

புறம் பேசுதல் அல்லது புறணி பேசுதல் (Gossip) ஒரு போதையாக மாறிவிட்ட காலம் இது. போதைப் பழக்கம், போதைக்கு அடிமையாகி இருப்பவரை மட்டுமின்றி அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிப்பதைப் போல, புறம் பேசுதலும் பேசுபவரை மட்டுமில்லாமல் அவரைச் சுற்றி இருப்போரையும் பாதிக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் புறணி பேசு ஒரு பெண்மணி 2 வீடுகளை வாங்கி உள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆமாங்க.. கொலம்பியாவை சேர்ந்த 67 வயது மூதாட்டி ஒருவர் வதந்திகளையும், பிறருடைய ரகசியங்களையும் சேகரித்து விற்பனை செய்ததன் மூலம், 2 சொந்த வீடுகளை வாங்கியுள்ள விசித்திரமான சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம் என்ற பெண்மணி தினந்தோறும் அவரது வீட்டின் வெளியே அமர்ந்து கொண்டு அக்கம் பக்கத்தினரின் பேச்சுகளை உற்றுக் கவனிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அக்கம் பக்கத்து வீடுகளில் நடக்கும் குடும்ப சண்டைகள், கள்ளக்காதல் விவகாரங்கள், தனிநபர் மோதல்கள் என அனைத்து சுவாரசியமான விஷயங்களையும் புகைப்படங்கள் மற்றும் குறிப்புகளை உள்ளடக்கிய ஆதாரங்களுடன் சேகரிக்கிறார். இவ்வாறு சேகரிக்கும் தகவல்கள் தவறாகக் கூடாது என்பதற்காக மிரியம் ஒரு தனி குறிப்பேட்டையும், தனது வீட்டில் ஒரு பெரிய புகைப்படப் பலகையையும், அதாவது சிறப்பு ஆவணக் காப்பகம் ஒன்றை தனது வீட்டில் பராமரித்து வருகிறார்.
தான் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வதந்திகளைப் பரப்புவதில்லை என்றும், முறையான சான்றுகளுடன் மட்டுமே வாடிக்கையாளர்களுக்குத் தகவல்களை விற்பதாகவும் அவர் உறுதியளிக்கிறார்.
இதன் காரணமாகவே அப்பகுதி மக்கள் இவரை ‘வதந்திகளின் ராணி’ (Queen of Gossip) அல்லது ‘கிசுகிசுக்களின் ராணி’ அல்லது ஸ்பானிஷ் மொழியில் 'சிஸ்மோசா' என்று அழைக்கின்றனர்.
இந்த வித்தியாசமான தொழில் மூலம் தனக்கு கிடைத்த வருமானம், தனது அன்றாட செலவுகளுக்கு உதவுவதோடு, எந்தவித வங்கிக் கடனும் இன்றி இரண்டு வீடுகள் வாங்க தனக்கு உதவியதாகவம் மிரியம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மிரியம் சேகரிக்கும் தகவலின் ரகசியத் தன்மையைப் பொறுத்து அதற்கான கட்டணத்தை அவர் வசூலிக்கிறார். சாதாரண பக்கத்து வீட்டு செய்திகளுக்குக் குறைந்த தொகையும், மிக முக்கியமான ரகசியங்களுக்கு அதிக தொகையும் வசூலிக்கப்படுகிறது.
அதாவது அன்றாட சாதாரண செய்திகள் அல்லது வதந்திகளைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களிடம் 5,000 முதல் 10,000 கொலம்பிய பெசோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.150 - ரூ.300) வரை கட்டணம் வசூலிக்கிறார்.
அதுமட்டுமின்றி சிலரின் அந்தரங்க ரகசியங்களை வெளியில் சொல்லாமல் மூடி மறைப்பதற்கும் இவர் பெருந்தொகை வசூலிக்கிறார். ஒருமுறை மனைவி ஊரில் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவனின் ரகசியத்தை வெளியில் சொல்லாமல் இருக்க, அவரிடமிருந்து மட்டும் 700,000 பெசோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,000) வரை மிரியம் பெற்றுள்ளார்.
மிரியத்தின் இந்த செயல் தனிமனித உரிமைகளைப் பறிப்பதாகவும், பிறரின் அந்தரங்க வாழ்க்கையில் தலையிடுவதாகவும் கூறி அக்கம்பக்கத்தினர் பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
சிலர் இவரைப் போலவே வதந்திகளை விற்க முயன்று தோற்றுப் போனதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், ஒரு காலத்தில் தனது வதந்திப் பழக்கத்தை எதிர்த்தவர்களே, இப்போது தங்கள் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆர்வத்தில் மீண்டும் தன்னை அணுகுவதாகவும் மிரியம் கூறுகிறார்.
வதந்திகள் பேசுவதுதான் என் வாழ்க்கை; அது என் ரத்தத்திலேயே ஊறியுள்ளது. உலகில் மனிதர்கள் இருக்கும் வரை வதந்திகளும் இருக்கும், அதனால் இந்த தொழிலுக்கு எப்போதும் அழிவில்லை என்று அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் இவரது இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதிலும், ‘கிசுகிசுக்களின் ராணி’ என்று அழைக்கப்படும் மிரியம், தனது பல ஆண்டு கால அனுபவம் மற்றும் துல்லியமான ஆதாரங்கள் மூலம் இத்தொழிலில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறார்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது ஒரு ‘புத்திசாலித்தனமான தொழில்முனைவோர் சிந்தனை’ என்றும், அதே வேளையில் ‘தனிநபர் சுதந்திரத்தை சீர்குலைக்கும் ஒழுக்கக்கேடான செயல்’ என்றும் இருவேறு கருத்துக்களுடன் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.