
பால் மற்றும் குழைவு (Cream) உள்ளிட்ட பால் பொருட்கள் மற்றும் தேவையான நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் கலந்து தயாரிக்கப்படும் குளிரூட்டப்பட்ட சிற்றுண்டியாகவும், சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருளாகவும் இருக்கும் பனிக்கூழ் (Ice Cream) எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது என்பது குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. மின்சாரம் வருவதற்கு முன்பாக, குளிர்சாதனப் பெட்டிகளெல்லாம் தோற்றம் பெறுவதற்கு முன்பாகவே, இந்த ஐஸ்கிரீம் தோற்றம் பெற்று விட்டது.
கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமானியப் பேரரசர் நீரோ, தனக்குக் கொடுக்கப்படும் பழச்சாற்றில் பனிக்கட்டிகளைச் சேர்த்துச் சாப்பிட்டார் என்றும், பனிக்கட்டிகளைச் சேகரிப்பதற்காக, தன்னுடைய பணியாளர்களை பனிக்கட்டிகள் நிறைந்த மலைகளுக்கு அனுப்பி, கொண்டு வரச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இதேபோன்று, பண்டைய சீனாவில் கி.பி. 618 முதல் 907ம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த டாங் வம்ச பேரரசர்கள், பால் போன்ற ஒரு கலவையை உறைய வைத்து உண்டனர் என்கிற பதிவுகள் இருக்கின்றன. இவை தவிர்த்து, உலக நாடுகள் பலவற்றிலும் பனிக்கட்டிகள் சேர்ந்த உணவுப்பொருட்கள் பயன்படுத்திய குறிப்புகள் நிறைய இருக்கின்றன. ‘யார் தோற்றுவித்தால் நமக்கு என்ன? இன்று நமக்குச் சுவையான ஐஸ்கிரீம் கிடைக்கிறதே’ என்று அதன் முன் வரலாற்றைக் கடந்து இன்றைய நிலைக்குச் செல்வோம்.
உலகம் முழுவதும் மனிதர்களால் ஆண்டுதோறும் 15.4 பில்லியன் லிட்டர் எனுமளவில் ஐஸ்கிரீம் உட்கொள்ளப்படுகிறது என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. உலகில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் நியூசிலாந்து முதலிடத்தில் இருக்கிறது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நியூசிலாந்திற்குள் நுழைந்த ஐஸ்கிரீமிற்குக் கிடைத்த வரவேற்பில், ஐஸ்கிரீம் அந்நாட்டில் மிகவும் செழிப்பான ஒரு தொழிலாக வளர்ந்திருக்கிறது. நியூசிலாந்தில் சராசரியாக ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு ஆண்டும் 28 லிட்டர் ஐஸ்கிரீமை உட்கொள்கிறார்களாம்.
1866ம் ஆண்டு ஜனவரி 27 அன்று, வெலிங்டனின் எம்பயர் ஹோட்டலின் உரிமையாளரான ஜேம்ஸ் ஆஸ்குட் என்பவர் நியூசிலாந்தில் ஐஸ்கிரீமை முதன் முதலாக விற்பனை செய்த நபராக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறார். அந்த நேரத்தில், நியூ இங்கிலாந்தில் உள்ள உறைந்த ஏரியிலிருந்து அறுவடை செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ் மூலம் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டது.
1870ம் ஆண்டுகளில், ஆஸ்திரேலிய கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் ஹாரிசன், பெரிய அளவில் ஐஸ் தயாரிக்க அனுமதிக்கும் இயந்திரக் குளிர்பதனச் செயல்முறையை உருவாக்கினார். அடுத்த பத்தாண்டுகளில் சிறிய விற்பனையாளர்கள் உள்ளூர் அளவில் ஐஸ்கிரீமை விற்றனர். இருப்பினும், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெரிய அளவில் வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல தோன்றின. நியூசிலாந்து ஐஸ்கிரீம் தொழிலில் செழித்து வளர்ந்தது.
நியூசிலாந்தில் மேய்ச்சல் விவசாய முறை காரணமாக, பால் உற்பத்தி மிகவும் குறைந்த செலவில் உள்ளது. இதனால், பால் பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றிலும், ஐஸ் கிரீம் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. 1990ம் ஆண்டிலிருந்து ஐஸ்கிரீம் தயாரிப்புகள் மற்றும் அதற்கான உற்பத்தி நிறுவனங்கள் அதிகமாகத் தோன்றியுள்ளது. நியூசிலாந்து ஐஸ்கிரீம் நிறுவனங்களும் மக்களுக்குக்குப் பிடிக்கும் நிறங்கள் மற்றும் சுவைகளுடன் பல்வேறு வகையான ஐஸ்கிரீம்களை தயாரித்து சந்தைப்படுத்துகிறது.
நியூசிலாந்தில் பொதுவாக, கூம்பு அல்லது கோப்பையில் நேரடியாகப் பரிமாறத் தயாராக இருக்கும் ஐஸ் கிரீமைக் கொண்ட மொத்தப் பொதிகள், உயர்தரமான பால் சார்ந்த ஐஸ் கிரீமைக் கொண்ட பிரீமியம் டப்பாக்கள், பிரீமியம் பால் இல்லாத ஐஸ்கிரீமை கொண்ட பால் அல்லாத டப்பாக்கள் மற்றும் தனித்தனியாக மூடப்பட்ட புதுமையான குச்சி தயாரிப்புகள் என்று நான்கு வகையான ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்படுகின்றன.
நியூசிலாந்து ஐஸ்கிரீம் மற்றும் உறைந்த இனிப்புப் பொருட்களின் பெரிய ஏற்றுமதியாளராகவும் மாறியுள்ளது. 2021ம் ஆண்டில், இந்நாடு 57.9 மில்லியன் டாலர் ஐஸ்கிரீமை ஏற்றுமதி செய்தது. இவற்றுள் 70 சதவிகிதத்துக்கும் அதிகமாக ஜப்பான் மற்றும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏற்றுமதியுடன் உள்நாட்டிலும் ஐஸ்கிரீம்க்கான நுகர்வும் அதிகமாக இருப்பதால், ஐஸ்கிரீம் தொழில் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
நியூசிலாந்தை தொடர்ந்து, அமெரிக்கா இரண்டாவது இடத்தில் அதிக ஐஸ்கிரீம் நுகர்வைக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு நபரும் ஆண்டுக்கு 20.8 லிட்டர் ஐஸ்கிரீமை உட்கொள்கிறார்கள். அமெரிக்காவிலுள்ள ஐஸ்கிரீம் நிறுவனங்கள் ஆண்டுதோறும் மொத்தம் சுமார் 870 மில்லியன் கேலன் ஐஸ்கிரீம்களை உற்பத்தி செய்கின்றன.
ஆஸ்திரேலியா இப்பட்டியலில் மூன்றாவது பெரிய நுகர்வோராக இருக்கிறது. ஒரு நபருக்கு சராசரியாக 18 லிட்டர் என்று இருக்கிறது. பின்லாந்து நான்காவது இடத்தில் உள்ளது. சராசரியாக இங்கு ஒரு நபருக்கு 14.30 லிட்டர் ஐஸ்கிரீம் என்று இருக்கிறது. ஸ்வீடன் இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இங்கு ஒரு நபருக்கு ஆண்டுக்கு சராசரியாக 12 லிட்டர் ஐஸ்கிரீம் என்று இருக்கிறது. இப்பட்டியலில், இந்தியாவின் தனிநபர் ஐஸ்கிரீம் நுகர்வு சுமார் 1.6 லிட்டராக இருக்கிறது.