தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடிக்கு பிரியாணி விற்பனையாவதாக செய்திகள் வந்துள்ளன.
தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது பிரியாணிதான். ஆன்லைனில் பிரியாணி, கடைக்குச் சென்றால் பிரியாணி, வீட்டில் வெட்டியாக இருந்தால் பிரியாணி என எப்போதுப் பார்த்தாலும் பிரியாணிதான். அசைவம் சாப்பிடுபவர்களுக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி, பீஃப் பிரியாணி என சொல்லிக்கொண்டே போகலாம்.
சைவப்பிரியர்களுக்கும் வெஜ்பிரியாணி, காளான் பிரியாணி என பலவகைகள் இருக்கின்றன. மக்களுக்கு பிரியாணி மீது ஆசை என்று சொன்னால் பத்தாது, மோகம் என்றும் சொல்லலாம். அதற்கு ஒரு உதாரணம் தான் ஆன்லைனில் மக்கள் எவ்வளவு பிரியாணி வாங்கி சாப்பிடுகிறார்கள் என்பதன் அறிக்கை.
தமிழ்நாட்டில் மட்டும் பிரியாணி வர்த்தகம் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பிரியாணிக்கு என்று பிரத்யேகமாக பெரிய பிராண்டட் பெயர்களுடன் இயங்கும் உணவகங்களின் சந்தை 2,500 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. நடுத்தர உணவகங்கள், சாலையோர கடைகள் என விற்கப்படும் பிரியாணிக்கான சந்தைமதிப்பு 7,500 கோடி ரூபாயாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை வாசிகள் மிகவும் அதிகமாகவே பிரியாணி சாப்பிடுகிறார்கள். மொத்த வர்த்தகத்தில் இப்பகுதியில் மட்டும் 50 சதவிகித பிரியாணி விற்பனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
ஹோட்டல் துறையினர் எத்தனை உணவகங்கள் இருந்தாலும், அத்தனையிலும் பிரியாணிக்குதான் அதிகம் மவுசு என்கிறார்கள். முன்பெல்லாம் எதாவது நிகழ்ச்சிக்கும் ஞாயிற்றுக்கிழமை ஆனால் மட்டும்தான் பிரியாணி. ஆனால் இப்போது. வீட்டி சமைக்காத அத்தனை பேருமே கடையில் பிரியாணிதான் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
பிரியாணி என்பது வெறும் உணவல்ல அது ஒரு எமோஷன் என்று மீம்களெல்லாம் உள்ளது. அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? வருத்தமோ, மகிழ்ச்சியோ, கொண்டாட்டமோ, குடும்ப விழாவோ.. அனைத்திலும் ஒரு மருந்தாகவும் விருந்தாகவும் விளங்குகிறது இந்த பிரியாணி.
ஒரு உணவாக மட்டுமே இருந்த பிரியாணி, எவ்வாறு, எப்போது இப்படி ஒரு எமோஷனலாக மாறியது என்று தெரியவில்லை. ஆனால், இதனால்தான் கோடிக்கணக்கில் விற்பனையாகிறது. பேசாமல், நாமும் ஒரு பிரியாணி கடையை போட்டு ஜம்முன்னு சம்பாரிக்கலாம் போலப்பா….!!