

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ஐயம் கேம் (I’m Game) என்ற திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 3-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் செப்டம்பர் 3-ம் தேதிக்கு பட ரிலீஸ் தள்ளிப் போனது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகும் ஐயம் கேம் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் இனி விஜய் சார் கூட நடிக்க முடியாது என நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் உருக்கமாக பேசினார். இதற்கு முன்னதாக மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சாருடன் இவர் நடிக்க இருந்த கதாபத்திரம் கைநழுவிப் போனது. இதனால் அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில், இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.
முன்னணி நடிகரான விஜய்யுடன் நடிக்க பல்வேறு நடிகர், நடிகைகள் ஆசைப்பட்டனர். அதில் ஆண்டனி வர்க்கீஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயம் கேம் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் கூறுகையில், “மாஸ்டர் திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நான் தான். அந்த வாய்ப்பு நழுவிப் போனதால், விஜய் சாருடன் நடிக்க அடுத்த வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.
ஆனால் தற்போது விஜய் சார் தமிழ்நாட்டின் முதல்வராகி விட்டார். மேலும் சினிமாவை விட்டு அவர் விலகியதால், இனி விஜய் சாருடன் நடிக்கும் வாய்ப்பே கிடைக்காது. இருப்பினும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் சூர்யா ஆகியோருடன் நடிக்க ஆசையாக இருக்கிறது” எனப் பேசினார் ஆண்டனி வர்க்கீஸ்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், அரசியல் கட்சியைத் தொடங்கி, தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதல்வராகி விட்டார். அரசியலில் பொதுமக்களுக்கு சேவை செய்தாலும், சினிமாவிலும் அவ்வப்போது நடிக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
முதல்வர் விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில், நடிகர்கள் பலரும் விஜய் சார் அரசியலில் இருந்தாலும், தொடர்ந்து நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் எடுத்த முடிவில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பார் என்பதை நம்மில் பலரும் அறிவோம். இனி நடிகர் விஜய்யை திரையில் அல்ல, நேரடியாக களத்தில் பார்த்து வருகிறோம் தமிழ்நாட்டின் முதல்வராக.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் முதல்வர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அவர் நடிகராக இருந்த காலத்தில், அவருடைய பல படங்கள் கேரளாவில் மெகாஹிட் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
துல்கர் சல்மானின் 40வது திரைப்படமான ஐயம் கேம், பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் ஆர்டிஎக்ஸ் (RDX) என்ற மெகாஹிட் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் தான் இப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.
கிரிக்கெட் சூதாட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம், துல்கர் சல்மானின் சினிமா பயணத்தில் மிக முக்கய படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.