

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் அண்டை மாநிலமான கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 9-ம்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 23-ம்தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று (மார்ச் 24) முடிந்த நிலையில் நாளை (மார்ச் 26) வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
பெறப்பட்ட வேட்புமனுக்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 1,252 வேட்பாளர்கள் மொத்தமாக 2,117 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல் களத்தில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF), பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏ (NDA) கூட்டணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதையடுத்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இன்று(புதன்கிழமை) கோழிக்கோடு கடற்புரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்கிடையே தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பிரசாரத்தில் ஈடுபடக் கூடியவர்களும், பங்கேற்பவர்களும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் குழந்தைகளை எந்த விதத்திலும் பிரசாரத்தில் ஈடுபடுத்தவோ, பங்கேற்கவோ செய்யக்கூடாது. குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு பிரசாரம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்கள் குறித்து கோழிக்கோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சினேகில் குமார் சிங், தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பிற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. பேரணிகள், கோஷங்கள் எழுப்புதல், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், தேர்தல் கூட்டங்கள் போன்ற ஒரு நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது.
பிரச்சாரத்தின் போது குழந்தைகளைக் கைகளில் ஏந்துவதோ, வாகனங்களிலோ, பேரணிகளிலோ பங்கேற்பதோ அனுமதிக்கப்படாது.
தேர்தல் கவிதைகள், பாடல்கள், பேச்சுகள், அல்லது அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் சின்னங்களைக் காட்சிப்படுத்துதல் போன்ற எந்தவொரு நடவடிக்கைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது. குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின்படி, இதுபோன்ற நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தினார்.
இந்த உத்தவுகளை பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினர், சுயோட்சை வேட்பாளர்கள் மற்றும் பங்ககேற்பாளர்கள் கடைபிடிக்கிறார்களா? என்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.