

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) டோட்லா டெய்ரி (Dodla Dairy) மற்றும் உயிர் ஆர்கானிக் (UEIR Organic Foods)ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீதும் கடுமையான உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களுக்காக வழக்குப்பதிவு (Prosecution) செய்ய அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக விற்பனையாகும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான டோட்லா டெய்ரி நிறுவனத்தின் பால் தரமானதாக இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல் உயிர் ஆர்கானிக் நிறுவனத்தின் மஞ்சள் நிற உலர் திராட்டை சாப்பிடுவது நல்லதல்ல என்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள டோட்லா டெய்ரி நிறுவனத்தின் 'ஃபுல் கிரீம் பால்' (Full Cream Milk) மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, முதலில் அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கொழுப்புச் சத்து (Milk Fat) குறைவாக இருந்தது கண்டறியப்பட்டு, அது 'தரமற்றது' (Substandard) என அறிவிக்கப்பட்டது.
டோட்லா (Dodla Dairy) பால் மற்றும் பால் பொருட்கள் சென்னை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நிறுவனத்தின் மேல்முறையீட்டிற்குப் பிறகு, இந்த மாதிரி 'மத்திய உணவு பரிந்துரை ஆய்வகத்திற்கு' (Referral Food Laboratory) அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட இறுதி சோதனையில், அந்தப் பாலில் டிடெர்ஜென்ட் (Detergent) மற்றும் காஸ்டிக் சோடா (Caustic Soda) கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பால் உடல் நலத்திற்கு 'ஆபத்தானது' (Unsafe) என FSSAI தெரிவித்துள்ளது.
ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் உயிர் ஆர்கானிக் ஃபுட்ஸ் (UEIR Organic Foods)'மஞ்சள் நிற உலர் திராட்சை' (Yellow Raisins) மாதிரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சங்கள் (Pesticide Residues) இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலர் திராட்டை கெட்டுப்போகாமல் இருக்க, அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாதிரி எடுத்ததில் மஞ்சள் உலர் திராட்சையில் அதிகப்படியான கெமிக்கல் கலக்கப்பட்டதும், பூச்சிக்கொல்லிக்கு பயன்படுத்தக்கூடிய எச்சங்கள் அதிகமாக இருந்ததும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அசோக்சிஸ்ட்ரோபின் (Azoxystrobin), புளூபிராம் (Fluopyram), மற்றும் பிளக்ஸாபிராக்சாட் (Fluxapyroxad) போன்ற ஆபத்தான பூச்சிக்கொல்லி எச்சங்கள் இதில் கலந்திருந்ததால், இதனை மனிதர்கள் சாப்பிடுவது உடல்நலத்திற்குப் பாதுகாப்பானது அல்ல என தெரியவந்ததையடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த உலர் திராட்சையை பொறுத்தவரை மக்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இந்த நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும், மேலும் உலர் திராட்சையை விற்பனைக்கு பயன்படுத்தவும் தடை விதித்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பாகவும் அடுத்த கட்ட பரிசோதனைக்கு அந்தந்த மாநிலங்களில் இருக்கக்கூடிய உணவு பாதுகாப்பு துறை மேலும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தரமற்ற உணவுப்பொருள் தயாரித்த டோட்லா டெய்ரி, உயிர் ஆர்கானிக் நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய மத்திய உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரைத்துள்ளது.
இவற்றுடன் சேர்த்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய சோதனையில், புகழ்பெற்ற பிரியா கோல்டு (Priyagold) பிஸ்கட்டுகளை தயாரிக்கும் சூர்யா ஃபுட் அண்ட் அக்ரோ (Surya Food & Agro Ltd) நிறுவனம், பிஸ்கட்டில் நார்ச்சத்துக்காக (Source of fibre) மனிதர்கள் சாப்பிட தகுதியற்ற, மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படும் தவிட்டைப் (Cattle Feed Bran) பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிஸ்கட் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த தவிடு மூட்டைகளில், அது "கால்நடைகளுக்கான தீவனம், மனித நுகர்வுக்கு உகந்தது அல்ல" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொழிற்சாலையில் பூச்சிக் கட்டுப்பாடு (Pest control) இல்லாமை, மூலப்பொருட்களைப் பிரித்து வைப்பதில் முறையற்ற தன்மை மற்றும் ஊழியர்களின் மோசமான தனிநபர் சுகாதாரம் போன்ற தீவிர விதிமீறல்களும் கண்டறியப்பட்டன. இத்தகைய கடுமையான உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களுக்காக, அந்த நிறுவனத்தின் FSSAI உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அதன் மீது சட்டப்பூர்வ குற்றவியல் நடவடிக்கை (Prosecution) தொடங்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் தங்களின் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுடன் இருக்கவும், இத்தகைய தயாரிப்புகளை வாங்குவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.