

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளை தொடங்கி உள்ளது தேர்தல் ஆணையம்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த 4-ம்தேதி முதல் (SIR) தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கி நிரப்பி அவற்றை பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 6,41,14,587 வாக்காளர்களில், இதுவரை 95.16 சதவீதம் அதாவது, 6,10,08,906 பேருக்கு கணக்கெடுப்பு படிவங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. தற்போது மக்கள் இந்த படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர்.
இந்த படிவங்கள் உடனடியாக டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 17.37 சதவீதம் அதாவது, 1,11,34,319 படிவங்களை மக்கள் பூர்த்தி செய்து கொடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கணக்கீட்டுப்படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு வரும் 25-ந்தேதி வரை 947 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேபோல் https://voters.eci.gov.in/என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையிலும் படிவங்களை சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளும், குழப்பங்களும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. பலருக்கும் இந்த படிவங்களை எப்படி பூர்த்தி செய்வது என்பதில் பல குழப்பங்கள் இருப்பதாகவும் கூறிவருகின்றனர்.
சில இடங்களில் படிவங்களை நிரம்ப வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி செய்தாலும், பல இடங்களில் யாரும் உதவி செய்யாததால் படிவங்களை நிரப்பும் போது தவறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுபோல் படிவம் சரியாக இருப்பின், ஆவணங்கள் ஏதும் பெறக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தும், பல்வேறு இடங்களில் சில கட்சிகளை சேர்த்த நபர்கள் வாக்காளர் படிவத்துடன் ஆவணங்களையும் சேர்த்து தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி ஆவணங்களை கொண்டு வரும்படி வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் கூறப்படுவதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் படிவத்துடன் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கணக்கீட்டு படிவங்களில் வாக்காளர்கள் தங்களது சரியான விவரங்களை வாக்குச்சாவடி அலுவலர்களின் உதவியுடன் நிரப்பி சமர்ப்பிக்கலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.