
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம்தேதி மத்திய நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும். இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மோடி அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சியின் 2வது பட்ஜெட்டாகும். ஒரு இடைக்கால பட்ஜெட் உட்பட இது நிர்மலா சீதாராமனின் 8வது பட்ஜெட் தாக்கல் ஆகும். பட்ஜெட் தொடங்குவதற்கு முன் பேசிய பிரதமர் மோடி, பொதுமக்களை மனதில் கொண்டு பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நோக்கங்கள் நிறைவேறும் வகையில் இருக்கும் என்றும் கூறினார்.
அதன் பின்னர் 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தது வருமான வரி விலக்கு உச்சவரம்பு பற்றி ஏதாவது அறிவிப்பு வருமா என்பதை தான். அந்த வகையில் மாத சம்பளம் வாங்குபவர்கள், நடுத்தர மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட்டி அறிவிப்பு இருந்தது.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 2023-ல் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி உச்சவரம்பு தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் குறைந்த அளவில் மாத சம்பளம் வாங்குபவர்கள் பயன் பெறுவார்கள்.
ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி கிடையாது. இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் பெறுவோர் ரூ.80,000 வரை வரிச்சலுகை பெற முடியும் என்று நிதியமைச்சர் கூறினார். அதுமட்டுமில்லாமல் வருமான வரி விலக்கு உச்சவரம்பால் மாத வருமானம் ரூ.1 லட்சம் வரை பெறக்கூடியவர்கள் பலனடைவர்.
மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய தனிநபர் வருமான வரிமுறையை பற்றி பார்க்கலாம்.
* ரூ.4 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை. அதேபோல் ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 % வரி விதிப்பும், ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 10 % வரி விதிப்பும், ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 15% வருமான வரியும் செலுத்த வேண்டும்.
* அதே போல் ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 20% வருமான வரி செலுத்த வேண்டும்.
* ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை வருமான பெறுபவர்கள் 25% வருமான வரியும், ரூ.24 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30% வருமான வரியை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
* 5 லட்சம் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவை சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு 2 கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
* பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.
* வருமான வரித்துறையில் 100 சட்டப்பிரிவுகளை குற்றமற்றதாக ஆக்கும் வகையில் ஜன்விஷ்வாஷ் 2.0 மசோதா கொண்டுவரப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை, ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் நீடித்தது, இதற்கு முந்தைய ஆண்டு 1 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.