

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. அவ்வகையில் தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சியை பற்றி பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார்.
இலங்கைத் தமிழர் இனப் படுகொலையில், காங்கிரஸ் மௌன சாட்சியாக இருந்தது எனவும், தமிழர்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது எனவும் சீமான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செல்வப்பெருந்தகை கூறுகையில், “சுமார் 140 ஆண்டுகள் பழமையான கட்சி காங்கிரஸ். நேற்று முளைத்த காளான் தான். இவர் இப்போது அரசியலுக்கு வந்துவிட்டு, காங்கிரஸ் பற்றி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இனி சீமான் காங்கிரஸை பற்றி பேசக்கூடாது. அதன் பின் நாங்களும் பேசினால் அது அவருக்குத்தான் சங்கடம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சீமான் எப்படி வெற்றி பெற முடியும்? அவர் கட்சியைச் சார்ந்த ஒருவரும் வெற்றி பெற மாட்டார்கள்” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.