

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் மக்களை சந்திப்புக் கூடடம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், மக்கள் முன்னிலையில் பேசினார். இந்தக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், நேற்று டிசம்பர் 29ஆம் தேதி தவெக நிர்வாகிகள் டெல்லியில் ஆஜராகினர். சுமார் எட்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் சிபிஐ கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தவெக நிர்வாகிகள் திணறினர்.
இந்நிலையில் இன்றும் விசாரணை தொடர உள்ளதால், இந்த வழக்கில் இருந்து வெளிவர தவெக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்த சிபிஐ, தவெக நிர்வாகிகளுக்கு நேரில் ஆஜராகும்படி அண்மையில் சம்மன் அனுப்பியது.
இதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் தலைமை பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் நேற்று சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றனர். மேலும் கரூர் மாவட்ட செயலாளரான மதியழகனும் சிபிஐ விசாரணையில் ஆஜராகினார்.
தவெக நிர்வாகிகள் மட்டுமின்றி கரூா் மாவட்ட ஆட்சியா் எம்.தங்கவேல், மாவட்ட கண்காணிப்பாளா் ஜோஷ் தங்கய்யா, டிஎஸ்பி வி. செல்வராஜ், ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், கரூா் நகர காவல் ஆய்வாளா் ஜி.மணிவண்ணன் ஆகியோரும் சிபிஐ விசாரணையில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற நிலையில், இன்றும் விசாரணையைத் தொடரவிருக்கிறது சிபிஐ. கரூர் பரப்புரைக் கூட்டத்திற்கு தலைவர் விஜய் தாமதமாக வந்தது ஏன்? அவருடைய தாமதத்திற்கு என்ன காரணம்? கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது? என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன? உள்ளிட்ட பல கேள்விகள் சிபிஐ தரப்பில் முன்வைக்கப்பட்டன. சிபிஐ விசாரணையில் தவெக நிர்வாகிகள் பதிலளிக்கத் திணறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணையில் என்ன நடந்தது என்பதை தெரிவிக்கும் நேரம் இதுவல்ல என்று இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தவெக நிர்வாகிகளை சிபிஐ அதிகாரிகள் இன்றும் விசாரிக்க உள்ளனர். இந்நிலையில் அடுத்ததாக தவெக தலைவர் விஜய்யை சிபிஐ எப்போது விசாரிக்கும் என்ற தகவல் விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கு முன்னதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளை சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். இந்நிலையில் கரூரில் விஜய்யை விசாரிப்பது, பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும் எனக் கருதி சென்னையில் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையின் தற்போது மீண்டும் தவெக நிர்வாகிகளை டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இந்நிலையில் அடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை சிபிஐ அதிகாரிகள் எங்கு, எப்போது விசாரிக்க உள்ளனர் என்ற தகவல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.