், மாவு, குடிநீர் பாட்டில்கள் போன்றவற்றை விற்கிறது.
இப்போது ஐஸ்கிரீம் சந்தையிலும் நுழைந்து தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.