

வங்கிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர. இதன்படி அவ்வப்போது வங்கி ஸ்டிரைக்கிலும் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
அவ்வகையில் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் செய்தனர். வங்கி ஸ்டிரைக் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகள் இயங்கவில்லை. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது இந்தியன் வங்கி.
வாரத்திற்கு 5 நாட்கள் வேலை, 2 நாட்கள் விடுமுறை மற்றும் ஊக்கத்தொகை திட்டத்தை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் வங்கி ஊழியர்கள். வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது பொதுத்துறை, தனியார், கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் மேலாளர்களும் பங்கேற்பார்கள். வேலை நிறுத்தம் செய்யும் போது நாட்டில் உள்ள 1 லட்சம் வங்கிக் கிளைகள் மூடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் வங்கிப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக இந்தியன் வங்கி தெரிவித்திருப்பது மாதச் சம்பளக்காரர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த வேலை நிறுத்தம் மாதக் கடைசியில் என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.
செப்டம்பர் 28 (திங்கட்கிழமை), செப்டம்பர் 29 (செவ்வாய்க்கிழமை) மற்றும் செப்டம்பர் 30 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக செப்டம்பர் 26-ம் தேதி நான்காவது சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு பொது விடுமுறையாகும்.
வேலை நிறுத்தத்திற்கு அடுத்த நாளான அக்டோபர் 1-ம் தேதி மட்டுமே வங்கிகள் இயங்கும். ஏனெனில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் தேசிய விடுமுறையாகும்.
அக்டோபர் 3-ம் தேதி வாரத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்கும்.
அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால், வங்கிகள் இயங்காது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 5-ம் தேதி திங்கட்கிழமை தான் வங்கிகள் எப்போதும் போல இயங்கும்.
ஒருவேளை அக்டோபர் 1 மற்றும் 3-ம் தேதியும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால், தொடர்ச்சியாக 9 நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி செப்டம்ர் 26-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது என்பதால் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படும். அதோடு இது மாத கடைசி என்பதால், மாதச் சம்பளம் வாங்குவோர் சம்பளத்தை எடுக்க முடியாமல் திணறுவார்கள்.
இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றத்திற்கு யுபிஐ, மொபைல் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துமாறு இந்தியன் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் வங்கிகள் தொடர் விடுமுறையில் இருப்பதால், வங்கி சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறும் இந்தியன் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது