

வருங்காலத்தில் நமது தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பணத்தை இரட்டிப்பாக்கவும் முதலீடுகள் தான் மிகச் சிறந்த தேர்வு. கையில் ரொக்கப் பணத்தை வைத்திருப்பதைக் காட்டிலும் தங்கம், வெள்ளி, அஞ்சல் சேமிப்பு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதைத் தான் இத்தனை நாட்களாக பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைத்து வந்தனர். ஆனால் தற்போது உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், முதலீடுகளைக் காட்டிலும் வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது கையில் இருக்கும் ரொக்கப் பணத்திற்கே மதிப்பும், பாதுகாப்பும் அதிகம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இத்தனை நாட்களாக காலம் தாழ்த்தாமல் முதலீடு செய்வது தான் லாபத்தை அதிகரிக்கும் எனக் கூறி வந்த பொருளாதார வல்லுநர்கள், திடீரென ரொக்கப் பணத்திற்கான மதிப்பு உயரும் எனக் கணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கணிப்பின் மூலம் ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளுக்கு ஆபத்து நேருமா என்ற பயமும் தற்போது எழத் தொடங்கியுள்ளது.
அடுத்தாண்டு முதல் வணிகர்களுக்கு யுபிஐ பரிமாற்றங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட இருப்பது, ரொக்கப் பணத்தை மீண்டும் சந்தையில் பயன்படுத்த வழிவகுக்கும். இதனால் சந்தையில் ரொக்கப் பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு.
பொருளாதார மந்த நிலை மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக அடுத்த 2 ஆண்டுகளில் கையில் இருக்கும் ரொக்கப் பணம் தான் பாதுகாப்பானது. குறிப்பாக சந்தையைத் தீர்மானிக்கப் போவதே இந்த ரொக்கப் பணம் தான் எனவும் கூறப்படுகிறது.
தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட பங்குகளில் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், வங்கிக் கணக்கில் பணத்தை சேமித்து வைப்பது நன்மையளிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏறுவதும், இறங்குவதுமாகவே உள்ளது. பங்குகளிலும் நீண்ட கால முதலீடுகளுக்கு தான் நல்ல லாபம் கிடைக்கும்.
இப்படியான சூழலில் பொருளாதார மந்த நிலை உருவானால், அது முதலீடுகளின் லாபத்தை பாதிக்கும். உலகளாவிய போர்ச் சூழல், டாலரின் மதிப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்புகள் உலக சந்தையை கடுமையாக பாதிக்கக் கூடும். அடுத்த 2 ஆண்டுகளுக்கு வீண் செலவுகள் செய்யாமல் இருப்பதே உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
உதாரணமாக, மாதந்தோறும் வீண் செலவுகளை குறைந்தபட்சம் ரூ.1,000 வரை கட்டுப்படுத்தினால் கூட அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.24,000-ஐ சேமிக்க முடியும்.
பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு படி, ஏற்கனவே உள்ள முதலீடுகளை நிறுத்த வேண்டாம்; ஆனால் புதிய முதலீடுகளை தற்சமயத்திற்கு தொடங்க வேண்டாம் என்பதே வல்லுநர்களின் கருத்து. அந்த முதலீட்டுப் பணத்தை ரொக்கமாக வைத்திருங்கள் அல்லது வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டு விடுங்கள்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உலக சிக்கன தினம் அக்டோபர் 30-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சிக்கன தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் யாரும் கடன் வாங்க வேண்டாம் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் விஜய் கூறுகையில், “ஒவ்வொருவரும் அவரவர் நிதி நிலைமைக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். எப்போதும் ஆடம்பரத்திற்காக கடன் வாங்க கூடாது. ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப சேமித்து வந்தால் சிறிய தொகையும் நம் எதிர்காலத்திற்கு உதவும். அஞ்சல் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்து, சிறப்பான வாழ்வுக்கு வழிவகுப்போம்” என அறிவுரைத்தார் முதல்வர் விஜய்.
ஒருபுறம் அடுத்த 2 ஆணடுகளுக்கு வீண் செலவுகளை செய்ய வேண்டாம்; ரொக்கப் பணத்திற்கே பாதுகாப்பு அதிகம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மறுபுறம் முதல்வர் விஜய் கடன் வாங்க வேண்டாம்; சேமிப்பைத் தொடங்குங்கள் என்று அறிவுரைத்துள்ளார்.
எதுவாக இருந்தாலும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நம்முடைய வருங்காலத்திற்கு மிகவும் நல்லது. ஒருவேளை புதிய முதலீட்டைத் தொடங்குவதாக இருந்தால், பொருளாதார ஆலோசகரை அணுகி, ஆலோசனை பெற்றுத் தொடங்குங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.