இன்று நடக்கும் அண்ணாமலையின் பொள்ளாச்சி மாநாடு...தமிழக அரசியலை அதிரவைக்குமா ?

அண்ணாமலையின் 'வீ த லீடர்ஸ்' என்ற புதிய அரசியல் இயக்கத்தின் முதல் மாநாடு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இன்று நடைபெற உள்ளது.
அண்ணாமலை மாநாடு
annamalaiimage credit-newsbytesapp.com
Updated on

அண்ணாமலையின் 'வீ த லீடர்ஸ்' என்ற புதிய அரசியல் இயக்கத்தின் முதல் மாநாடு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இன்று நடைபெற உள்ளது.

முன்னாள் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த அண்ணாமலை, அந்த கட்சியில் இருந்து விலகி 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) என்ற புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கினார். சாதி, வாரிசு அரசியலைத் தாண்டி, மக்கள் மையமான மற்றும் தரவு சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. 18 மாதங்கள் வரை தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அரசியல் பயிற்சி அளிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார். அதன் பிறகு புதிய கட்சியை தொடங்க உள்ளதாக ஏற்கனவே அண்ணாமலை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் அமைப்பாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலைக்கும், பாஜக உள்ளவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்னர் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, கடந்த ஜூன் மாதம் ‘வி த லீடர்ஸ்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினார். அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தில் தற்போது வரை சுமார் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன்வந்து இணைந்துள்ளனர். தமிழகத்தில் மாற்றத்தைவிரும்பும் மக்கள், அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்துக்கு அதிக அளவில் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த கட்சியின் முதல் மாநாடு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இன்று (12-ந் தேதி) அண்ணாமலை தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ‘போதை இல்லா பொள்ளாச்சி’ என்னும் பெயரில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: அடுத்த தேர்தலில் நம் கட்சி நிச்சயமாக போட்டியிடும்! அண்ணாமலை அதிரடி.!
அண்ணாமலை மாநாடு

இந்த மாநாட்டில் அண்ணாமலை என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த மாநாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என அண்ணாமலை தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப மாநாடு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அண்ணாமலை மாநாடு
annamalaiimage credit-ndtv.com

இன்று நடைபெறும் மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கட்சியின் எதிர்காலம், நடைபெற உள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாகவும் சில அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

முந்தைய திமுக ஆட்சி காலத்தில் அந்த கட்சியின் செயல்பாடுகள் குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் தற்போது ஆட்சி மாறியுள்ளது. தற்போதைய தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்தும், கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டது குறித்தும் இன்று பொள்ளாச்சியில் விரிவாக பேச உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை புதிய இயக்கம் ஆரம்பித்து முதல் மாநாடு நடைபெற உள்ளதால் இதில் அவர் என்ன பேசப்போகிறார், தமிழக அரசியல் தொடர்பாக அவர் என்ன பேசப் போகிறார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்தத் தமிழகமும் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : ஜூலை முதல் கதையே மாறப் போகுது.. அண்ணாமலை வெளியிட்ட திடீர் வீடியோ.!
அண்ணாமலை மாநாடு

இதற்கிடையே 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் 2-வது மாநில மாநாடு வரும் ஜூலை 26-ம்தேதி திருச்செந்தூரில் நடைபெறும் என்று அந்த இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com