

செல்போனில் உள்ள கேமரா மற்றும் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியாமல் அவர்களைக் கண்காணித்து வீடியோ பதிவு செய்யும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் குழந்தைகளைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பேரண்டல் கண்ட்ரோல் (Parental Control) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பெண் ஒருவரை ரகசியமாகக் கண்காணித்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன.
இந்த தொழில்நுட்பங்கள் நமக்கு பல வழிகளில் உதவியாக இருந்தாலும், சில சமயங்களில் அவையே நமக்கு பெரும் ஆபத்தாகவும் மாறி விடுகிறது. தகவல் தொடர்பு, வங்கி பரிவர்த்தனை, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு உதவும் செல்போன்கள், சில நேரங்களில் சைபர் குற்றவாளிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக நாம் பயன்படுத்தும் செல்போன்களின், கேமரா, மைக் ஆகியவற்றை நமக்கே தெரியாமல் ரகசியமாக கண்காணிக்கும் தொழில்நுட்பங்களை பைசர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
நீங்கள் பயன்படுத்தும் செல்போன் ஸ்கீரினில் பேட்டரி சிம்பலுக்கு அருகே சந்தேகப்படும்படியாக நீலம், ஆரஞ்சு அல்லது பச்சை நிறத்தில் சிறிய புள்ளி வடிவில் லைட் (Glowing indicator dot) எரிந்தால் உஷாராக இருக்க வேண்டும்.
ஏனெனில் உங்களின் செல்போன் ஏதோ ஒரு ஆப் அல்லது ரகசிய தொழில்நுட்பம் மூலமாக வேறு ஒருவரால் கண்காணிக்கப்படுகிறது என்பதே அதன் அர்த்தமாகும். இப்படி செல்போனில் தெரிந்த கலர் புள்ளியால் உஷாரான ஒரு பெண் தனது கணவரின் கடையில் வேலை பார்த்த நபராலேயே பல மாதங்களாக கண்காணிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னை வியாசர்பாடியில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது; இதில் கணவரின் நகைக் கடையில் பணிபுரிந்த கணேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணேஷ் என்ற அந்த நபர் குழந்தைகளைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணின் செல்போன் கேமரா மற்றும் மைக்ரோஃபோனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து அவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையே, சில நாட்களாக அந்தப் பெண்ணின் செல்போனில் செயலிகள் சரிவர இயங்காமல் இருந்ததுடன், பேட்டரி அருகே பச்சை மற்றும் ஆரஞ்சு நிறப் புள்ளிகளும் (Color Dots) அடிக்கடி தோன்றியுள்ளன. இதனால் சந்தேகமடைந்த அவர், தனது மகளிடம் செல்போனைக் கொடுத்து ஆய்வு செய்யக் கேட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஸ்கிரீன் கார்டு (Screen Guard) ஒட்டுவதற்காகக் கொடுத்தபோது, செல்போனின் கடவுச்சொல்லை (Password) வாங்கிய கணேஷ் (வழக்கமாக ஸ்கிரீன் கார்டு ஒட்டுவதற்கு கடவுச்சொல் தேவையில்லை), அதில் 'பேரண்டல் கண்ட்ரோல்' (Parental Control) செயலியை நிறுவித் தனது மின்னஞ்சல் முகவரியை இணைத்துள்ளார்.
அதன் மூலம் அந்தப் பெண்ணின் செல்போன் நடவடிக்கைகள் மற்றொரு செல்போனில் கண்காணிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
அந்த நபர் கடந்த ஆறு மாதங்களாக அந்தப் பெண்ணைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததும், ஆபாசமான முறையில் வீடியோக்களைப் பதிவு செய்ததும் விசாரணையில் உறுதியானது. செம்பியம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கணேஷ் என்கிற பிரதமேஷ் மேத்கரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
செல்போன் பேட்டரி அருகே நீலம், ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் புள்ளிகள் தோன்றினால் அதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதைப் பொதுமக்கள் கவனிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு மற்றும் செல்போன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்:
ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐபோன்களில் (iPhone) கேமரா அல்லது மைக்ரோஃபோன் பயன்பாட்டில் இருக்கும்போது திரையின் மேல் பகுதியில் பச்சை அல்லது ஆரஞ்சு நிறப் புள்ளிகள் தோன்றும். நீங்கள் கேமரா அல்லது ஆடியோ செயலிகளைப் பயன்படுத்தாத நேரத்திலும் இந்தப் புள்ளிகள் தெரிந்தால், உடனடியாக எந்தச் செயலி பின்னணியில் இயங்குகிறது என்பதைச் சரிபார்க்கவும்.
செல்போனைப் பழுதுபார்க்கவோ அல்லது ஸ்கிரீன் கார்டு ஒட்டவோ கொடுக்கும்போது கடவுச்சொல்லைப் பகிரக் கூடாது.
உங்கள் செல்போன் செட்டிங்ஸில் (Settings) உங்களுக்குத் தெரியாத மின்னஞ்சல் கணக்குகள் (Google/Apple ID) அல்லது 'Parental Control' போன்ற கண்காணிப்புச் செயலிகள் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதை அவ்வப்போது பரிசோதிக்கவும்.