.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் வாடிக்கையாளர்களுக்குப் புதுமையான சேவைகளை வழங்கி வரும் அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பி.எஸ்.என்.எல் (BSNL), மற்ற தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி பட்ஜெட்டில் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ள இந்நிறுவனம், தற்போது 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ரூ. 1 லட்சம் இலவச விபத்து காப்பீடுடன் கூடிய ரூ. 2,449 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதாவது, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களைத் தொடர்ந்து உயர்த்தி வரும் சூழலில், பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குச் சுமையைக் குறைக்கும் வகையில் நீண்ட காலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
ரூ. 2,449 ரீசார்ஜில், முழுமையாக 365 நாட்கள் (ஒரு வருடம்) செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், இந்தியா முழுவதும் எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற வாய்ஸ் காலிங் பேசலாம்.
இத்திட்டத்தின் மிக முக்கியமான மற்றும் தனித்துவமான அம்சம் என்னவென்றால், வாடிக்கையாளர்களுக்குத் தொலைத்தொடர்புச் சேவையுடன் சேர்த்து கூடுதல் பாதுகாப்பாக, பிரபல அரசு காப்பீட்டு நிறுவனமான தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி (OICL) நிறுவனத்துடன் இணைந்து இலவச காப்பீடும் வழங்கப்படுகிறது.
அதன்படி, இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தனிநபர் விபத்துக் காப்பீடு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும். விபத்துகள், தீ விபத்துகள் , பாம்பு கடித்தல் , மின்னல் தாக்குதல் மற்றும் மின்சார ஷாக் போன்ற எதிர்பாராத விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இந்த காப்பீட்டு தொகையைப் பெற முடியும்.
அதாவது, மொபைல் ரீசார்ஜ் சேவையுடன் சேர்த்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இலவச விபத்துக் காப்பீட்டை வழங்கவுள்ளதாக பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.
இது தவிர, ஆன்லைன் மோசடிகள் மற்றும் பிஷிங் போன்றவைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு ரூ. 10,000 வரை சைபர் இன்சூரன்ஸ் பாதுகாப்பும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பயனரின் பிஎஸ்என்எல் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம்.
பிஎஸ்என்எல் திட்டம்- ரூ. 2,449 திட்டத்தின் விவரங்கள்:
வேலிடிட்டி (Validity): 365 நாட்கள்
டேட்டா (Data): தினமும் 2 ஜிபி டேட்டா (மொத்தம் 730 ஜிபி). டேட்டா தீர்ந்த பிறகு 40 kbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.
காலிங் (Calls): அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள்.
எஸ்எம்எஸ் (SMS): தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்.
இன்சூரன்ஸ் சலுகை: ஒரியண்டல் இன்சூரன்ஸ் (Oriental Insurance - OICL) நிறுவனத்துடன் இணைந்து ரூ. 1 லட்சம் தனிநபர் விபத்து காப்பீடு மற்றும் சைபர் இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்கப்படுகிறது.
சைபர் மோசடி: ஆன்லைன் மோசடிகள் மற்றும் பிஷிங் போன்றவைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு ரூ. 10,000 வரை சைபர் இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்கப்படுகிறது.
காப்பீடு பெற என்ன செய்ய வேண்டும்:
இந்த இன்சூரன்ஸ் சலுகை வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்த 24 மணி நேரத்திற்குள் தானாகவே ஆக்டிவேட் (active) ஆகிவிடும். 365 நாட்களுக்கும் இந்த இன்சூரன்ஸ் கவரேஜ் தொடரும். இதற்காக வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
விபத்து அல்லது சைபர் மோசடி போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் (விபத்து எனில் 48 மணி நேரத்திற்குள்ளும், சைபர் மோசடி எனில் 7 நாட்களுக்குள்ளும்) காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
விபத்து மரணம் தொடர்பான கோரிக்கைகளை 48 மணி நேரத்திற்குள் 1800 11 8485 என்ற எண்ணுக்கோ அல்லது Claims.bsnl@orientalinsurance.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தெரிவிக்க வேண்டும்.