எச்சரிக்கும் சைபர் கிரைம்..! வாட்ஸ்அப் மெசேஜிக்கு ‘NO’ என பதிலளித்தால் உங்க பணம் ‘அபேஸ்’...!!

வங்கிக் கணக்கில் பணம் கழிந்ததாகக் கூறி, ‘NO’ எனப் பதில் அனுப்பச் சொல்லும் போலி வாட்ஸ்அப் மெசேஜ்கள் குறித்து காவல் துறை எச்சரித்துள்ளார்.
வாட்ஸ்அப் மோசடி
வாட்ஸ்அப் மோசடிAI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

வாட்ஸ்அப்பில் ‘NO’ என்று ஒரு சாதாரண மெசேஜ் அனுப்புவதன் மூலமே வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படலாம் என்ற எச்சரிக்கை அண்மையில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

'டிஜிட்டல் கைது' மோசடி, வாகனத்துக்கான போலி அபராத மோசடி வகையில், தற்போது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக, 'வாட்ஸ்அப்' தகவல் பரிமாற்ற செயலி மூலம் போலி குறுஞ்செய்தி அனுப்பி பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து, 'வாட்ஸாப்'புக்கு, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை எடுக்கப்பட்டதாக முதலில் போலி தகவல் வரும்.

அதை தொடர்ந்து, இந்த பணப் பரிவர்த்தனையை நீங்கள் செய்யவில்லை என்றால் உடனே, 'நோ' என, பதில் அனுப்பும்படி மற்றொரு தகவல் வரும்.

கணக்கில் பணம் பறிபோய்விட்டதோ என்ற பதற்றத்தில் தகவலை சரிபார்க்காமல், 'நோ' என பதில் அனுப்பினால், அந்தச் செய்தியில் மறைந்திருக்கும் மென்பொருள் செயல்பட தொடங்கும். இதன் மூலம் அந்த தகவலை அனுப்பிய மோசடி நபர்கள் உங்கள் மொபைல் போனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வங்கி கணக்கிலுள்ள பணத்தை மொத்தமாக திருடுகின்றனர்.

ஹைதராபாத் மற்றும் லக்னோ போன்ற நகரங்களில், சில நபர்கள் எந்தவொரு லிங்க்கையும் (Link) கிளிக் செய்யாமல் அல்லது OTP-ஐப் பகிராமல், இந்த மோசடி மூலம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சைபர் கிரைம் போலீசாரின் எச்சரிக்கையின்படி, இந்த மோசடி எவ்வாறு நடக்கிறது மற்றும் இதிலிருந்து எப்படித் தப்புவது என்பது குறித்த முழு விவரங்கள் இதோ:

வாட்ஸ்அப் மோசடி எப்படி நடக்கிறது? (Scam Mechanism) :

உங்களுக்குத் தெரியாத ஏதேனும் ஒரு புதிய எண்ணிலிருந்து (பெரும்பாலும் சர்வதேச எண்கள்) வாட்ஸ்அப் மெசேஜ் வரும். அதில், "உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 50,000 (அல்லது ஒரு குறிப்பிட்ட தொகை) எடுக்கப்பட்டுவிட்டது" என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதற்கு அடுத்ததாக, "இந்தப் பரிவர்த்தனையை நீங்கள் செய்யவில்லை என்றால், உடனடியாக 'NO' என்று பதில் அனுப்பவும்" என்ற மெசேஜ் அல்லது ஒரு Poll (வாக்கெடுப்பு) ஆப்ஷன் வரும்.

நமது கணக்கில் இருந்து பணம் போய்விட்டதோ என்ற பதற்றத்தில் நாம் உண்மை நிலையை ஆராயாமல் உடனடியாக 'NO' எனப் பதில் அனுப்பும்போது, அந்த மெசேஜின் பின்னணியில் மறைந்திருக்கும் மால்வேர் ஸ்கிரிப்ட்கள் (Auto Execution File Attack) செயல்படத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது.

மேலும் நீங்கள் 'NO' என்று பதிலளித்தவுடன், அந்த மொபைல் எண் பயன்பாட்டில் இருப்பதையும், அந்த நபர் பதற்றமடைந்துள்ளார் என்பதையும் மோசடியாளர்கள் உறுதிசெய்கிறார்கள்.

