
ஜல்லிக்கட்டு என்பது பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெரும்பாலும் தமிழகத்தில் கொண்டாடப்படும் ஒரு பழமையான காளைகளை அடக்கும் நிகழ்வு ஆகும். மதுரையின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், தமிழர் பாரம்பரியம் மற்றும் கிராமிய வீரத்தின் துடிப்பான கொண்டாட்டமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தமிழ அரசு கடுமையான விதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது.
மதுரையில் வருடந்தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டி போட்டிகளில் அவனியாபுரத்தில் 14-ம்தேதியும் பாலமேட்டில் ஜனவரி 15-ம்தேதியும் மற்றும் ஜனவரி 16-ம்தேதி அலங்காநல்லூரில் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளியூரில் மட்டுமல்ல வெளிநாட்டில் இருந்தும் ரசிகர்கள் வருவார்கள்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும், அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறி வந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு பிடித்தனர். இதே போல் திமிறிய காளைகளை திமிலை பிடித்து அடக்கி வீரர்களும் பரிசுகளை குவித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு டிராக்டர், கார், ஆட்டோ, பைக், தங்க நாயணம் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரத்தில் ஜனவரி 14-ம்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் திருப்பங்குன்றத்தை சேர்ந்த கார்த்தி 19 மாடுகளை அடக்கி முதலிடம் பிடித்தார். குன்னத்தூரை சேர்ந்த அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி 2-வது இடத்தையும், திருப்புவனம் முரளிதரன் 14 காளைகளை அடக்கி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட மலையாண்டி என்பரின் காளைக்கு முதலமைச்சர் சார்பாக டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. 19 மாடுகளை அடக்கி முதல் இடம் பிடித்த திருப்பங்குன்றத்தை சேர்ந்த கே.கார்த்திக்கு துணை முதலமைச்சர் சார்பாக நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த அரவிந்த் திவாகருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
அவனியாபுரத்தில் போட்டியின் போது 45 பேர் காயமடைந்தனர். நவீன்குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு
மதுரை பாலமேட்டில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15-ம்தேதி மாட்டுப்பொங்கல் அன்று நடந்தது. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில், 14 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த நத்தத்தை சேர்ந்த பார்த்தபனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 12 காளைகளை அடக்கி 2-வது இடத்தை பிடித்த மஞ்சம்பட்டி துளசிராமுக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கி 3-வது இடத்தையும் பிடித்த பொதும்புவை சேர்ந்த பிரபாகரனுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சத்திரப்பட்டியை சேர்ந்த விஜயதங்கபாண்டியன் என்பவரது காளைக்கு முதல்-அமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
பொங்கலை முன்னிட்டு 16-ம்தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 9 சுற்றுகளாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டி போட்டியில் 1000 காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக கமிட்டி அறிவித்துள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 20 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அபிசித்தருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கி 2-வது இடத்தை பிடித்த ஸ்ரீதருக்கு ஷேர் ஆட்டோவும், 10 காளைகளை அடக்கி 3-வது இடத்தை பிடித்த மடப்புரம் விக்னேஷ்க்கு எலக்ட்ரிக் பைக்கும் பரிசாக வழங்கப்பட்டது.
சேலத்தை சேர்ந்த பாகுபலி காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 72 பேர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.