

தமிழகத்தில் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பிறந்த குழந்தைக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற 5 மாதங்களிலேயே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை கடந்த செப்டம்பர் 25-ம் தேதி தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய். இத்திட்டத்தின் படி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்ணன் சீர் திட்டம் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு உள்ளே இருக்கும் குடும்பத்தில் பெண்களுக்கு நடக்கும் திருமணத்திற்கு அண்ணன் சீராக 8 கிராம் தங்கமும்,ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்படும்.
இதற்கு முன்னதாக திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்ஙம் வழங்கும் திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு, உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் திருமணமாகும் பெண்களுக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது தமிழக அரசு. ஆனால் தவெக தேர்தல் அறிக்கையில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு உள்ளே இருப்பவர்களுக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் அரசாணையில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சமாக குறைக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழக அரசு தாய்மாமன் தங்க மோதிரம் மற்றும் வெற்றிப் பயணம் ஆகிய 2 திட்டங்களை அடுத்தடுத்து தொடங்கியது. இந்நிலையில் அடுத்த கட்டமாக அண்ணன் சீர் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கவுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், “திருமணமாகும் மணப் பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்குவதற்கு நிர்வாக அனுமதியும், நிதி அனுமதியும் வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.812 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையவழி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அரசாணைப்படி ரூ.2.5 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தால் மட்டுமே அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
அண்ணன் சீர் திட்டம் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணன் சீர் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு வருமானத்தை தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என இப்போதே பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்ணன் சீர் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற ஏழைப் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதால், இத்திட்டத்திற்கான வரவேற்பு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் அமலில் இருந்த தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களின் கல்வித் தகுதியை வைத்து தங்கத்தை வழங்கி வந்தது. ஆனால் அண்ணன் சீர் திட்டத்தில் கல்வித் தகுதி பாராக்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது. ஏனெனில் தமிழக அரசின் அரசாணையில் கல்வித் தகுதி குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.