

இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விற்பனையில் வர்த்தக லாப வரம்பை குறைக்கும் முடிவில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன்படி மருந்துகளின் அதிகபட்ச விற்பனை விலையின் (Maximum Retail Price) லாப வரம்பை 30% ஆக கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக காப்புரிமை பெறப்பட்ட மருந்துகள் உள்பட 110 வகையான புற்றுநோய் மருந்துகள் விலைக் குறைப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளன.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகள், இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், பிராண்டட் மற்றும் ஜெனரிக் மருந்துகள் என அனைத்து மருந்துகளுக்கும் மத்திய அரசின் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும்.
புதிய விலை வரம்பு அக்டோபர் மாத இறுதிக்குள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையால், புற்றுநோயாளிகளுக்கு ஓராண்டுக்கு ரூ.2,500 கோடி வரை சேமிப்பு ஏற்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
புற்றுநோய் மருந்துகளின் உற்பத்தி விலைக்கும், கடைகளில் விற்கப்படும் அதிகபட்ச விற்பனை விலைக்கும் இடையே 200% - 700% வரை அதிகப்படியான லாப வரம்பு வைக்கப்பட்டு வருகிறது.
பொதுநலனைக் கருத்தில் கொண்டு இந்த விலை வரம்பைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையமும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன.
இதன்படி மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை 2013, பிரிவு 19 இன் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, விலைக் குறைப்பு வரம்பை நிர்ணயிக்க முடிவெடுத்துள்ளது மத்திய அரசு.
மருந்து உற்பத்தி அளவைக் குறைக்காமல், தொடர்ந்து சராசரி உற்பத்தியை மருந்து நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும் என்ற விதியும் இதன் கீழ் உறுதி செய்யப்படுகிறது.
புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு குறித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), 42 புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை சோதித்தது. இந்த சோதனையில் ஒருசில மருந்துகளின் விலை 85% - 90% வரை சரிந்ததால், நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு ஓராண்டுக்கு சுமார் ரூ.1,000 கோடி மிச்சமானது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாகவே தற்போது 110 மருந்துகளுக்கு லாப வரம்பைக் கட்டுப்படுத்தும் முயற்சியை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.
30% லாப உச்சவரம்பு:
* மருந்து உற்பத்தியாளர், விநியோகஸ்தருக்கு விற்பனை செய்யும் விலையில் இருந்து சில்லறை விற்பனை விலை (MRP) வரை இடைத்தரகர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் நிர்ணயிக்கும் மொத்த லாப வரம்பு 30%-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* இனி தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள், இனி நோயாளிகளுக்கு அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்ய முடியாது.
நோயாளிகளுக்கு கிடைக்கும் பலன்கள்:
* விலை உயர்ந்த பல புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலை கணிசமாக குறையும்.
* லாப உச்ச வரம்பு கட்டுப்படுத்தப்பட்டு, விலைக் குறைப்பு அமலுக்கு வரும் போது, நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,500 கோடி வரை மருத்துவ செலவு மிச்சமாகும்.
கண்காணிப்பு:
புதிய லாப ஊச்ச வரம்பு அமலுக்கு வந்த பிறகு, விதியை மீறி அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை NPPA-வின் ‘IPDMS’ மற்றும் ‘Pharma Sahi Daam’ உள்ளிட்ட செயலிகள் மூலம் கண்காணிக்கப்படும். இதில் யாரேனும் அதிக விலைக்கு மருந்துகளை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.