

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி தாக்கல் செய்த தனது முதல் பட்ஜெட்டில் (2026-27), நிதி அமைச்சர் மரிய வில்சன் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை அறிவித்தார். இதன்படி, பெண்களின் திருமண நாளில் தமிழக அரசின் சார்பில் 8 கிராம் (1 சவரன் - 22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை 'அண்ணன் சீராக' வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. மேலும் 2026-27-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 60,000 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நவம்பர் 4-ம்தேதி வெளியிடப்பட்டது. அதில், ஒரு தங்க நாணயம் 8 கிராம் எடையுடன் 22 கேரட் 916 ஹால்மார்க் தரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பட்டுப் புடவையை பொறுத்தவரையில் சில்க் மார்க் (Silk Mark) மற்றும் ஹேண்ட்லூம் மார்க் (Handloom Mark) இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் நடைமுறைகள் முடிந்து டிசம்பர் இறுதிக்குள் இவற்றை கொள்முதல் செய்வதற்கான ஆணை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்திற்கான தகுதிகள், விதிமுறைகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தகுதிகள்:
* திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
* 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பத்தினர் இத்திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள்.
* விண்ணப்பிக்க ஆதார் எண் அல்லது அங்கீகாரம் அவசியம்.
* சொந்த பயன்பாட்டிற்காக 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பத்தினர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.
* திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் அந்தத் திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
* தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
* 05.10.2026 முதல் 15.01.2027 வரையிலான திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம்.
* தமிழ்நாட்டில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
யாரெல்லாம் பயன்பெறலாம்?:
* தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
* திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
* மணப்பெண்னின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டியது கட்டாயம்.
* குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும்.
* திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களுக்கான செயல்முறை:
* விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை (Ration Card) எண் தகுதி சரிபார்க்கப்படும்.
* தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் திருமணப் பத்திரிகையை (Wedding Invitation) உள்ளிட்ட தேவையான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.
* விண்ணப்ப நிலை குறித்து குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
* திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள், திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும்.
* தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்குரிய காரணம் தெரிவிக்கப்படும்.
* நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.