

ஐபோன் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிக்கும் ‘ஆப்பிள் பே’ (Apple Pay) சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. அதாவது, இந்தியாவில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இருந்து ‘ஆப்பிள் பே’ சேவையை தொடங்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதியை பொறுத்து இதில் மாறுபாடு இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
செல்போன், கணினி உற்பத்தியில் உலக அளவில் மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் உள்ளது. இந் நிறுவனம் அதன் மாபெரும் வெற்றி பெற்ற படைப்புகளான ஐபோன், ஐபேட் மற்றும் மேக் ஆகியவற்றிற்காகவே பெரிதும் அறியப்பட்டது.
Apple Inc என்பது கலிபோர்னியாவின் குபெர்டினோவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாகும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல லட்சம் கோடிகளைத் தாண்டும். இது 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம்தேதி ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்குப் பல முக்கிய டிஜிட்டல் மற்றும் ஆதரவு சேவைகளை வழங்கி வருகிறது. iCloud, ஆப்பிள் மியூசிக், ஆப் ஸ்டோர், Apple Arcade, ஆப்பிள் டிவி+ (Apple TV+), மற்றும் ஆப்பிள்கேர் ஆகியவை இதன் முதன்மையான சேவைகள் ஆகும்.
ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் விரைவில் பேமெண்ட் செயலி துறையில் ஆப்பிள் கால் பதிக்க உள்ளது. கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ செயலிகளை தான் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, இந்த செயலிகள் மூலம் விரைவாகப் பணம் அனுப்ப முடிகிறது.
இந்நிலையில்தான், ஆப்பிள் நிறுவனமும் ‘ஆப்பிள் பே’ (Apple Pay) எனும் செயலியை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஐசிஐசிஐ (ICICI), ஹெச்.டி.எப்.சி.(HDFC), ஆக்சிஸ் வங்கிகளுடன் (Axis Bank) அந்நிறுவனம் பேசி வருகிறது. இவை தவிர, மாஸ்டர் கார்டு, விசா ஆகிய நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆப்பிள் பே (Apple Pay) டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவையை 2026 அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆரம்பத்தில் விசா (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு (Mastercard) கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மட்டும் பணப்பரிபர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் உடனடியாக யுபிஐ (UPI) வசதி ஆதரவு வழங்கப்பட மாட்டாது என்றும் யுபிஐ (UPI) வசதி மற்றும் ரூபே கார்டுகள் (RuPay) பின்னாட்களில் சேர்க்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், தற்போது களமிறங்கும் Apple Pay அன்றாட UPI பரிவர்த்தனைகளுக்கான செயலியாக இல்லாமல், பிரீமியம் கிரெடிட் கார்டு பயனர்களை இலக்காகக் கொண்டே அறிமுகமாகிறது.
எதிர்காலத்தில் NPCI உடனான ஒப்பந்தங்கள் முழுமையடைந்த பின்னரே இதில் UPI வசதி கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுபிஐ வசதியை இணைப்பதற்கு என்சிபிஐ ஒப்புதல் மற்றும் வங்கி கூட்டாண்மை தேவை என்பதால், ஆப்பிள் நிறுவனம் முதற்கட்டமாகக் கார்டு அடிப்படையிலான சேவையில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
பயனர்கள் தங்களின் விசா மற்றும் மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டுகளை ஆப்பிள் வாலட் செயலியில் சேமித்து வைத்துக்கொண்டு, என்எஃப்சி வசதி கொண்ட கடைகளின் பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரங்களில் தங்களின் ஐபோனைத் தட்டுவதன் மூலம் பணத்தை செலுத்த முடியும்.
அதேபோல் ரிவார்டுகள், காஷ்பேக் மற்றும் இஎம்ஐ (EMI) போன்ற கிரெடிட் கார்டு பலன்கள் தொடர்ந்து கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஐபோன் அல்லது ஆப்பிள் வாட்ச் மூலம் என்எப்சி (NFC) இயந்திரங்களில் தொட்டுப் பணம் செலுத்தலாம்.
இந்திய ஸ்மார்ட் மொபைல் சந்தையில் 10 சதவீத பங்கு வகிக்கும் ஆப்பிள், இவ்வசதி வாயிலாக கூடுதல் விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கிறது.
‘ஆப்பிள் பே’ செயலி அமெரிக்காவில் முதல் முறையாக கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது உலகளவில் ஆப்பிள் பே சேவை அறிமுகப்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், தற்போது தான் இந்திய சந்தையில் அது கால்பதிக்க ஆயத்தமாகி வருகிறது.
வங்கிகளுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையும் பட்சத்தில், இந்திய ஐபோன் பயனர்கள் தங்களது கிரெடிட் கார்டுகளைப் பாதுகாப்பாகப் போனில் சேமித்து வைத்துக் கட்டணங்களைச் செலுத்தும் அதிகாரப்பூர்வ வசதியைப் பெறுவார்கள்.