

இன்றைய காலகட்டத்தில் உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் பெரும்பாலான விஷயங்கள் டிஜிட்டல் சார்ந்ததாக மாறி வருகின்றன. அந்த வகையில், நாட்டின் கல்வி முறையும் வேகமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் எங்கு சென்றாலும் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்கள் அடங்கிய கோப்புகளை சுமந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. மாணவர்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்தை குறைப்பதற்காகவே மத்திய அரசு 'அபார் ஐடி' (Apaar ID) என்ற டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அபார் ஐடி (APAAR ID) என்பது இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் தனித்துவமான 12 இலக்க டிஜிட்டல் கல்வி அடையாள எண் ஆகும்.
ஆதார் கார்டில் இருப்பதை போலவே, அபார் கார்டிலும் 12 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும். இந்த அடையாள எண் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை வழங்குகிறது. இதன் மூலம், ஒரு மாணவரின் கல்வி தொடர்பான அனைத்து முக்கியத் தகவல்களையும் ஒரே இடத்தில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க முடியும்.
இந்த சிறப்பு வாய்ந்த டிஜிட்டல் மாணவர் அடையாள எண் "ஒரே நாடு - ஒரே மாணவர் அடையாள எண்" (One Nation, One Student ID) என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் அடையாள அட்டையில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான எண்ணை வழங்கப்படுகிறது. அந்த எண்ணின் கீழ் அந்த மாணவனின் மதிப்பெண் பட்டியல்கள், பட்டங்கள், சான்றிதழ்கள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் பிற சாதனைகள் போன்ற கல்விசார் விவரங்கள் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.
இந்த அடையாள அட்டை கல்வி மதிப்பெண்களை (Academic Credits) எளிதாக கண்காணிக்கவும், ஒரு கல்வி நிலையத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றவும் உதவும்.
மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் கல்வி வங்கி கணக்குடன் (Academic Bank of Credits) இது இணைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக இது மாணவர்களின் ஒட்டுமொத்த கல்விப் பயணத்தையும் பதிவு செய்யும் ஒரு டிஜிட்டல் கல்விசார் சுயவிவரமாக இருக்கும்.
இந்த அபார் ஐடி பல முக்கிய நன்மைகளை வழங்குகிறது. உதாரணமாக, ஒரு மாணவரின் அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணையத்தில் ஒரே இடத்தில் சேமித்து வைப்பது மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்களை எங்கிருந்தும் இணையம் வழியாக எளிதாக அணுக முடியும். இதன் மூலம் ஆவணங்கள் கிழிந்துபோகும் அல்லது தொலைந்துபோகும் என்ற அபாயமும் தவிர்க்கப்படும். அதேபோல் மாணவர்கள் தேவைப்படும்போது அவற்றை எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் அணுக முடியும்.
இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரி மாறுதல், வேலைக்கு செல்லுதல் உள்ளிட்ட இடங்களில் அபார் ID காண்பித்தாலே போதும், அவர்களின் முழு விவரங்களையும் நிறுவனங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்..
அபார் ஐடியைப் பெற, மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூலமாகவோ அல்லது மாணவர்களே டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் APAAR Portal வலைத்தளம் மூலமாகவோ இதை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு பதிவு செய்ய மாணவரின் ஆதார் அட்டை மற்றும் பள்ளிப் பதிவு விவரங்கள் அவசியமாகும்.
மாணவர்கள் டிஜிலாக்கர் தளத்தின் மூலமாகவும் தங்கள் ஐடியை எப்படி உருவாக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம் வாங்க.
முதலில், டிஜிலாக்கரின் முகப்புப் பக்கத்திற்குச் சென்று, ’Search Documents’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர், ‘Education’ பிரிவில் உள்ள தேடல் கட்டத்தில் ’Academic Bank of Credits’ என்று டைப் செய்து, ‘Apaar ID Card’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்தால் மாணவரின் ஆதார் தரவுகளிலிருந்து பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற முக்கிய விவரங்கள் தானாகவே உருவாக்கப்படும்.
கல்வி தொடர்பான விவரங்களை உள்ளிட்ட பிறகு, ‘Identity Type’ என்பதில் ‘Roll Number’ அல்லது ‘Registration Number’ என்பதைத் தேர்ந்தெடுத்து, அதற்கான எண்ணை ‘Identity Value’ என்பதில் உள்ளிட வேண்டும்.
இறுதியாக, கல்வி நிறுவனத்தின் பெயர் மற்றும் சேர்ந்த ஆண்டைத் தேர்ந்தெடுத்து ‘Submit’ பட்டனை அழுத்தினால் இப்போது உங்களுடைய ‘அபார் கார்டு’ உருவாக்கப்படும். இதை நீங்கள் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போன் அல்லது லேப்டாப்பில் சேமித்து வைத்து கொள்ளலாம்.