

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. தேர்தலுக்கு முன்பாக தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி, கள்ள ஓட்டுகளை குறைக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் இறங்கியது. இதற்காக சிறப்பு தீவிர வாக்காளர் சீர்திருத்த (SIR) நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இ
இதன்படி தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் நீடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு தீவிர சீர்திருத்தத்தில் இறந்தவர்கள் மற்றும் 2 வாக்காளர் அட்டையைப் பெற்றவர்கள் உள்பட தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால் இதில் தகுதியான வாக்காளர்கள் சிலரின் பெயர்களும் நீக்கப்பட்டதால், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இருப்பினும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் அதிக வாக்காளர்கள் நீக்ப்பட்ட தொகுதிகளில் தவெக தான் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளதாக Business Line என்ற நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
பிசினஸ் லைன் வெளியிட்ட அறிக்கையில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெற்றி பெற்ற கட்சிகளின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி பாராத்தால், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் தான் தவெக-வின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது எனத் தெரிகிறது.
* 10,000 வாக்காளர்கள் வரை நீக்கப்பட்ட 19 தொகுதிகளில் திமுக - 7, அதிமுக - 6, தவெக - 2 மற்றும் மற்ற கட்சிகள் - 4 தொகுதிகளில் வென்றுள்ளன.
* 10,000 - 20,000 வாக்காளர்கள் வரை நீக்கப்பட்ட 80 தொகுதிகளில் அதிமுக - 24, தவெக - 22, திமுக - 20 மற்றும் மற்ற கட்சிகள் - 14 தொகுதிகளில் வென்றுள்ளன.
* 20,000 - 30,000 வாக்காளர்கள் வரை நீக்கப்பட்ட 66 தொகுதிகளில் தவெக - 32, திமுக - 21, அதிமுக - 11 மற்றும் மற்ற கட்சிகள் - 2 தொகுதிகளில் வென்றுள்ளன.
* 30,000 - 50,000 வாக்காளர்கள் வரை நீக்கப்பட்ட 37 தொகுதிகளில் தவெக - 24, திமுக - 8 மற்றும் அதிமுக - 5 தொகுதிகளில் வென்றுள்ளன.
* 50,000 - 80,000 வாக்காளர்கள் வரை நீக்கப்பட்ட 22 தொகுதிகளில் தவெக - 18, திமுக - 3 மற்றும் அதிமுக - 1 தொகுதிகளில் வென்றுள்ளன.
* 80,000 வாக்காளர்களுக்கும் மேல் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெக தான் வெற்றி வாகை சூடியுள்ளது.
பிசினஸ் லைன் வெளியிட்ட அறிக்கையின் படி, குறைந்த அளவு வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் திமுகவும், அதிகளவு வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெகவும் வென்றுள்ளன. ஒருவேளை SIR நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாறியிருக்கக் கூடும் என இந்த அறிக்கை உணர்த்துகிறது.
இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், SIR நடவடிக்கையில் தன்னிச்சையாக செயல்பட்டார் என மற்ற தேர்தல் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் செய்யவுள்ளது. ஏற்கனவே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் SIR நடவடிக்கையின் தாக்கம் தவெகவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதுகுறித்து தவெக தரப்பில் எவ்வித கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.