நீர்நிலைகளை காணவில்லை..'வீ த லீடர்ஸ்' தலைவர் அண்ணாமலை அச்சுறுத்தல்..!!

தமிழகத்தில் 50,197 நீர்நிலைகளைக் காணவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ள தகவல் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை
அண்ணாமலைimage credit-deccanherald.com
Updated on

தேசியக் கட்சியான பிஜேபியின் முக்கிய தலைவராக தமிழகத்தில் தடம் பதித்து சமீபத்தில் வந்த சட்டமன்றத் தேர்தலில் எழுந்த கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி 'வீ தி லீடர்ஸ்' என்ற இயக்கத்தை துவங்கி தற்போது தமிழக மக்களின் நலன் ஒன்றே குறிக்கோளாக பல லட்சம் உறுப்பினர்களுடன் இணைந்து இயங்கி வருகிறார் அண்ணாமலை.

"We The Leaders" அமைப்பின் முதல் மாநாடு "போதையில்லா தமிழகம்" என்ற கருப்பொருளில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஜூலை மாதம் நடைபெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் பாதிப்பை சந்தித்துள்ள நீர்நிலைகள் குறித்தும், அதை மீட்கும் முறைகள் பற்றியும் பேசியுள்ளார் அண்ணாமலை.

தமிழகத்தில் உள்ள மொத்த நீர்நிலைகளில் 50,197 நீர்நிலைகளைக் காணவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டி தெரிவித்துள்ள தகவல்கள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1,16,957 நீர்நிலைகளில் 50,197 நீர்நிலைகள் (சுமார் 49%) இருந்த இடம் தெரியாமல் வறண்டு அல்லது காணாமல் போய்விட்டதாகவும், ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் உரிய பராமரிப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவற்றை மீட்டெடுக்கும் விதமாக 'ஆகஸ்ட் முழுவதும் மரம் நடுதல், நீர்நிலைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும்' என 'வீ த லீடர்ஸ்' அமைப்பினருக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசிய காணொளியில் பல புள்ளி விபரங்களைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"இந்தியாவில், தமிழகத்தில் தான், நகரங்களில் அதிக மக்கள் வாழுகின்றனர். கடந்த 1970 முதல் 2015 வரை, 45 ஆண்டுகளில் பூமியின் வெப்ப நிலை, 0.2 டிகிரி அதிகரித்தது. ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில், 0.35 டிகிரியாக அதிகரித்துள்ளது.

சென்னையில் 67 சதவீதம் இடங்களில் கட்டுமானம் வந்து விட்டது; 10 சதவீத இடத்தில் தான் பசுமை இருக்கிறது. 'ஏசி' இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது. தமிழகத்தில் 1.06 லட்சம் நீர்நிலைகளில், 50,197ஐ காணவில்லை. ஆறுகள் மாசு அடைந்து விட்டன. காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது.

தென் மாநிலங்களிலேயே அதிகமாக நிலத்தடி நீரை தமிழகம் தான் உறிஞ்சுகிறது. வரும் 2050ல் கோவை, கன்னியாகுமரியை தவிர, பிற மாவட்டங்களில் குடிக்க கூட தண்ணீர் இருக்காது. எனவே, ஆகஸ்ட் முழுதும் மரம் நடுதல், நீர் நிலைகளை சுத்தம் செய்தல் போன்ற சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுகளை, 'வீ த லீடர்ஸ்' உறுப்பினர்கள் செய்ய வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக மக்களின் வாழ்வாதாரம் பேணும் நீர்நிலைகள் குறித்து பல்வேறு மேடைகளில் பேசியுள்ள அண்ணாமலை தமிழகத்தில் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட பாரம்பரிய நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பின்மையால் தொடர்ந்து குறைந்து வருவதாகவும்,

எதிர்காலத்தில் நீர்ப்பற்றாக்குறை தமிழகத்திற்கு மிகப் பெரிய சவாலாக மாறும்; அதனால் நீர்நிலைகளை உடனடியாக மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Lakes|நீர்நிலைகள்
Lakes|நீர்நிலைகள்Img Credit: Wikimedia

மேலும் மழைநீரை முழுமையாக சேமிக்கும் வகையில் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். நீர்வள மேலாண்மையை அரசியல் விவகாரமாக அல்லாமல், அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரப் பிரச்சினையாக அணுக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதே சமயம் அண்ணாமலை குறிப்பிட்ட "50,197 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன" என்பது நிரூபிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் அல்ல என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் 2023-ல் வெளியிட்ட இந்தியாவின் முதல் நீர்நிலைகள் கணக்கெடுப்பு அறிக்கையில், தமிழகத்தில் 50,197 கண்மாய்/பாசனக் குளம் பதிவாகியுள்ளன. இவை தவிர குளங்கள் (Ponds), ஏரிகள் (Lakes), நீர்த்தேக்கங்கள் (Reservoirs), தடுப்பணைகள் உள்ளிட்ட பிற வகை நீர்நிலைகளும் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையின்படி பார்த்தால் தமிழகத்தில் மொத்த நீர்நிலைகள் 57,944 ஆக பதிவாகியுள்ளன. இதில் 50,197 என்பது அந்த மொத்த எண்ணிக்கையில் உள்ள கண்மாய்/பாசனக் குளம் வகைகளை மட்டும் குறிக்கிறது என்றும் செய்திகள் குறிப்பிடுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : ஜூலை முதல் கதையே மாறப் போகுது.. அண்ணாமலை வெளியிட்ட திடீர் வீடியோ.!
அண்ணாமலை

எனவே, அண்ணாமலை தனது உரையில் "50,197 நீர்நிலைகள்" என்ற எண்ணை பொதுவாக குறிப்பிட்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது எனினும் அதிகாரப்பூர்வ அரசுத் தரவின்படி "50,197 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன" என்பதில் உறுதி இல்லை எனவும் அண்ணாமலை சுட்டிக்காட்டிய அந்த எண்ணிக்கை நீர்நிலைகளின் ஒரு வகையின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டும் புள்ளிவிவரம் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

இந்த புள்ளி விபரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். அண்ணாமலை கூறுவது உண்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்.ஏனெனில் நமது வாழ்வின் ஆதாரமாக விளங்கும் நீராதாரத்தை பாதுகாத்து மேம்படுத்துவது நமக்கு மட்டுமல்ல நமது பிற்கால சந்ததியிருக்கும் நாம் செய்யும் நன்மை என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
தீவிர அரசியலுக்கு தயாராகும் அண்ணாமலை! புதிய கட்சி பெயர்,கொடி அடுத்த மாதம் அறிவிப்பு?
அண்ணாமலை

நாமும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து நீர்நிலைகளைக் காத்து நமது கடமையைச் செய்வோம்.

logo
Kalki Online
kalkionline.com