நீங்கள் பதிலளித்த பிறகு, மோசடி செய்பவர்கள் உங்களைத் தொடர்புகொண்டு வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி போலப் பேசுவார்கள். அல்லது, "பரிவர்த்தனையை ரத்து செய்ய இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்" என்றோ, "இந்த APK ஃபைலை டவுன்லோட் செய்யவும்" என்றோ அடுத்த மெசேஜ்களை அனுப்புவார்கள்.

போன் ஹேக்
போன் ஹேக்AI image

அவர்கள் அனுப்பும் போலி லிங்க் அல்லது செயலிகளை (Malicious Apps) நீங்கள் தெரியாமல் கிளிக் செய்யும் போதுதான், உங்களது OTP, வங்கி விவரங்கள் அல்லது மொபைலின் கட்டுப்பாடு திருடப்பட்டு பணம் பறிபோகிறது.

இந்த முறையில் தான் ஹேக்கர்கள் உங்கள் மொபைலின் கட்டுப்பாட்டைப் பெற்று, வங்கி விவரங்களைத் திருடுவதாகப் போலீசார் எச்சரிக்கின்றனர்.

உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டதாக வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்தால் முதலில் பதறாதீர்கள்.

முன்பின் தெரியாத எண்களில் இருந்து வரும் இது போன்ற மெசேஜ்களுக்கும் அல்லது வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான மெசேஜ்களுக்கும் 'YES' அல்லது 'NO' என எந்தப் பதிலும் அனுப்பாமல் தவிர்ப்பது நல்லது.

மெசேஜ்களுடன் வரும் எந்தவொரு லிங்க் (Links) அல்லது சந்தேகத்திற்குரிய ஃபைல்களை (Attachments/APK files) கிளிக் செய்யவோ, பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம்.

உங்கள் வங்கியின் ரகசியக் குறியீடுகள் (PIN), கடவுச்சொல் (Password), அல்லது OTP எண்களை யாருடனும் பகிரக் கூடாது.

இதையும் படியுங்கள்:
Active ஆக இல்லாத வங்கிக் கணக்கில் இருக்கும் பணம்... உடனே உங்க கைக்கு!
வாட்ஸ்அப் மோசடி

உடனடியாக உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் (Official Bank App) அல்லது நெட் பேங்கிங் மூலம் கணக்கு இருப்பைச் (Statement) சரிபார்க்கவும்.

உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் இருந்தால், உடனே வங்கியின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் (Official Netbanking App) அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு சரிபார்க்கவும்.

அதுபோன்ற சந்தேகத்திற்கிடமான எண்களை உடனே Block மற்றும் Report செய்துவிட்டு, அந்த சாட்டை (Chat) டெலிட் செய்துவிடுங்கள்.

ஒருவேளை நீங்கள் துரதிர்ஷ்டவசமாக இத்தகைய மோசடியில் சிக்கி பணத்தை இழந்திருந்தால், தாமதிக்காமல் உடனடியாக இந்தியாவின் தேசிய சைபர் குற்ற உதவி எண்ணான 1930 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். அல்லது, மத்திய அரசின் சைபர் குற்றப் புகார் இணையதளத்தில் (cybercrime.gov.in) ஆன்லைன் மூலமாகவும் உடனே புகார் பதிவு செய்யலாம்.

வெறும் 'NO' என்று அனுப்புவதால் மட்டுமே ஒரு போன் ஹேக் ஆகிவிடுமா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களிடையே இன்னும் முழுமையான மற்றும் உறுதியான தொழில்நுட்ப ஆதாரங்கள் இல்லை என்றாலும், பாதுகாப்பு கருதி எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இவைதான்!
வாட்ஸ்அப் மோசடி

எனவே, இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தக் கூடாது. அதே நேரத்தில், ஒரு சாதாரண வாட்ஸ்அப் பதில் அனுப்பியாலே போன் ஹேக் ஆகிவிடும் என்றும் உறுதியாகக் கூற முடியாது.