

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கீழ் 2 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கட்டாய பயோ-மெட்ரிக் புதுப்பித்தலை (MBU) முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 1.56 லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் வரும் செப்டம்பர் 30-ம்தேதி வரை 5 மற்றும் 15 வயது நிரம்பிய குழந்தைகளுக்குக்கான கட்டாய பயோ-மெட்ரிக் ஆதார் புதுப்பிப்பு (Mandatory Biometric Update) முற்றிலும் இலவசமாக செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வயதை கடந்த அனைத்து குழந்தைகளுக்கும் கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோ-மெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டும். நாடு முழுவதும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குப் புகைப்படம் மற்றும் அடிப்படை விவரங்கள் மட்டும் கொண்டு ‘பால் ஆதார் அட்டை’ (Baal Aadhaar) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு கைரேகை மற்றும் கருவிழி பதிவு (iris scans) செய்யப்படுவதில்லை.
இவர்கள் 5 வயதைக் கடக்கும்போது ஆதார் மையங்களுக்கு நேரடியாகச் சென்று கைரேகைகள், கருவிழிகள் மற்றும் பிற பயோ-மெட்ரிக் விவரங்களை பதிவு செய்வது அவசியம். பின்னர், 15 வயதை அடைந்ததும் மீண்டும் பயோ-மெட்ரிக்கை அப்டேட் செய்ய வேண்டும்.
பயோ-மெட்ரிக் புதுப்பிப்பை ஆன்லைனில் செய்ய முடியாது. அருகிலுள்ள ஆதார் மையத்தை ‘புவன் ஆதார் போர்டல்’ மூலம் கண்டறியலாம். அதாவது அருகில் உள்ள அதிகாரப்பூர்வ ஆதார் சேவா மையம் (Aadhaar Seva Kendra) அல்லது பொதுச் சேவை மையங்களுக்கு (CSC) நேரடியாகச் சென்று செய்து கொள்ளலாம். குழந்தையின் ஆதார் அட்டை மற்றும் குழந்தையையும் அழைத்து செல்ல வேண்டும். உங்கள் பகுதியிலுள்ள ஆதார் மையங்களைத் தேட UIDAI அதிகாரப்பூர்வ தளம்-ஐப் பயன்படுத்தலாம்.
ஆதார் மையத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரியிடம் குழந்தையின் ஆதாரைக் கொடுத்து பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு (கைரேகை, விழித்திரை மற்றும் புகைப்படம்) செய்ய கோர வேண்டும்.
ஆதார் மையத்தில் கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் பதிவு செய்யப்படும், பின்னர் வழங்கப்படும் ஒப்புதல் சீட்டில் உள்ள URN எண்ணை பயன்படுத்தி புதுப்பிப்பு நிலையை அறியலாம்.
நிறைய பேர் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை என்று தவறாக நினைத்து கொள்கின்றனர். ஆனால் குழந்தைகளின் பயோமெட்ரிக் (biometric) விவரங்களைப் புதுப்பித்து வைத்திருப்பது, அவர்கள் பள்ளி மற்றும் உயர்கல்வி நிலைகளைக் கடந்து செல்லும்போது ஆதார் அங்கீகாரம் (authentication) தொடர்பான சிக்கல்களைக் குறைக்க உதவும்.
அதாவது ஆதார் பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு, கல்வி உதவித்தொகை, அரசு கல்வி திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறவும், NEET, JEE, CUET போன்ற நுழைவு தேர்வுகளை எழுதும்போதும் ஆதார் அட்டை கட்டாயம் தேவை.
எனவே காலாவதியான பயோ-மெட்ரிக் விவரங்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆதார் அங்கீகாரம் தேவைப்படும்போது சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்றும் UIDAI சுட்டிக்காட்டியுள்ளது.
மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து இதுவரை 1.56 லட்சம் பள்ளிகளில் ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2 கோடி மாணவர்களுக்கு ஆதார் பயோ-மெட்ரிக் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 5 வயது முதல் 17 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும், வரும் செப்டம்பர் 30-ம்தேதி வரை பயோ-மெட்ரிக்கை புதுப்பிக்க இலவசம். கடந்த செப்டம்பர், 2025 முதல் ஓராண்டுக்கு பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதன் மூலம் சுமார் 6 கோடி குழந்தைகள் பயனடைவார்கள் என்று UIDAI தெரிவித்துள்ளது.
எனவே, பொருந்தக்கூடிய UIDAI விதிமுறைகளுக்கு உட்பட்டு, 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கு (MBU) பெற்றோர்கள் தற்போது எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.