

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று விடியற்காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாளை (டிசம்பர் 02) நடைபெறவிருந்த சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொடர் கனமழை காரணமாக பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடாமல் பெய்து வரும் கனமழையால், ஆங்காங்கே மழைநீர் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. கனமழையிலும் இன்று ஒரு சில பள்ளிகள் இயங்கியதால் மாணவர்களும், பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர்.
தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 02) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் நாளை நடைபெறவிருந்த சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று கனமழை பெய்து வரும் நிலையில், நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர் கனமழை காரணமாக சென்னையில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று இரவு 10 மணி வரை கனமழை தொடரும் என்பதால், ரெட் அலர்ட்டை அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மேலும் தமிழகத்தில் சிவகங்கை மற்றும் நாகை 11 மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் அதிகபட்சமாக செங்குறன்றத்தில் 16 செ.மீ. மழை பதிவானது. இதனைத் தொடர்ந்து மீஞ்சூரில் 13 செ.மீ. மற்றும் கும்முடிபூண்டியில் 10 செ.மீ. மழையும் பதிவானது.