

வாட்ஸ்ஆப்பில் வரும் ‘இவரைத் தெரியுமா?’ (Do you know him/her?) போன்ற அறிமுகமில்லாத புகைப்படங்கள் மற்றும் செய்திகளைக் கிளிக் செய்தால் மால்வேர் (Malware) எனப்படும் நச்சுநிரல் பதிவிறங்கி, உங்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி வங்கிக் கணக்கைச் காலி செய்யும் புதிய சைபர் மோசடி (வாட்ஸ்அப் மோசடி) தற்போது அரங்கேரி வருகிறது.
டெக்னாலஜியின் பயன்பாடு அதிகாமகிவிட்ட இந்த நவீன உலகத்தில், அதே டெக்னாலஜியை வைத்தே அதிகமான கொள்ளை சம்பவம் நடைபெற்றுவருவது, தொடர்ந்து அதிகரித்துகொண்டு தான் இருக்கிறது. அண்மைக் காலமாக, பயனர்கள் எந்தவொரு லிங்க்கையும் கிளிக் செய்யாமலோ அல்லது OTP-ஐ பகிராமலோ கூட கணக்குகளை முடக்கும் அதிநவீன "நோ-கிளிக்" (Auto Execution File) தாக்குதல்கள் வரை மோசடி நபர்கள் தங்கள் உத்திகளை மாற்றியுள்ளனர்.
தற்போது வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் நடத்தப்படும் சைபர் மோசடிகள் இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு சில மாதங்களாக, இணையக் குற்றவாளிகள் அப்பாவி மக்களையும் அவர்களது வங்கிக் கணக்கையும் குறிவைத்து சில நுணுக்கமான மோசடிகளை நடத்தி வருகிறார்கள்.
அதில் தற்போது புதுவித மோசடியானது, இந்தியாவிலும் உலக அளவிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்களை குறி வைத்து நடத்தப்படுகிறது.
அதாவது தெரியாத நம்பரில் இருந்து ‘இவரைத் தெரியுமா?’ என ஒரு மங்கலான புகைப்படம் உங்கள் வாட்ஸ்ஆப்பில் வந்து, அதற்கு முன்பு, எப்படி இருக்கிறீர்கள்? நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் என்று தகவலும் வந்தால், நிச்சயம் யாராக இருந்தாலும் அந்த இமேஜை திறக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
அதாவது, பார்ப்பதற்கு சாதாரண படம் அல்லது வாழ்த்துச் செய்தி போல் இருக்கும் புகைப்படத்தில் நச்சுநிரல் மறைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்தப் படத்தைத் திறக்க அல்லது பதிவிறக்க கிளிக் செய்தவுடன், சைபர் குற்றவாளிகள் உங்கள் தொலைபேசியை ரகசியமாகக் கட்டுப்படுத்தத் தொடங்குவார்கள்.
பின்னர் உங்கள் போனில் உள்ள குறுஞ்செய்திகள், ஓடிபி (OTP) மற்றும் வங்கிச் செயலிகளைக் கண்காணித்து, உங்கள் வங்கிக் கணக்கில் ஒற்றை ரூபாய்கூட மிச்சம் இல்லாமல் அனைத்தையும் சில நிமிடங்களில் கொள்ளையடிப்பார்கள் என்று சைபர் பாதுகாப்புத் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சைபர் பாதுகாப்பு குறித்து இதுவரை 'மெசேஜ்கள், லிங்குகள் வந்தால் கிளிக் செய்ய வேண்டாம்' என்றுதானே எச்சரிக்கை வந்தது என நினைத்துக்கொண்டு, 'வெறும் புகைப்படம் தானே வந்திருக்கிறது' என்று மக்கள் ஏமாற வேண்டாம். காரணம், இதுபோன்ற தெரியாத நபர்களிடமிருந்து வரும் படங்களை நீங்கள் பதிவிறக்கம் செய்யும் போது, உங்கள் ஸ்மார்ட்போனில் உங்களுக்குத் தெரியாமலேயே தீம்பொருளை (malware) நிறுவக்கூடும்.
அவ்வாறு செல்போனில் தீங்கிழைக்கும் மென்பொருள், உங்களது வங்கிச் செயலிகளுக்குள் ஊடுருவி, கடவுச்சொற்களைத் திருடி, அதில் உள்ள பணத்தை பரிமாற்றம் செய்ய மோசடியாளர்களுக்கு துணைபுரியலாம் என்பதால், இணையப் பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து எந்த தகவல் வந்தாலும் உடனடியாக அந்த லிங்குகள், மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்களை திறக்கவோ பதிவிறக்கவோ வேண்டாம். அதாவது, கிளிக் செய்யும் வடிவில் என்ன வந்தாலும் அதனை கிளிக் செய்யவே வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகளை உடனே பிளாக் செய்து வாட்ஸ்ஆப்பில் புகார்ளியுங்கள்.
இதுபோன்ற மோசடிகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசாங்கம் தொடர்ந்து வேலை செய்துவரும் நிலையில், வாடிக்கையாளர்களும் சில எளிதான வழிகள் மூலம் இந்த மோசடியில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
பாதுகாப்பு வழிமுறைகள் :
வாட்ஸ்ஆப் செட்டிங்ஸில் மீடியா தானாகப் பதிவிறங்குவதை (Auto-download) உடனே நிறுத்துங்கள்.
அதாவது வாட்ஸ்ஆப் செட்டிங்கில் சென்று ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா என்பதை கிளிக் செய்து, மீடியா ஆட்டோ டவுன்லோடு என்ற வாய்ப்பை ஆப் செய்து விடுங்கள்.
மொபைல் டேட்டா, வை-ஃபை, ரோமிங் என எதிலும் ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷனை அணைத்து விடவும்.
அதேபோல் உங்கள் வாட்ஸ் அப்பில் “two-factor"அங்கீகாரத்தை ஆன் செய்து வைத்துகொள்ளுங்கள். அதற்கான வழியாக ( Open WhatsApp Settings > Tap Account > Two-step verification > Enable) என்பதை நீங்கள் உறுதிசெய்துகொண்டால், உங்கள் கணக்கில் உள்நுழையும்போது உங்கள் பாஸ்வேர்டுடன், சரிபார்ப்புக் குறியீட்டையும் உள்ளிட அனுமதி கேட்கும்.
நம்மை பற்றிய தகவல் எப்படி வெளியே போகிறது என்று யோசிக்க வேண்டாம், எங்கோ எவர்மூலமோ கசியும் டேட்டாபேஸ் மூலம் தான் நம்மை பின் தொடர்வார்கள். அதனால், வாட்ஸ்அப் குரூப்களுக்கான செட்டிங்ஸிலும் சென்று, குரூப்பில் சேர்ப்பதற்கான அனுமதியில் எவரிஒன் என்பதை மாற்றி மை காண்டாக்ட்ஸ் என்று மாற்றி வையுங்கள்.